Published : 03 Apr 2015 01:27 PM
Last Updated : 03 Apr 2015 01:27 PM
தமிழக மீனவர்களின் கோரிக்கை இலங்கை அதிபர் நிரகரித்தது கண்டனத்துக்குரியது என தமாகா கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் நடந்த தமாகா கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் காசிலிங்கம் மகள் திருமணத்தில் பங்கேற்ற, தமாகா தலைவர் ஜிகேவாசன் செய்தியாளர்களிடம் பேசியபோது, "இந்திய - இலங்கை மீனவர்கள் 3-வது கட்ட பேச்சு வார்த்தையில், இலங்கை கடல் பகுதியில் ஆண்டிற்கு 83 நாட்கள் மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழக மீனவர்களின் நியாயமான கோரிக்கையை இலங்கை அதிபர் சிறிசேனா நிரகரித்துள்ளார். இது கண்டனத்துக்குரியது. இதில் பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வர் ஆகியோர் கண்டிப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் ஆதாயத்திற்காக பேசுவதாக, மத்திய அமைச்சர் சதானந்தகவுடா கூறியிருப்பது ஏற்புடையது அல்ல. எனவே பிரதமர், அமைச்சரை கண்டிக்க வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் சில இடங்களில் மட்டும் சுங்கம் வசூலிப்பதை நீக்கிவிட்டு, பெரும்பாலான இடங்களில் சுங்க கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். இதனால் ஏற்கனவே விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே தற்போது உயர்த்தியுள்ள சுங்க கட்டணத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியை இடமாற்றம் செய்திட வேண்டும். உயர்த்தப்பட்டுள்ள ரயில்வே பிளாட்பாரம் கட்டணத்தை உடனடியாக குறைக்க வேண்டும்" என்றார்.
கண்டனம்:
காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி குறித்து, பாஜகவைச் சோந்த அமைச்சர் கிரிராஜ்சிங், தெரிவித்த கருத்து கண்டனத்திற்குரியது.
கிடப்பில் போடப்பட்டுள்ள கிருஷ்ணகிரி - திருவண்ணமலை சாலையை பணிகள் தொடங்கிட வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி, ரயில்வே திட்டம் ஆகியவை காலம் தாழ்த்தாமல் கொண்டுவர வேண்டும்.
விவசாயிகளின் எண்ணங்களை 100 சதவீதம் பிரதிபலிக்கும் வகையில் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை மாற்றி கொண்டுவர வேண்டும். அப்போது தான் பெரும்பாலான கட்சிகள் ஆதாரவளிக்கும். தமிழகத்தின் பட்ஜெட் வரியில்லாத பட்ஜெட் என்றாலும் கூட, வளர்ச்சி இல்லாத பட்ஜெட்டாகவே கருத்துப்படுகிறது.
தேர்வு குற்றங்களை தடுக்க நடவடிக்கை:
வாட்ஸ் அப்பில் கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் இருந்து கல்வியின் தரம் குறையும் வகையில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவது தெளிவாகி உள்ளது. இதனை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் நடைபெறும் இந்த பொதுக்குழுவிற்கு பின் 10 நாட்களுக்குள் தமாகா நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின் போது முன்னாள் எம்எல்ஏ.க்கள் வேலூர் ஞானசேகரன், அன்பழகன், முன்னாள் எம்பி தீர்த்தராமன், நகர்மன்ற முன்னாள் தலைவர்கள் சத்தியமூர்த்தி, தசரதன்(எ)மனோகரன் மற்றும் நிர்வாகிகள் ஜெயபிரகாஷ், கார்த்திகேயன், லலித்ஆண்டனி, சரவணன், பழனி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT