Published : 12 Mar 2015 04:41 PM
Last Updated : 12 Mar 2015 04:41 PM
புதுச்சேரி சட்டப்பேரவையில் போலீஸார் செய்த முறைகேடுகள் தொடர்பாக ஆளுங்கட்சி எம்எல்ஏ குற்றம்சாட்டியதற்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் (காங்கிரஸ், அதிமுக, திமுக) ஒட்டுமொத்தமாக இன்று வெளிநடப்பு செய்தன.
புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் இன்று தொடங்கியது. ஆளுங்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ அங்காளன் பேசும்போது, "புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு கெட போலீஸார்தான் முக்கியக்காரணம். போலீஸாருக்கு தெரியாமல் எதுவும் நடக்காது. எஸ்பி அலுவலகத்தில்தான் பஞ்சாயத்து நடக்கிறது. ரூ.9 கோடி சொத்தை அபகரிக்க முயற்சிகள் நடந்தன. அதன் பின்புலத்தில் பல துறைகள் செயல்படுகின்றன. ஒருவர் பெயரில் சொத்து இருக்கும் போது வேறு மூவர் பெயரில் சொத்து பதிவானது எப்படி என தெரியவில்லை. உரிமையாளர் பிரான்ஸில் இருக்கிறார். இது மிகப் பெரிய நிலமோசடி .
போலீஸார் செல்போன்களை சோதித்தால் அவர்களுக்கு ரவுடிகள், மாபியா கும்பல்களுடன் இருக்கும் தொடர்பு தெரியவரும். பொதுமக்களுக்கும், நல்லவர்களுக்கும் வேலை செய்வதை விட்டு, திருடர்களுக்குதான் போலீஸார் பணியாற்றுகிறார்கள் '' என்று குறிப்பிட்டார்.
நாஜிம் (திமுக எம்எல்ஏ): ''பெரிய விஷயங்களை ஆளுங்கட்சி எம்எல்ஏ சொல்லும்போது கலெக்டரை அழைத்து நில மோசடி தொடர்பாக விசாரித்து அறிக்கை தர பேரவைத்தலைவர் உத்தரவிட வேண்டும். அந்த அறிக்கையை பேரவையில் வைக்க வேண்டும். உறுப்பினருக்கு பாதுகாப்பு தர வேண்டும். ஆளுநர் உரை மீதான விவாதம் நடக்கும்போது, ஆளுநரின் செயலர் பேரவையில் இருக்க வேண்டும். ஆனால், ஆளுநரின் செயலரே அவையில் இல்லை. தவறான பாதையில் சபையை நடத்துகிறீர்கள்.'' என்று நாஜிம் பேசினார்.
அன்பழகன் (அதிமுக எம்எல்ஏ): ''குற்றவாளிகளுடன் போலீஸார் தொடர்பு உள்ளதாக ஆளுங்கட்சி எம்எல்ஏ சொன்ன புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரவை நடைபெறும் போது தலைமைச்செயலர், மாவட்ட ஆட்சித் தலைவர், போலீஸ் உயர் அதிகாரிகள் இருக்க வேண்டும். ஆனால், யாரும் இல்லை. இதுதொடர்பாக அவர்களை உடனே அழையுங்கள்.'' என்று அன்பழகன் பேசினார்.
அமைச்சர் ராஜவேலு: ''துறையின் செயலர்கள், இயக்குநர்கள் பேரவை நடைபெறும் போது இருக்க வேண்டும். நானே தேடிப் பார்க்கும்போது பல அதிகாரிகள் இங்கு இல்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சொல்வது போல், சட்டப்பேரவை முடியும் வரை அதிகாரிகள் இருக்க வேண்டும். முதல்வர் உரையாற்ற உள்ளார். இருந்தாலும், யாரும் பேரவை நடைபெறும் போது வருவது இல்லை.
ஆளுங்கட்சி எம்எல்ஏ கல்யாணசுந்தரம்: ஐஏஎஸ் அதிகாரிகள் எங்கே சென்றார்கள்? அனைவரும் இங்கு இருக்கும்போது எங்கே சென்றார்கள்.'' என்று ராஜவேலு கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் பேரவைத்தலைவர் உத்தரவு ஏதும் தெரிவிக்காததால் அவையில் இருந்த அதிமுக உறுப்பினர்கள் அன்பழகன், பெரியசாமி ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் வைத்திலிங்கம்: ''சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாளை இருக்க உத்தரவு போடுங்கள்.சட்டம்,ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது. இரு துறைகள் மீது குற்றம் சாட்டியுள்ளனர். ஆளுங்கட்சி எம்எல்ஏ மீது எப்போது நடவடிக்கை எடுப்பீர்கள் என தெரிவிக்கவில்லை.'' என்று பேசிய வைத்திலிங்கம், ஆளுங்கட்சி உறுப்பினர் புகாருக்கு நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து வெளிநடப்பு செய்தார்.
அவரைத்தொடர்ந்து திமுக உறுப்பினர் நாஜிமும் வெளிநடப்பு செய்தார். ஆளுங்கட்சி உறுப்பினர் புகாருக்கு ஆதரவாக பேரவையில் இருந்த காங்கிரஸ், அதிமுக, திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தததால், எதிர்வரிசை காலியானது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT