Published : 24 Apr 2015 04:12 PM
Last Updated : 24 Apr 2015 04:12 PM
உடுமலை நகராட்சிக்குச் சொந்தமான 170 கடைகள் பொது ஏலத்தில் விடப்பட்டதில், 6 கோடி ரூபாய் வருவாய் அதிகரித்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் பிற நகராட்சிகளை ஒப்பிடுகையில், வருவாயை பெருக்கும் வகையினங்களில் அதிக கடைகளை கொண்ட நகராட்சியாக உடுமலை உள்ளது. இங்குள்ள 280-க்கும் மேற்பட்ட கடைகள் 9 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏலம் விடவும்; 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை 15 சதவீத வாடகையை உயர்த்தவும் நிபந்தனைகள் உள்ளன. ஆனால், பொது ஏல முறையை எதிர்த்து சிலர் நீதிமன்றத்தை அணுகியதால், 25 ஆண்டுகளுக்கும் மேலாக கடைகள் ஏலம் விடப்படவில்லை.
இந்நிலையில் கடையை ஏலம் எடுத்திருந்த ஒப்பந்ததாரர்கள், விதிகளுக்கு புறம்பாக அதிக தொகைக்கு உள்வாடகைக்கு விட்டு, சுயலாபம் அடைந்து வருவதாக குற்றச்சாட்டு நிலவி வந்தது.
கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி ‘தி இந்து’ நாளிதழில் இது தொடர்பான செய்தி பிரசுரிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, கடந்த 1-ம் தேதி நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில், ஏப்ரல் 21-ம் தேதி, கடைகளுக்கு பொது ஏலம் விட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி உடுமலை நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் கே.சரவணக்குமார் தலைமையில் ஏலம் நடைபெற்றது.
இதில், அதிகமானோர் பங்கேற்றனர். அதனால் ஏலம் விடப்படும் கடைகளின் விவரம், கடை எண்களுடன் வரைபடங்களாக ஒட்டப்பட்டன. ஏல நடவடிக்கைகள் முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டதுடன், அகன்ற திரையில் ஒளிபரப்பும் செய்யப்பட்டது.
ஏலம் முடிந்தபின் நகராட்சி அலுவலர் ஒருவர் கூறும்போது, ‘உடுமலை குட்டைத்திடல், சத்திரம் வீதி, ராஜேந்திரா சாலை, பழனிப்பாதை, மினிமார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் உள்ள 170 கடைகளுக்கு மட்டும் ஏலம் நடைபெற்றது. இக்கடைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.30 லட்சம் மட்டுமே, இதுவரை வருவாயாக கிடைத்து வந்தது.
ஏலத்துக்குப் பிறகு, வைப்புத்தொகை ரூ.3.30 கோடியாகவும், 12 மாத வாடகைத் தொகை வகையில் ரூ.3 கோடி என மொத்தம் ரூ.6.30 கோடி வைப்புத் தொகை வகையில், வருவாய் கிடைக்கப் பெற்றுள்ளது. வாடகையாக ஆண்டுதோறும் ரூ.3 கோடி கிடைக்கும். உடுமலை நகராட்சி கடைகளுக்கான ஏலத்துக்கு தடை கோரி சிலர் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதால், திட்டமிட்டபடி ஏலம் நடந்தது’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT