Published : 21 Mar 2015 01:11 PM
Last Updated : 21 Mar 2015 01:11 PM

மேகேதாட்டுவில் காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுவதை தடுத்து நிறுத்தவேண்டும்: பிரதமருக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்துமாறு பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை கர்நாடக அரசு தொடர்ந்து மீறிவருவது தொடர்பாக இக் கடிதத்தை எழுதுகிறேன். மத்திய அரசிடமோ, காவிரி நடுவர் மன்றத்திடமோ, தமிழக அரசிடமோ எவ்வித அனுமதியும் பெறாமல் காவிரி ஆற்றின் குறுக்கே மேகே தாட்டு என்ற இடத்தில் அணை கட்டுவதில் கர்நாடக அரசு பிடிவாதமாக உள்ளது. அணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தின் முன்அனுமதி இல்லாமல் காவிரி ஆற்றுப் படுகையில் நீர்மின் திட்டங்கள் உட்பட எந்த புதிய திட்டத்தையும் மேற்கொள்ள வேண்டாம் என்று கர்நாடக அரசுக்கு அறிவுரை வழங்குமாறு மத்திய அரசை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2013 செப்டம்பர் 2-ம் தேதி வலியுறுத்தியதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

மேலும், காவிரி மேலாண்மை வாரியம் ஏற்படுத் தப்படும் வரை, காவிரி படுகையில் கர்நாடகம் எந்தவிதமான திட்டங் கள் மேற்கொள்ளவும் அனுமதி அளிக்கவேண்டாம் என்று மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச் சகத்துக்கு தாங்கள் அறிவுரை கூறுமாறும் ஜெயலலிதா கேட்டுக்கொண்டார்.

காவிரியின் குறுக்கே மேகே தாட்டுவில் 2 அணைகள் கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டு அதற்கான தொடக்கநிலைப் பணிகளில் இறங்கியிருப்பதை கடந்த 2014 டிசம்பர் 12-ம் தேதி தங்களுக்கு எழுதியிருந்த கடிதத்திலும் சுட்டிக் காட்டியிருந்தேன். காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை களையோ, புதிய திட்டங்களையோ செயல்படுத்துவதை தடுத்து நிறுத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு 2014 நவம்பர் 18-ம் தேதி இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது. காவிரியின் குறுக்கே அணை கட்டும் விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு அணை கட்டுமான பணியை மேற்கொள் ளக்கூடாது என்றும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப் படும்வரை கட்டுமானப் பணியை நிறுத்த வேண்டும் என்றும் கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தக்கோரி தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2014 டிசம்பர் 5-ம் தேதி ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நீர்வரத்து பாதிக்கப்படும்

மேகேதாட்டுவில் 2 அணைகள் கட்டுவதற்கான பணிகளை மேற் கொண்டுள்ள கர்நாடக அரசின் தன்னிச்சையான நடவடிக்கை, கடந்த 2007-ல் வழங்கப்பட்டு 2013-ல் மத்திய அரசிதழில் வெளியிடப்பட்ட காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை முற்றிலும் மீறும் செயல். அங்கு அணைகள் கட்டப்பட்டால் தமிழகத்துக்கு காவிரி நீர் வரத்து கடுமையாக பாதிக்கப்படும் என்பதை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இத்தகைய சூழ்நிலையில், மேகேதாட்டுவில் அணைகள் கட்டும் சட்டவிரோத திட்டத்தை தொடர வேண்டாம் என்றும் காவிரி படுகையில் எந்த புதிய திட்டத்தையும் மேற்கொள்ள வேண் டாம் என்றும் கர்நாடக அரசுக்கு அறிவுரை வழங்குமாறு தங்களிடம் மீண்டும் வேண்டுகோள் விடுக்கி றேன்.

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை திறம்பட நடை முறைப்படுத்தும் வண்ணம் காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழுவையும் அமைக்கவேண்டும் என்று ஜெயலலிதா அடிக்கடி வேண்டுகோள் விடுத்தும் அவை இன்னும் அமைக்கப்படாதது வருத்தம் அளிக்கிறது. எனவே இனியும் தாமதம் செய்யாமல், நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை முழுமையாக அமல்படுத்தும் வகையில் மேற்கண்ட இரு அமைப்புகளையும் உடனடியாக ஏற்படுத்த மத்திய நீர்வள அமைச்சகத்துக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.

இவ்வாறு கடிதத்தில் முதல்வர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x