Published : 03 Mar 2015 03:13 PM
Last Updated : 03 Mar 2015 03:13 PM
புதுச்சேரியில் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், பணி நீக்கம் செய்யப்பட்ட 6 போலீஸாரும் தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
இதற்கான அறிவிப்பை இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட சிபிசிஐடி எஸ்.பி. வெங்கடசாமி, கூடவே 6 போலீஸாரின் புகைப்படங்களையும் வெளியிட்டார்.
புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் பாலியல் தொழில் கும்பலிடம் இருந்து சிறுமிகள் கடந்த ஆண்டு ஏப்ரலில் மீட்கப்பட்டனர். புதுச்சேரி போலீஸாரும் அவர்களை பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரிந்தது.
சிறுமிகளை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுந்தர், யுவராஜ், சப் இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், பாட்ஷா, தலைமைக் காவலர்கள் குமரவேல், பண்டரிநாதன், காவலர்கள் சங்கர், செல்வகுமார், ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் ராஜாராம் ஆகியோர் மீது புதுச்சேரி சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து அவர்கள் தலைமறைவாகிவிட்டனர்.
இந்நிலையில், ஐ.ஜி பிரவீர் ரஞ்சன் உத்தரவின் பேரில் ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் ராஜாராமை தவிர்த்து இதர 8 போலீசாரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில் சிபிசிஐடி எஸ்பி வெங்கடசாமி தலைமையிலான தனிப்படையினர் பணி நீக்கம் செய்யப்பட்ட 9 போலீஸாரின் வீடுகளிலும் சோதனை நடத்தினார்கள்.
இதில் தொடர்புடைய பணி நீக்கம் செய்யப்பட்ட சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், காவலர்கள் சங்கர், செல்வக்குமார் ஆகியோர் சிபிசிஐடி போலீஸாரிடம் கடந்த சனிக்கிழமை சரணடைந்தனர். இதையடுத்து அவர்கள் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மீதமுள்ள 6 பேரையும் பிடிக்க சிபிசிஐடி போலீஸார் தீவிர நடவடிக்கைகளை எடுத்துவரும் வேளையில், அவர்களது புகைப்படத்துடன் கூடிய அறிவிப்பினை நேற்று எஸ்பி வெங்கடசாமி வெளியிட்டார்.
இந்நிலையில், எஸ்பி வெங்கடசாமி கூறும்போது, "தலைமறைவாகியுள்ள பணி நீக்கம் செய்யப்பட்ட போலீஸார் சரணடையவில்லை. அவர்கள் தலைமறைவு குற்றவாளி என்று அறிவிக்கிறோம்.
பொதுமக்கள் பார்த்து தகவல் தெரிவிப்பார்கள். விரைவில் கைது செய்ய நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT