Published : 21 Mar 2015 08:55 AM
Last Updated : 21 Mar 2015 08:55 AM
தமிழை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என மாநிலங்களவையில் குரல் எழுப்பிய பாஜக எம்.பி. தருண் விஜய்க்கு காரைக்குடி கம்பன் கழகம் ‘அருந்தமிழ் ஆர்வலர்’ விருது வழங்கவுள்ளது.
ஜனவரி 11-ம் தேதி கன்னியாகுமரியில் திருக்குறள் பயணம் தொடங்கிய தருண் விஜய் எம்.பி., தமிழகத்தில் உள்ள தமிழ் புலவர்கள், கவிஞர்கள், வீரமறவர்கள் உள்ளிட்டோரின் நினைவிடங்களுக்குச் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஜனவரி 13-ல் சிவகங்கை மாவட்டத்துக்கு வருகை தந்த அவர், நாட்டரசன்கோட்டையில் உள்ள கம்பர் சமாதி, ஒக்கூர் மாசாத்தியார் நினைவிடம், திருப்பத்தூரில் மருதுபாண்டியர் நினைவிடம், மற்றும் மகிபாலன்பட்டியில் கணியன் பூங்குன்றனார் நினைவிடம் ஆகிய இடங்களிலும் வேலு நாச்சியார் சிலைக்கும் மரியாதை செலுத்தினார். பின்னர் சிறுகூடல்பட்டியில் உள்ள கவிஞர் கண்ணதாசன் பிறந்த வீட்டையும் பார்வையிட்டுச் சென்றார்.
இந்த நிலையில், காரைக்குடி கம்பன் கழகத்தின் 77-வது ஆண்டு கம்பன் விழா காரைக்குடியில் ஏப்ரல் முதல் தேதி தொடங்கி நான்கு நாட்கள் நடைபெறுகிறது. இதில் தருண் விஜய்க்கு, ‘அருந்தமிழ் ஆர்வலர்’என்ற விருதை காரைக்குடி கம்பன் கழகம் வழங்கி கவுரவிக்கவுள்ளது.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் காரைக்குடி கம்பன் கழக செயலாளர் பழ.பழனியப்பன் கூறியதாவது: வட இந்தியராக இருந்த போதும் தமிழ்மொழி மீதும் தமிழுக்கு அணி சேர்க்கும் உலக பொதுமறையாம் திருக்குறள் மீதும் மிகுந்த மரியாதையும் பற்றுதலும் கொண்டிருக்கிறார் தருண் விஜய். அவரை கவுரவிக்க வேண்டியது நமது கடமை.
இந்த நிலையில் கம்பன் விழாவை தொடங்கி வைக்க வரும் தருண் விஜய்க்கு ‘அருந்தமிழ் ஆர்வலர்’என்ற விருது வழங்கி கவுரவிக்க கம்பன் கழகம் முடிவு செய்துள்ளது. இவ்வாறு பழ.பழனியப்பன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT