Published : 07 Mar 2015 09:26 AM
Last Updated : 07 Mar 2015 09:26 AM

ஆந்திராவில் இருந்து விமானத்தில் கொண்டுவரப்பட்ட 22 வயது இளைஞரின் இதயம், நுரையீரல் மும்பை இளைஞருக்கு பொருத்தப்பட்டது

ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த 22 வயது இளைஞரின் இதயமும் நுரையீரலும் மும்பையைச் சேர்ந்த 20 வயது இளைஞருக்கு சென்னை போர்டிஸ் மலர் மருத்துவ மனையில் பொருத்தப்பட்டது.

மும்பையைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு சிறு வயது முதலே இருதய மற்றும் நுரையீரல் பாதிப்பு இருந்து வந்தது. கடந்த ஆறு மாதங்களாக ஒரே நபரிடமிருந்து மாற்று இதயம் மற்றும் நுரையீரலுக்காக அவர் காத்திருந்தார்.

விஜயவாடாவைச் சேர்ந்தவர் மணிகந்தா. மார்ச் 3-ம் தேதி நடைபெற்ற சாலை விபத்தில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த அவர் மூன்று நாட்கள் கழித்து மூளைச் சாவு அடைந்ததாக மருத்துவர்கள் கூறினர். இதையடுத்து அவரது சகோதரி டி.சிவநாகஜோதி, மணிகந்தாவின் உறுப்புகளை தானமாக கொடுக்க ஒப்புக் கொண்டார்.

இது குறித்து சென்னை போர்டிஸ் மலர் மருத்துவ மனையின் இருதய அறுவை சிகிச்சை துறையின் தலைவர் டாக்டர்.சுரேஷ் ராவ் கூறியதாவது:

உறுப்பு தானம் செய்ய ஒருவர் இருக்கிறார் என்று தெரிந்தவுடன் நாங்கள் விஜயவாடா சென்று மணிகந்தாவின் உறுப்புகள் மும்பை இளைஞனுக்கு பொருந் துமா என்று பரிசோதித்துப் பார்த்தோம். அவரது உறுப்புகள் பொருந்தும் என்று தெரிந்த பிறகு அவரது இதயம் மற்றும் நுரையீரல் ஆகிய உறுப்புகளை எடுத்துக் கொண்டு மாலை 5.02 மணிக்கு மருத்துவமனையை விட்டு கிளம்பி 5.38க்கு விமான நிலையத்தை வந்தடைந்தோம். 5.43மணிக்கு விஜயவாடாவிலிருந்து புறப்பட்ட விமானம் 6.22க்கு சென்னை விமான நிலையத்துக்கு வந்தது.

பின், 6.30 க்கு விமான நிலையத்திலிருந்து கிளம்பி 6.40க்கு போர்டிஸ் மலர் மருத்துவமனையை வந்தடைந் தோம். விஜயவாடாவிலிருந்து சென்னைக்கு வர சுமார் எட்டு மணி நேரங்கள் ஆகும். ஆனால், நாங்கள் இரண்டு மணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில் வந்து விட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

போர்டிஸ் மலர் மருத்துவ மனையின் மருத்துவ இயக்குநர் ஹேனா மிர்சா கூறும்போது, “இந்தியாவில் உறுப்பு தானத்தில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. தற்போது ஆந்திராவிலும் இது குறித்து விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. நாங்கள் ஆம்புலன்ஸில் வரும்போது சாலையில் மக்கள் மலர் தூவி வழியனுப்பி வைத்தனர்” என்றார்.

மணிகந்தாவின் கண்கள், கல்லீரல், ஆகிய உறுப்புகள் மற்ற மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டன. அவரது சிறுநீரகம் அவர் சிகிச்சைப் பெற்று வந்த மருத்துவமனையிலேயே தானமாக அளிக்கப்பட்டது.

டாக்டர் கே.ஆர்.பாலகி ருஷ்ணன், டாக்டர் சுரேஷ் ராவ், டாக்டர் நாத், டாக்டர் சௌதாரி ஆகியோர் தலைமையில் பத்து பேர் கொண்ட மருத்துவர்கள் குழு இந்த அறுவை சிகிச்சையை செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x