Published : 02 Apr 2015 08:10 AM
Last Updated : 02 Apr 2015 08:10 AM

தமிழக அரசின் மொத்த கடன் ரூ. 4 லட்சம் கோடியா? - ராமதாஸ் விளக்கமளிக்க முதல்வர் வலியுறுத்தல்

தமிழக அரசின் கடன் ரூ.4 லட்சம் கோடி என்று குறிப்பிட்டிருப்பது தொடர்பாக பாமக நிறுவனர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

சட்டப்பேரவையில் பட்ஜெட் விவாதத்துக்கான பதிலுரையின் போது பன்னீர்செல்வம் பேசிய தாவது:

பொருளாதார வளர்ச்சியைப் பற்றி சிலர் விமர்சனம் செய்துள்ள னர். குறிப்பாக திமுககூட பொரு ளாதார வளர்ச்சியைப் பற்றி பேசுகிறது. ஏதோ திமுக ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருந்தது போலவும், இந்த ஆட்சியில் அது குறைந்துவிட்டது போலவும் ஒரு உண்மைக்கு மாறான தகவலை அடிக்கடி கூறி வருகின்றனர்.

இந்த ஆட்சியில், 2012-13-ல் மட்டும் வறட்சி காரணமாக பொருளாதார வளர்ச்சி சற்று குறைந்தது. அரசின் சிறப்பான நிர்வாக செயல்பாடுகளால், இது உடனடியாக சீர்செய்யப்பட்டு 2013-14-ல் தமிழக பொருளாதார வளர்ச்சி 7.29 சதவீதமாகவும், 2014-15-ல் 7.25 சதவீதமாகவும் உள்ளது. இது, நாட்டின் சராசரி வளர்ச்சியைவிட அதிகம். ஆனால், திமுக ஆட்சியில் 2007-08-ல் மொத்த வளர்ச்சி 6.13 சதவீதம்தான். அதுவும் 2008-09-ல் குறைந்து, 5.45 சதவீதமாக இருந்தது.

தமிழகத்தின் நிதிநிலை சீர்குலைந்துவிட்டது. அரசு நெருக்கடியில் சிக்குண்டுவிட்டது. கடன்களில் மூழ்கி திவாலாகும் கட்டத்தை எட்டிவிட்டது என்றெல்லாம் சிலர் அறிக்கை விட்டு வருகின்றனர். இது அவர்களது பகல் கனவின் பிரதிபலிப்பாகவே உள்ளது.

உறுப்பினர் கணேஷ் குமார் (பாமக) பேசும்போது அரசு மற்றும் அரசு நிறுவனங்களின் கடன் பற்றி கேட்டார். அரசு கடன் 2014-15 நிதியாண்டின் இறுதியில் ரூ.1.81 லட்சம் கோடி. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், நிதி நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய கடன் ரூ.73 ஆயிரத்து 708 கோடி. போக்குவரத்துக் கழகங்கள் நிதி நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய கடன் ரூ.2 ஆயிரத்து 84 கோடி. இவற்றுடன் பிற அரசுத் துறை நிறுவனங்கள் நிதி நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய கடனைச் சேர்ந்தாலும் மொத்தம் ரூ.2 லட்சத்து 64 ஆயிரத்து 701 கோடிதான் வருகிறது.

எங்கிருந்து ரூ.4 லட்சம் கோடி என கணக்கிட்டார்கள் என்பதை உறுப்பினர் கணேஷ்குமாரும், அவர் சார்ந்த இயக்கத்தின் தலைவரும் (ராமதாஸ்) விளக்க வேண்டும். ஏதோ அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக மனம்போன போக்கில் அறிக்கை விடுவதும், பேசுவதும் இவர்களின் அறியாமையையே வெளிப்படுத்துகிறது.

மானியங்கள், உதவித் தொகை

மானியங்கள், உதவித் தொகைகளுக்கு ரூ.59,185 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதை சிலர் குறை கூறுகின்றனர். ஒருபக்கம் சமூக நீதி பற்றி பேசிவிட்டு, மறுபுறம் விலையில்லாமல் ஏழைகளுக்கு வழங்கப்படும் உதவிகள் எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக எதிர்க்கிறோம் என்று கூறும் தலைவர்கள் பற்றி என்னவென்று கூறுவது?

இவ்வாறு முதல்வர் பன்னீர்செல்வம் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x