Published : 18 Mar 2015 04:31 PM
Last Updated : 18 Mar 2015 04:31 PM

கூடங்குளம் முதல் அணு உலையில் 500 கோடி யூனிட் மின் உற்பத்தி: வளாக இயக்குநர் தகவல்

கூடங்குளம் முதலாவது அணுஉலையில் இதுவரை 500 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 2-வது அணுஉலையில் வரும் ஆகஸ்டில் மின் உற்பத்தி தொடங்கும் என்று அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ். சுந்தர் தெரிவித்தார்.

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 2 நாள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் தொடக்க விழா மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடைபெற்றது. பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஏ.கே. குமரகுரு தலைமை வகித்தார். ஆட்சிமன்ற குழு உறுப்பினர் பி. மரியஜான் வரவேற்றார்.

கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ். சுந்தர், பல்கலைக்கழக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். பின்னர், அவர் பேசியதாவது: மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகத்தில் 1,500 மரக்கன்றுகளை நடுவதற்கு திட்டமிட்டுள்ளோம்.

அமெரிக்காவில் 100 அணுஉலைகளில் இருந்து 1 லட்சம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறார்கள். அந்நாட்டில் மொத்த மின் உற்பத்தியில் 20 சதவீதம் அணுஉலைகளில் இருந்து பெறப்படுகிறது. இதனால் அங்கு மேலும் பல அணுஉலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. பிரான்ஸ் நாட்டில் 25 சதவீத மின்சாரம் அணுஉலைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. ஜெர்மனியில் பழைய அணுஉலைகளை மூடுகிறார்கள். இதனால் பிரான்ஸிலிருந்து மின்சாரத்தை ஜெர்மனி வாங்குகிறது.

500 கோடி யூனிட்

இந்தியாவில் அணுஉலைகள் அமைந்துள்ள இடங்களில் மக்களுக்கு எவ்வித பிரச்சினைகளும் ஏற்படவில்லை. ராஜஸ்தானில் கோட்டா என்ற இடத்தில் 7, 8-வது அணு உலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அப்பகுதியில் உள்ள மக்கள் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறார்கள்.

சுற்றுச்சூழலை மாசுபடுத்தக் கூடாது என்பதில் எங்களுக்கும் அதிக அக்கறை இருக்கிறது. இதற்காகவே கூடங்குளம் அணுஉலை வளாகத்தில் நவீன பரிசோதனை கூடத்தை செயல்படுத்தி வருகிறோம். நாட்டில் உள்ள 20 அணுஉலைகளிலும் 5,600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

கூடங்குளத்தில் அணுஉலை செயல்படுகிறதா என்று சில அதிகாரிகளே எங்களிடம் கேட்பது வியப்பாக இருக்கிறது. அணுஉலை இயங்காமலா மின்சாரம் உற்பத்தி செய்து வழங்கி வருகிறோம். கூடங்குளம் முதலாவது அணுஉலையில் மட்டும் இதுவரை 500 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்திருக்கிறோம்.

2-வது அணுஉலை

2-வது அணுஉலையில் வெப்பநீர் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த அணுஉலையில் வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் மின் உற்பத்தி செய்யப்படும்.

இந்த அணுமின் நிலைய கழிவுகளை தேனியில் கொண்டுபோய் கொட்டப்போகிறார்கள் என்றும், கூடங்குளம் அணுமின் திட்டத்துக்கும் தேனி நியூட்ரினோ திட்டத்துக்கும் தொடர்பு இருப்பதாகவும் சிலர் தவறான தகவலை பரப்பி வருகின்றனர்.

கூடங்குளம் திட்டத்துக்கும், நியூட்ரினோ திட்டத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அணுக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த தொடக்கத்திலேயே திட்டமிட்டிருக்கிறோம். அதை கடலிலோ, வேறு பகுதியில் உள்ள நிலத்திலோ கொட்டப்போவதில்லை. அதை அணுஉலை வளாகத்திலேயே பத்திரமாக வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு ஆர்.எஸ்.சுந்தர் பேசினார்.

பல்கலைக்கழகப் பதிவாளர் ஜான் டி பிரிட்டோ, கூடங்குளம் அணுமின் நிலைய பொதுமக்கள் விழிப்புணர்வு குழு தலைவர் எஸ். காளிராஜன், பல்கலைக்கழக கல்வியியல்துறை தலைவர் வில்லியம் தர்மராஜா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பல்கலைக்கழக சுற்றுச்சூழல் அறிவியல்துறை முன்னாள் பேராசிரியர் ஜி.எஸ். விஜயலட்சுமி கருத்தரங்கின் நோக்கம் குறித்து பேசினார். கூடங்குளம் அணுமின் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர். வேல்மயில் முருகன் நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x