Published : 16 Mar 2015 10:28 AM
Last Updated : 16 Mar 2015 10:28 AM
‘தாலி அணிவது தமிழ் மரபா’ என்ற விவாதம் சர்ச்சைக்குள்ளாகி அதன் காரணமாக தமிழ் தொலைக்காட்சி நிலையம் தாக்குதலுக்கு உள்ளானது. இதுபோன்ற விவாதம் 1954-ம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்றது. ஆனால், கருத்துகள் வெடித்துச் சிதறினவேயன்றி, குண்டு வெடிக்கவில்லை.
தமிழறிஞரும் சோழ வரலாற்று ஆசிரியருமான மா. இராசமாணிக்கனார் மதுரை திருவள்ளுவர் கழகத்தில் சொற்பொழிவு நிகழ்த்தியபோது, “சங்ககாலம் முதல் கி.பி. 10-ம் நூற்றாண்டு வரையில் தமிழர் திருமணத்தில் தாலிகட்டும் வழக்கம் இருந்தமைக்கு சான்றில்லை” என்று குறிப்பிட்டார்.
இதற்கு மறுப்புரை எழுதிய சிலம்புச்செல்வரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான ம.பொ.சி., இராசமாணிக்கனார் கூறியிருப்பது உண்மைக்கு மாறானது என்றார். சிலப்பதிகாரத்தின் கதாநாயகி கண்ணகி தாலி அணிந்திருந்ததற்கு சான்று இருப்பதாகக் கூறிய அவர், “மங்கல அணியிற்பிறிதணி மகிழாள்” என்ற சிலப்பதிகார வரிகளை மேற்கோள் காட்டினார். “கண்ணகி கோவலனைப் பிரிந்திருந்த காலத்திலே தாலி ஒன்றைத் தவிர மற்ற அணிகளை எல்லாம் துறந்திருந்தாள்” என்று இளங்கோவடிகள் கூறுவதாக ம.பொ.சி. கூறினார்.
இப்படி விவாதம் தொடங்கியதும். மதுரையில் இருந்து வெளிவந்த தமிழ்நாடு பத்திரிகையின் ஞாயிறு மலரில் ஒன்பது கட்டுரைகள் எழுதி னார் இராசமாணிக்கனார். தமிழ் இலக்கிய உலகம் ஏறக்குறைய இரண்டாக பிரிந்து ம.பொ.சி. பக்கமும் இராசமாணிக்கனார் பக்கமும் நின்று கருத்துரைத்தனர்.
ம.பொ.சி-யின் கருத்தை மறுத்த இராசமாணிக்கனார், மங்கல அணி, மாங்கல்ய சூத்திரமில்லை என்பதை அடியார்க்குநல்லார் உரையால் அறியலாம் என்று வாதிட்டார். மங்கல அணி என்றால் இயற்கை அழகு. கணவன் பிரிவால் வாடிய கண்ணகி எவ்வித நகையும் இல்லாமல் இயற்கை அழகோடு இருந்தாள் என்பதே அவ்வரியின் பொருள் என்று எடுத்துரைத்தார்.
கோவலன் - கண்ணகியின் திருமணத்தில் நடந்தேறிய பிற சடங்குகளைப் பதிவு செய்திருக்கும் இளங்கோவடிகள், தாலி கட்டு வதை பதிவு செய்யவில்லை என்று இராசமாணிக்கனார் சுட்டிக்காட்டினார். கோவலன் இறந்த பிறகு கண்ணகி தன் கைவளையல்களைத் தான் உடைத் தாள் என்றும் அவர் கூறுகிறார்.
ம.பொ.சி. மீண்டும் இதை மறுத்தார். “சிலம்பில் திருமணத்தைக் காட்சிப்படுத்து மிடத்து, கண்ணகி கழுத்தில் தாலி யணிவிப்பதைக் கூறாமல் விட்டது, அது வேத வழிபாட்டாக அல்லாமல் தமிழர் வழிபாட்டாக இளங்கோ கருதியதால்தான்” என் றார். சங்க இலக்கியமான புற நானூறு, நெடுநல்வாடையிலும் தாலி குறித்த தகவல்கள் உண்டு என்பது ம.பொ.சி.யின் வாதம்.
ஆனால், “புலிப்பல் கோத்த புலம்புமணித் தாலி கற்கெழு சிறுகுடிக் கானவன் மகளே, என்ற அகநானூற்றுப் பாடலில் வரும் தாலிக்கும் மகளிர் அணியும் தாலிக்கும் வேறுபாடு உண்டு என்றார் இராசமாணிக்கனார்.
“புலியை வென்ற வீரத் தமிழ்மகன் அதன் பற்களை அழகு செய்து நூலிற் கோத்துத் தானும் அணிந்ததோடன்றி தன்பால் அன்புகொண்ட மனைவி மக்களுக்கும் அணிந்து மகிழ்ந்தான்” என்றார் இராசமாணிக்கனார்.
தாலி என்றால் தொங்கு தலையுடையது. தாலி என்றால் பனைமரம் என்ற பொருளும் உண்டு. தாலி என்பது தொங்கும் நகையைக் குறிக்குமே யன்றி அந்த அணி கோக்கப்பட்ட நூலையோ அல்லது சரட்டையோ குறி்க்காது என்பது அவரது வாதம்.
கி.பி. 11-ம் நூற்றாண்டில் தோன்றிய கந்தபுராண காலத்தில் இருந்து தமிழர் திருமணத்தில் மங்கல நாண் கட்டுதல் தோன்றி யிருக்க வேண்டும். பெரியபுராணம், தக்கையாகப்பரணி, கம்பராமா யணம், நம்பி திருவிளையாடல், பரஞ்சோதி திருவிளையாடல் ஆகிய இலக்கியங்களாலும் இது அறியப்படுகிறது.
இந்த விவாதங்கள் பிற்காலத்தில் புத்தகங்களாக வெளியாகின. தன்னுடைய முன்னுரையில் ‘இந்தத் துறையில் எனக்கு ஊக்கமூட்டியவர் அறிஞர் ம.பொ.சிவஞானம்’ என்று பெருந்தன்மையுடன் கூறியிருக் கிறார் இராசமாணிக்கனார். கற் றோரைக் கற்றோரே காமுறுவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT