Published : 28 May 2014 08:21 AM
Last Updated : 28 May 2014 08:21 AM
சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி இல்லை என மத்திய வர்த்தகத் துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளதற்கு தமிழகத்தில் உள்ள வணிகர் சங்க அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
விக்கிரமராஜா (தமிழ்நாடு வணிகர் சங்கங் களின் பேரமைப்பு தலைவர்)
வணிகர்கள் பல ஆண்டுகளாக போராடிய போராட்டத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி இது. ஒரு வகையில் வணிகர் களுக்கு என்று பார்த்தாலும்கூட, இது இன்னொரு வகையில் நாட்டு மக்களுக்கு கிடைத்த வெற்றியும்கூட. பிரதமர் மோடி முன்பே இதை எதிர்த்து கடுமையாக போராடுவோம் என்று கூறியிருந்தார்.
இங்கிருக்கும் மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள முடியாமல், மக்களுடைய போராட்டங்களுக்கு காது கொடுக்காமல் கடந்த ஆட்சியினர் 10 ஆண்டுகளாக ஆட்சி செய்திருக்கிறார்கள். குறிப்பாக எந்த வகையிலும் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறார்கள். தமிழகத்தில் திரும்பும் திசையெல்லாம் அமைச்சர்கள் இருந்திருக்கிறார்கள். யாரும் கண்டுகொள்ளவில்லை. வியாபாரிகள் எந்த ஆதங்கத்தோடு இருந்தோமோ அந்த ஆதங்கத்தை புரிந்துகொண்டு பதவி ஏற்ற மறுதினமே புதிய அரசு இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அடுத்தடுத்து உணவு பாதுகாப்புப் பிரச்சினை, வணிக வரித்துறை பிரச்சினை இப்படி ஒவ்வொன்றுக்குமான தீர்வுகள் என்று வணிகர்களுக்கு எளிமையாக அமையும் நன்மைகளை அடுத்தடுத்து இந்த அரசு நிச்சயம் செய்யும். நாங்கள் இதற்காக நேரடியாக சந்தித்து நன்றி சொல்லவிருக்கிறோம். புதன்கிழமை (இன்று) காலை தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் இனிப்பு கொடுத்து கொண்டாடவிருக்கிறோம்.
த.வெள்ளையன் (தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவைத் தலைவர்)
சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கக்கூடாது என்று இந்த அரசு தேர்தலுக்கு முன்பே சொன்னது. இப்போது தேர்தலில் ஜெயித்த பின்னரும் கூறியிருக்கிறது. இதையே அதிமுக அரசும், திமுகவும், கம்யூனிஸ்ட் கட்சியும், ஆம் ஆத்மி கட்சியும்கூட கூறியிருக்கின்றன. ஒரு விதத்தில் இதையெல்லாம் வரவேற்கிறோம், நன்றி சொல்லிக் கொள்கிறோம்.
ஆனால் எங்களுக்கு என்ன வேண்டுமென்றால் மொத்த வணிகத்திலும் அனுமதிக்கக்கூடாது என்கிற அறிவிப்புதான். வெளிநாட்டு வியாபாரிகளை இங்கே வணிகம் செய்ய அனுமதிக்கக்கூடாது. இங்கே உள்ள வெளிநாட்டு ஸ்டாக் அனைத்தையும் வெளியேற்ற வேண்டும்.
குறிப்பாக இந்த பாரதிய ஜனதா அரசு எடுக்க வேண்டிய முதல் நடவடிக்கை உலக வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து இந்தியாவை விடுவிடுக்க வேண்டும் என்பதைத்தான் நாங்கள் விரும்புகிறோம். குறிப்பாக மொத்த வணிகம் என்கிற பெயரில் இங்கே சில்லறை வணிகத்தை செய்து வருகிறார்கள்.
பொதுமக்களும் குறைந்த விலை என்பதால் வெளிநாட்டுக்காரர்களின் அந்த பொருட்களை வாங்கிக்கொண்டிருப்பார்கள். அப்போது நம் நாட்டு பணம் வெளிநாட்டுக்கு போகும். இங்கே பொருளாதார வறட்சி ஏற்படும். இதனால் மொத்த வணிகத்திலும் அனுமதிக்கக்கூடாது என்பதுதான் எங்களின் கருத்து.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT