Last Updated : 02 May, 2014 09:08 AM

 

Published : 02 May 2014 09:08 AM
Last Updated : 02 May 2014 09:08 AM

வெடித்தது குண்டு.. தகர்ந்தது கனவு..

ஏதொரு பாவமும் செய்யாமல் பலவிதமான ஆசைகளோடும் கனவுகளோடும் லட்சியங்களோடும் ரயிலேறிய ஸ்வாதி பருசூரி (23) குண்டுவெடிப்பில் அநியாயமாக பலியானார்.

புதன்கிழமை இரவு 10.45 மணிக்கு பெங்களூரில் இருந்து சென்னை வழியாக விஜயவாடா விற்கு பயணமான ஸ்வாதி வியாழக்கிழமை காலை சென்னை ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்புக்கு பலியானார். மகளுக் காக விஜயவாடா ரயில் நிலை யத்தில் காத்திருந்த தந்தை ராமகிருஷ் ணனுக்கு காலை 10.30 மணிக்கு அவளின் மரணம் அறிவிக்கப்பட்டது.

பெங்களூரில் ஸ்வாதியுடன் வேலை செய்தவர்கள், தங்கியிருந் தவர்கள் அனைவரும் கதறி அழுது கொண்டிருந்தவேளையில் சந்தித் தேன்.

படிப்பில் சுட்டி

ஆந்திர மாநிலம் குண்டூர் அருகேயுள்ள ஜகர்லா முடியை சேர்ந்த விவசாயியான பருசூரி ராமகிருஷ்ணா,காமாட்சியின் மூத்த மகள் ஸ்வாதி பருசூரி(23). இவரது தங்கை ப்ரதியூமா மும்பையில் ஐஐடியில் பொறியியல் படித்து வருகிறார். மகள்களின் படிப்பிற்காக கிராமத்தைவிட்டு தற்போது குண்டூரில் உள்ள நகரில் ராமகிருஷ்ணன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

சொந்த ஊரில் பள்ளிப்படிப்பை முடித்த ஸ்வாதி, மேல்நிலை படிப்பை குண்டூரில் உள்ள செயிண்ட் ஆன்ஸ் கல்லூரியில் படித்தார். பள்ளி இறுதியாண்டில் 91 சதவீத மதிப்பெண்களுடன் தேர்வானார். இதனால் அரசு ஊக்கத்தொகைப் பெற்று ஹைதராபாதில் உள்ள ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பி.டெக். சேர்ந்தார்.

ஓவியம், கவிதை, புகைப்படக் கலை என பலத் திறமைகளைக் கொண்ட ஸ்வாதி படிப்பிலும் படுசுட்டி. பல்கலைக்கழக அளவில் பி.டெக். படிப்பில் அதிக மதிப்பெண்களுடன் தேர்வாகி அங்கேயே எம்.டெக். படிக்க வாய்ப்பு கிடைத்தது. அதிக மதிப்பெண்களுடன் ஸ்வாதி வலம் வந்ததால் கேம்பஸ் இண்டர்வியூ மூலமாக பெங்களூரில் வேலை கிடைத்தது.

வேதனையில் நண்பர்கள்

‘அவ்வளவாக அறிமுகமில்லாத பெங்களூருக்கு போக வேண்டாம்' என அவரது பெற்றோர் எவ்வளவோ வலியுறுத்தினர். ஆனால் ஸ்வாதி ‘இது முதல் வேலை' என்பதால் ஆசையோடு பெங்களூர் டி.சி.எஸ். (டாடா கன்சல்டிங் சர்வீஸ்) என்கிற தனியார் நிறுவனத்தில் கடந்த டிசம்பர் மாதம் பணியில் சேர்ந்தார்.

அலுவலகத்தில் மிகவும் அமைதியாகவும் அடக்கமாகவும் காணப்பட்ட‌ ஸ்வாதி வேலையில் மட்டும் மிக வேகமாக செயல் பட்டிருக்கிறார். இதனாலே அவரது இறப்பு செய்தி கேட்டு உடன் பணியாற்றியோர், நண்பர்கள் விடுமுறை நாளையும் (மே-1) பொருட்படுத்தாமல் அலுவலகத்தின் முன் திரண்டு மெழுகுவர்த்தி அஞ்சலி செலுத்தினர்.

“எங்களோடு பணியாற்றிய ஸ்வாதிக்கு இப்படியொரு முடிவா..? நினைத்தாலே நெஞ்ச மெல்லாம் வலிக்கிறது. அவரது பெற்றோருக்கும் குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும் எப்படி ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை'' என வேதனையுடன் சோகத்தை பகிர்ந்துகொண்டார் டி.சி.எஸ்.நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டாளர் ஹர்ஷா ராமசந்திரா.

பெங்களூரில் ஆயிரம் வேலை இருந்தாலும் மாதத்திற்கொரு முறை பெற்றோரை பார்க்க தவறாமல் ஸ்வாதி ஊருக்கு போய் விடுவார். ஒவ்வொரு முறையும் தற்போது பயணித்த அதே குவாஹாட்டி ரயிலில்தான் போவார். இந்த முறை அவர் ஊருக்கு போவதை முன்கூட்டியே திட்டமிடவில்லை.

கடைசி நேரத்தில் மே 1 உழைப்பாளர் தினம், மே 2 பசவண்ணர் ஜெயந்தி என கர்நாடகாவில் தொடர்ச்சியாக அரசு விடுமுறை நாட்கள் என்பதால் 4 நாட்கள் விடுமுறை கிடைத்தது. எனவே கடைசி நேரத்தில் ரயிலில் டிக்கெட் ரிசர்வ் செய்யமுடியவில்லை. எனவே புதன்கிழமை காலை தட்கலில் டிக்கெட் பதிவு செய்தார்.

“ரயிலுக்கு கிளம்பும் போதும்கூட விடுதியிலே ரொம்ப காலதாமதம் ஆகிவிட்டது. எனவே பெங்களூர் சிட்டி ரயில் நிலையத்திற்கு சென்றால் ரயிலை பிடிக்க முடியாது என்பதால் பெங்களூர் கண்ட்டோன்மண்ட் ரயில் நிலையத்திற்கு ஆட்டோவில் வேகமாக‌ சென்றார். தான் இறக்கப் போகும் ரயிலை இவ்வளவு விரட்டி பிடிப்பார் என தெரிந்திருந்தால் அந்த பொண்ணை எப்படியும் தடுத்திருப்பேன் தம்பி'' என ஸ்வாதி தங்கியிருந்த  ராம் சாய் விடுதியின் காப்பாளர் கோவிந்தராஜ் சோக‌த்துடன் தெரிவித்தார்.

காத்திருந்த குடும்பம்

'ரயிலில் ஏறியவுடன் தன்னுடைய அப்பா ராமகிருஷ்ணனுக்கு ஸ்வாதி தகவல் கொடுத்தார். இதனால் வியாழக்கிழமை காலை 10 மணிக்கெல்லாம் ரயில் நிலையத்திற்கு வந்து ராமகிருஷ்ணன் காத்திருந்தார். ஆனால் காலையிலே சென்னை ரயில் நிலையத்திலே ஸ்வாதி..' என நெஞ்சை அடித்துகொண்டே கதறுகிறார் அவரின் பாட்டி ராஜ்யலட்சுமி.

‘எங்க குடும்பத்தின் மொத்த நம்பிக்கையும் அவள்தான். குடும்பத்துக்கே குலவிளக்கா இருந்து சம்பாதித்து கொடுத்தாள். போன ஜனவரி மாசம் முதல் சம்பளம் வாங்கின உடனே எனக்கு செல்போன் வாங்கி கொடுத்தாள். அதுல தினமும் ராத்திரியில பேசிட்டு தான் தூங்குவாள். ஸ்வாதிக்கு பிடிச்ச சாப்பாடு எல்லாம் செஞ்சி வைத்திருந்தேன். இப்படி பாதியிலே விட்டுட்டு போயிட்டாள். அந்த கடவுள் ஸ்வாதியை எடுத்ததற்கு பதிலாக என்னையை எடுத்திருக்க கூடாதா?' என ஸ்வாதியின் பாட்டி ராஜ்ய‌லட்சுமி சிந்திய கண்ணீர் தொலைபேசியை தாண்டியும் தெறித்தது. ‘என் பேத்தி வாயில்லாத பூச்சி. ஈ எறும்புக்கு கூட துரோகம் செஞ்சதில்ல. அவளை கொல்ல எப்படிதான் மனசு வந்துச்சோ?' என அவருடைய வார்த்தைகள் ஈட்டியாய் குத்தின.

3 மாதத்தில் திருமணம்

குண்டுவெடிப்பில் பலியான ஸ்வாதிக்கு இன்னும் இரண்டு மாதங்களில் திருமணம் என கூறப்படுகிறது. அதுபற்றி விசாரித்தபோது, ‘ஹைதராபாதில் ஸ்வாதி கல்லூரியில் படித்தபோது அவளுடைய நண்பரோடு காதல் மலர்ந்தது. இருப்பினும் ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில மூத்த மகளாகப் பிறந்ததால் குடும்ப பொறுப்புகள் காரணமாக திருமணத்தை தள்ளிப் போட்டார்.

தன்னுடைய காதலை பெற்றோரிடமும் எடுத்துச் சொல்லி ஸ்வாதி சம்மதம் வாங்கியிருந்தார். எனவே இன்னும் 3 அல்லது 4 மாதங்களில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருந்தார் '' என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x