Published : 22 Mar 2015 02:19 PM
Last Updated : 22 Mar 2015 02:19 PM
சென்னையில் அரசினர் ஓமந்தூரார் தோட்டத்தில் ரூ.61 கோடியில் கட்டப்பட்டு வரும் கலையரங்கத்தின் கட்டுமானப் பணி நிறைவடையும் நிலையை எட்டியுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களிலேயே முதல்முறையாக இங்கு, எஸ்கலேட்டர்கள் (நகரும் படிகள்) அமைக்கப்படுகின்றன.
முதல் சட்டமன்றம்...
சென்னையின் வரலாற்று அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது கலைவாணர் அரங்கம். ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகளையும், விழாக்களையும் கண்ட அந்த அரங்கம், கடந்த 2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3-ம் தேதி இடிக்கப்பட்டது. இந்தியா குடியரசு நாடாக ஆனபிறகு, 1952-ல் நடந்த முதல் பொதுத்தேர்தலில் சென்னை மாகாணத்துக்கு 375-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வாகும் நிலை இருந்தது. அதனால் புனித ஜார்ஜ் கோட்டையில் இடம்போதாது என்றெண்ணி ரூ.10 லட்சத்தில் புதிய சட்டசபை வளாகம், அரசினர் தோட்ட வளாகத்தில் கட்டப்பட்டு, 1952 மே 2-ல் திறந்துவைக்கப்பட்டது. பின்னர், ஆந்திரம் பிரிந்தபிறகு, சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 205 ஆகக் குறைந்ததால், 1956-ல் கோட்டைக்கு மீண்டும் சட்டமன்றம் இடம்பெயர்ந்தது. அது, 1957-லிருந்து சிறுவர்களுக்கான திரைப்படங்கள் திரையிடப்படும் பாலர் அரங்கமாக அது செயல்படத் தொடங்கியது. அதனை அப்போதைய பாரத பிரதமர் நேரு திறந்துவைத்தார். பின்னர், அக்கட்டிடத்தை மேம்படுத்தி, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் நினைவாக, கலைவாணர் அரங்கம் என 1974-ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி பெயரிட்டார்.
2009-ல் இடிப்பு
கடந்த திமுக ஆட்சியில் புதிய சட்டமன்றம் (தற்போது பல்நோக்கு மருத்துவமனை) கட்டப்பட்டபோது, கலைவாணர் அரங்கம் இடிக்கப்பட்டது. ஆனால், அதற்குப் பதிலாக அதனருகிலேயே பிரமாண்டமாக புதிய அரங்கத்தை அமைக்க அரசு முடிவெடுத்தது. ஆனால், அதில் சிறிது தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், அந்த இடத்தில் பிரமாண்டமாக கலையரங்கம் அமைக்கப்படும் என்று, அதிமுக பொறுப்பேற்றதும் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி கட்டுமானப் பணிகளை கடந்த 2014 பிப்ரவரியில், பொதுப்பணித்துறையின் மேற்பார்வையில் தனியார் நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. தொடர்ந்து அங்கு பணிகள் வேகமாக நடைபெற்றுவருகின்றன. கட்டுமானப் பணிகள் தொடங்கி ஓராண்டு ஆகியுள்ள நிலையில், வெளிப்புறக் கட்டுமானப் பணிகள் பெரும்பாலும் முடிவடைந்துவிட்டன.
இது குறித்து பொதுப்பணித்துறை உயரதிகாரிகள், 'தி இந்து' நிருபரிடம் நேற்று கூறியதாவது:-
சற்றேறக்குறைய 2 லட்சம் சதுர அடி பரப்புள்ள இந்த இடத்தில் 3 அடுக்குகளில் கலையரங்கம் அமையவுள்ளது. இங்கு, தரைத்தளத்தில் 100 கார்களை நிறுத்துவதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதல் தளத்தில் 1,100 பேர் அமர்ந்து பார்க்கும்வகையிலான அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது தளத்தில், கலையரங்கத்தின் பால்கனி அமையும்.
மூன்றாவது தளத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அமரக்கூடிய வகையில் பன்னோக்கு அரங்கு ஒன்று அமைக்கப்பட்டுவருகிறது. அங்கு எத்தகைய நிகழ்ச்சியையும் நடத்திக்கொள்ளமுடியும்.
இதுதவிர, இரண்டு மற்றும் மூன்றாவது தளங்களில் தலா 115 பேர் அமரக்கூடிய வகையில் இரு கூட்ட அரங்குகள் கட்டப்படவுள்ளன.
முதல்முறையாக...
தவிரவும், தமிழகத்தில் முதல் முறையாக ஒரு அரசுக் கட்டிடத்தில் எஸ்கலேட்டர் இங்குதான் அமையவுள்ளது. கலையரங்கத்துக்கு கிழக்குப் புறத்தில் பிரதான வாயில் அமைகிறது. மேலும், வாலாஜா சாலையை நோக்கியவாறு, தெற்குப்பக்கமாகவும் ஒரு வாயில் அமைக்கப்படுகிறது. இந்த இருவாயில்களின் வழியாக உள்ளே வருவோர், கலையரங்கத்தின் மேல்தளங்களுக்குப் போவதற்கு வசதியாக இருபுறத்திலும் எஸ்கலேட்டர்கள் அமைக்கப்படும்.
தற்போது, கலையரங்கத்தின் வெளிப்புறக் கட்டுமானப் பணி நிறைவடைந்துவிட்டது. உட்புறத்திலும் பணிகள் நிறைவடையும் நிலையை எட்டியுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதத்தில் கட்டுமானப் பணிகளை முடிக்கத் திட்டமிட்டிருக்கிறோம்.
இவ்வாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT