Published : 17 Mar 2015 09:42 AM
Last Updated : 17 Mar 2015 09:42 AM
லாரிகள் மோதிக் கொண்ட விபத்தில் ஜிஎஸ்டி சாலையில் 2 மணி நேரம் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
சென்னை தாம்பரம் அருகே உள்ள சிட்லபாக்கத்துக்கு வேலூரில் இருந்து செங்கல் ஏற்றிக்கொண்டு நேற்று காலையில் ஒரு லாரி வந்தது. லாரியை ஜெய்சிங் ஓட்டினார். காலை 4.30 மணியளவில் தாம்பரத்துக்கும் குரோம்பேட்டைக்கும் இடையே காச நோய் மருத்துவமனை அருகே ஜிஎஸ்டி சாலையில் லாரி வந்தது. அப்போது தாம்பரத்தில் இருந்து திரிசூலம் நோக்கி கருங்கல் ஏற்றிச் சென்ற மற்றொரு லாரி செங்கல் லாரியின் பின் பக்கத்தில் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் லாரியின் முன் பகுதியில் பாதி நொறுங்கிவிட்டது. அதில் இருந்த கிளீனர் ராமச்சந்திரனின் கால் முறிந்தது. ஓட்டுநர் கன்னியப்பன் மற்றும் செங்கல் லாரி ஓட்டுநர் ஜெய்சிங் ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மோதிய வேகத்தில் கருங்கல் லாரியின் டயர்கள் பலத்த சத்தத்துடன் வெடித்தன. செங்கல் லாரியின் டீசல் டேங்க் உடைந்து, டீசல் வெளியேறி தரையில் ஆறாக ஓடியது. இதனால் அந்த இடத்தில் தீப்பிடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினரும், தாம்பரம் போலீஸாரும் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். பலத்த காயமடைந்த ராமச்சந்திரனை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லாரியில் இருந்து வெளியே றிய டீசல் மீது தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தண்ணீரை பீய்ச்சி அடித்த னர். இதனால் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்தால் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. தென் மாவட்டங்களில் இருந்து வந்த பஸ்கள் உட்பட அனைத்து வாகனங்களும் இதில் சிக்கி 2 கி.மீ. தூரத்துக்கு அணிவகுத்து நின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT