Published : 25 May 2014 11:54 AM
Last Updated : 25 May 2014 11:54 AM
புதுக்கோட்டை அருகே சித்தன்னவாசல் சுற்றுலாத் தலத்தில் புதுக்கோட்டையின் வரலாற்றை அறிந்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்ட சிறுகல் பூங்கா மெல்லமெல்ல பொலிவிழந்து வருகிறது. இச்சிற்பங்களைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் சுற்றுலாத் தலத்தில் தொல்லியல் துறையின் கண்காணிப்பில் சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய கல்ல றைகள், முதுமக்கள் தாழிகள், தமிழ் பிராமிக் கல்வெட்டுகள், சமணர் படுக்கைகள், உலகப் புகழ் பெற்ற ஓவியங்களை உள்ளடக்கிய குகைக்கோயில் ஆகியன தொன்மை சிறப்பை பறைசாற்றுகின்றன.
சுற்றுலாத் தலத்தை மேம் படுத்தும் வகையில் தொல்லியல் துறையின் கண்காணிப்புக்கு அப்பாற்பட்ட பகுதிகளில் ரூ.3.5 கோடியில் 2010-ல் வேலி அமைத்தல், இசை நீரூற்று, படகுக் குழாம், திறந்தவெளி அரங்கம், குடிநீர் வசதி, கழிப்பறைகள், மின் வசதி போன்ற மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகம்…
இதையடுத்து தற்போதைய மாநில அரசு ரூ.2.55 கோடியில் சிறுகல் பூங்கா, நுழைவாயில், இயற்பியல் தத்துவப் பூங்கா, இசை நீரூற்று சீரமைப்பு, தமிழன்னை சிலை ஆகியன அமைக்கப்பட்டு 2014 ஜன.5-ம் தேதி மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இதனால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சுற்றுலாப் பயணிகள் சித்தன்னவாசலுக்கு வந்து செல்வதை காணமுடிகிறது.
இதில் ரூ.16 லட்சத்தில் சுனை யுடன் கூடிய பாறைப்பகுதியில் இரும்பு வேலி அமைக்கப்பட்டு அதில் புதுக்கோட்டை மாவட்டத் தின் வரலாற்றை தெரிந்து கொள்ளும் வகையில் கல்லில் செதுக்கப்பட்ட 21 சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன.
விளக்கத்துடன் கல் சிற்பங்கள்…
புதுக்கோட்டை அருகே பறம்பு மலையை ஆண்ட முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி, குகையில் முனிவர்கள் தவம் செய்தல், புதுக்கோட்டையின் சங்க காலப் புலவர்கள், கோவலன் கண்ணகி யுடன் கொடும்பாளூர் வழியாக மதுரை செல்லுதல், சித்தன்ன வாசலில் குடைவரைக் கோயில் உருவாக்குதல், போரில் வீரமர ணம் அடைந்த வீரனுக்கு நடுகல் வைத்தல், கடற்கரையோரங்களில் குதிரை வாணிபம் செய்தல், கோயில் கட்டிய மாணிக்க வாசகரைக் காப்பாற்ற நரிகளை குதிரைகளாக்கிய சிவபெருமான், மாணிக்கவாசகருக்கு சிவபெரு மான் உபதேசம், விஜயாலய சோழீசுவரம் கோயில், புதுக் கோட்டை புதிய அரண்மனை (ஆட்சியரகம்) என 21 கல்லில் சிற்பங்களாக செதுக்கப்பட்டு பீடம் அமைத்து தனித்தனி யாக ஓரிரு வரிகளில் அதற் கான விளக்கத்துடன் வைக்கப் பட்டுள்ளன.
நடுவில் தண்ணீர் நிரம்பியுள்ள சுனையில் தாமரை மலர்கள் மலர்ந்திருக்க அதைச் சுற்றிலும் அமைக்கப்பட்ட இந்த கல் சிற்பங்கள் மாவட்டத்தின் சிறப்பு களை அறிந்துகொள்ள உதவியாக இருப்பதாக பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் திறப்பு விழா நாளில் பொலிவுடன் காணப் பட்ட இப்பூங்கா தொடர்ந்து வெயிலிலேயே இருப்பதாலோ என்னவோ கடந்த 5 மாதங் களிலேயே அனைத்து சிற்பங்களும் சிதைந்து மங்கிவருவதாக பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
தொடர்ந்து பராமரிக்க ஆலோசனை…
இதுகுறித்து அரசு அருங்காட்சி யக உதவி இயக்குநர்(ஓய்வு) ஜெ.ராஜாமுகமது கூறும்போது, “மொத்த உருவங்களும் சிறிய கல்லில் வடிக்கப்பட்டுள்ளதால் உருவங்கள் மிகச்சிறியதாக இருக்கும். ஆகையால், உருவங் கள் சிறிதாக இருந்தாலும் அவை தெளிவாக தெரியவேண்டு மென்பதற்காக அதன் மீது ஒரு விதமான எண்ணெய் தோய்க் கப்பட்டிருந்ததைப் பார்த்தேன். அதனால்கூட பொலிவிழந்திருக்க வாய்ப்பு உள்ளது. சிற்பங்களைத் தொடர்ந்து பராமரித்து பாதுகாக்க சம்பந்தப்பட்ட துறையினருக்கு ஆலோசனை கூறப்படும்” என்றார்.
இந்த சுற்றுலாத் தலத்தில் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த ஓவியங்கள்கூட நிலைத்திருக்கும் நிலையில், நிறுவி 5 மாதங்களில் சிற்பங்கள் சிதைந்துவருவது குறித்து சுற்றுலாப் பயணிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். ஆகையால், பதிவு செய்யப்பட்ட வரலாறு நிலைத்திருக்க இதை கண்காணித்து வரும் அன்ன வாசல் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு சிற்பங்களைப் பாதுகாக்க தொடக்கத்திலேயே நடவடிக்கை எடுக்க வேண்டுமென பார்வையாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT