Published : 11 Mar 2015 08:05 AM
Last Updated : 11 Mar 2015 08:05 AM

சென்னையில் பரபரப்பு சம்பவம்: காதலியைக் கொன்று மூட்டை கட்டிய தனியார் வங்கி அதிகாரி தப்பி ஓட்டம் - தலைமறைவானவரை தேட 2 தனிப் படைகள்

காதலியை வீட்டுக்கு வரவழைத்த காதலன் அவரைத் தாக்கி கொலை செய்தார். உடலை மூட்டை கட்டி காரில் ஏற்றும்போது கூட்டம் கூடியதால் தப்பி ஓடினார். தனியார் வங்கியில் அதிகாரியாக வேலை பார்க்கும் அவரை 2 தனிப் படைகள் தேடிவருகின்றன.

சென்னை கீழ்ப்பாக்கம் தலைமைச் செயலக காலனி பராக்கா சாலையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர் கண்ணப்பன் (62). மத்திய அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். உடல்நலம் சரியில்லாததால் மருத்துவமனையில் உள்ளார். மனைவி ஜமுனா உடனிருந்து கவனித்துவருகிறார். இவர்களது மகன் தினேஷ் (25). அம்பத்தூரில் தனியார் வங்கியில் அதிகாரியாக வேலை செய்கிறார். வீட்டில் இவர் மட்டும் இருந்தார்.

நேற்று முன்தினம் இரவு 10.30 மணி அளவில் போர்வை, மெத்தையால் சுற்றப்பட்ட மூட்டை ஒன்றை லிப்ட் மூலம் இறக்கி கீழே கொண்டுவந்தார் தினேஷ். அதை தனது காரில் ஏற்ற முயற்சித்தார். பாரம் அதிகம் இருந்ததால் அவரால் தூக்க முடியவில்லை. இதனால் பக்கத்து குடியிருப்பு காவலாளியை உதவிக்கு அழைத்தார். அப்பாவுக்கு தேவைப்படும் பெட்ஷீட், துணிகளை மருத்துவமனைக்கு கொண்டுசெல்வதாக அவரிடம் கூறினார்.

மூட்டையில் இருந்து வந்த கை

பின்னர், இருவரும் சேர்ந்து மூட்டையைத் தூக்கி காரின் பின் சீட்டில் வைத்தனர். அப்போது, மூட்டை திடீரென திறந்துகொண்டு ஒரு கை மட்டும் வெளியே வந்தது. பீதியடைந்த காவலாளி கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் ஓடிவந்தனர். கூட்டம் கூடுவதை அறிந்த தினேஷ், உடனே அங்கிருந்து நழுவி, தனது பைக்கில் ஏறித் தப்பினார்.

இதுகுறித்து தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆய்வாளர் ராமசாமி தலைமையில் வந்த போலீஸார், காரில் இருந்த மூட்டையைப் பிரித்தனர். அதில் ஒரு இளம்பெண் உடல் சுற்றி வைக்கப்பட்டிருந்தது. உள்ளே ரத்தம் உறைந்திருந்தது. இதையடுத்து, உடலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பினர். கொல்லப்பட்ட பெண் யார் என்ற விவரம் தெரியவில்லை.

இதற்கிடையில், சூளை சட்டநாயக்கர் தெருவை சேர்ந்த சீனிவாசன் என்பவர் தன் மகள் அருணாவைக் காணவில்லை என்று வேப்பேரி காவல் நிலையத்தில் இரவு 11 மணி அளவில் புகார் செய்தார். தலைமைச் செயலக காலனியில் கொல்லப்பட்ட பெண்ணின் உடலை பார்த்துவருவதற்காக அவர்களை கீழ்ப்பாக்கம் மருத்துவ மனைக்கு போலீஸார் அனுப்பினர். பதறியடித்துக்கொண்டு அங்கு சென்ற அவர்கள், பெண்ணின் உடலைப் பார்த்ததும் கதறி அழுதனர். அது தங்கள் மகள் அருணாதான் என்பதை உறுதி செய்தனர்.

முதல்கட்ட விசாரணையில் தெரியவந்த தகவல்கள் குறித்து போலீஸார் கூறிய தாவது: தினேஷும் அருணாவும் காதலித்து வந்தனர். தினேஷ் நேற்று முன்தினம் மாலை அருணாவுக்கு போன் செய்து, தன் வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். ஸ்கூட்டரில் அருணா அங்கு சென்றுள்ளார். தினேஷின் வீட்டில் இருவரும் 3 மணி நேரத்துக்கு மேல் இருந்துள்ளனர். இரவில் ஏதோ பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் மோதலும் நடந்திருக்கிறது. வீட்டில் இருந்த கண்ணாடி பூந்தொட்டியை எடுத்து அருணாவின் தலையில் தினேஷ் அடித்திருக்கிறார். தொட்டியின் உடைந்த கண்ணாடித் துண்டாலும் அவரைத் தாக்கியுள்ளார். சிறிது நேரத்தில் அருணா இறந்துவிட்டார்.

உடலை வீசத் திட்டம்

இதையடுத்து, அருணாவின் நகைகள், வாட்ச் போன்றவற்றை கழற்றி ஒரு கவரில் வைத்தார் தினேஷ். அருணாவின் ஸ்கூட்டரையும் எடுத்துக்கொண்டு, சூளை பகுதிக்குச் சென்றார். அங்கு அருணாவின் வீட்டருகே ஸ்கூட்டரையும், நகைப் பையையும் வைத்துவிட்டு, யாருக்கும் தெரியாமல் வீடு திரும்பினார். விடிவதற்குள், அருணாவின் உடலை எங்காவது வீசிவிடலாம் என்று உடலை மூட்டையாகக் கட்டி காரில் ஏற்றியுள்ளார்.

அருணா பி.காம். முடித்துவிட்டு நுங்கம் பாக்கத்தில் உள்ள கணக்குத் தணிக்கை பயிற்சி மையத்தில் ‘ஆடிட்டிங்’ பட்டயப் படிப்பு படித்துவந்தார்.

வழக்கம்போல, நேற்று முன்தினம் காலை புறப்பட்டு பயிற்சி மையத்துக்குச் சென்றார். மாலையில் தினேஷ் அழைத்ததால் நேராக அவரது வீட்டுக்குச் சென்றிருக்கிறார். இரவு வெகுநேரம் ஆகியும் அருணா வீடு திரும்பாததால் பெற்றோர் பல இடங்களிலும் தேடியுள்ளனர். வீட்டருகே ஸ்கூட்டர், நகைப் பை இருப்பதைப் பார்த்து சந்தேகமடைந்து அருணாவின் பெற்றோர் புகார் கொடுத்தனர். இவ்வாறு போலீஸார் கூறினர். தப்பிச் சென்ற தினேஷை பிடிக்க 2 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

காதல் எப்போது விபரீதம் ஆகிறது?

இருவர் இடையிலான காதல் உணர்வு எப்போது விபரீதமாகிறது? இதுகுறித்து சென்னை கீழ்ப்பாக்கம் மனோதத்துவ நிபுணர் சந்திரலேகா கூறியது:

‘இம்பல்ஸ் கன்ட்ரோல்’

காதலர்கள் இருவரில் ஒருவருக்கு சந்தேக எண்ணம் இருந்தாலோ, இருவரில் ஒருவர் ஏமாற்ற முயற்சி செய்தாலோ பிரச்சினை உருவாகிறது. இந்த சூழ்நிலையில் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் ‘இம்பல்ஸ் கன்ட்ரோல்’ கோளாறு ஏற்படுகிறது. அப்போது, கையில் கிடைக்கும் பொருளைக் கொண்டு மற்றவர்களைத் தாக்குவார்கள். வெளிநாடுகளில் துப்பாக்கி எளிதாக கிடைப்பதால், துப்பாக்கிச் சூடு நடக்கும். இங்கு கத்தி, சுத்தியல், அரிவாள்மனையால் தாக்குகின்றனர்.

பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியது:

தனிமை சந்திப்பு ஆபத்து

ஆண் நண்பர்களை பெண்கள் பொது இடங்களில் சந்தித்துப் பேசுவதால் பெரிய பிரச்சினைகள் ஏற்படுவதில்லை. தனிமையில் சந்திக்கும்போதுதான் கொலை, பாலியல் குற்றங்கள் நடக்கின்றன. ஆண்களை தனிமையில் சந்திக்காமல் தவிர்த்தாலே 99 சதவீத பிரச்சினைகள் ஏற்படாது. தனிமையில் சந்தித்து, பிரச்சினை ஏற்படும் சூழ்நிலை உருவானால் முதலில் அந்த இடத்தில் இருந்து பெண்கள் வெளியேற வேண்டும். உடல் பலத்தில் ஆண்களைவிட பெண்கள் பலவீனமானவர்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். பிரச்சினை ஏற்பட்டால் முடிந்தவரை சத்தம் போட்டு மற்றவர்களை உதவிக்கு அழைக்க வேண்டும். சத்தம் போடத் தயங்கக் கூடாது. இக்கட்டான சூழலில் எதிராளி மீது வீசிவிட்டுத் தப்பிக்க, பெண்கள் எப்போதும் ‘பெப்பர் ஸ்பிரே’ தயாராக வைத்திருப்பது கூடுதல் பாதுகாப்பாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x