Published : 09 Mar 2015 10:12 AM
Last Updated : 09 Mar 2015 10:12 AM

தகவல் பாதுகாப்புத் துறையில் 2018-ல்1.90 லட்சம் பணியாளர்கள் பற்றாக்குறை இருக்கும் - மனித ஆற்றல் துறை நிபுணர் தகவல்

2018-ம் ஆண்டில் உலக அளவில் தகவல் பாதுகாப்புத் துறையில் 1.90 லட்சம் பணியாளர்கள் பற்றாக்குறை இருக்கும் என்று காக்னிசென்ட் நிறுவனத்தின் மனித ஆற்றல் துறை துணைத் தலைவர் ஸ்ரீராம் ராஜகோபால் கூறியுள்ளார். ஆர்.எம்.கே.பொறியியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஸ்ரீராம் ராஜகோபால் மாணவர்களுக்கு பட்டமளித்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

மாறி வரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்றவாறு மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். 2020-ல் உலகில் 50 பில்லியன் இணைக்கப்பட்ட கருவிகள் நம்மைச் சுற்றியிருக்கும். இவை நமது அன்றாட வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். இந்த தொழில்நுட்ப மாற்றத்தின் மிக முக்கிய அம்சம் தகவல் பாதுகாப்பு.

2018-ம் ஆண்டில் தகவல் பாதுகாப்பு துறையில் 1.90 லட்சம் பணியாளர்கள் பற்றாக்குறை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பட்டம் பெறும் மாணவர்கள் இது குறித்த தங்களது அறிவையும் திறனையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவுக்கு தலைமை தாங்கிய ஆர்.எம்.கே.பொறியியல் கல்லூரியின் நிறுவனத் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் பேசும்போது, “பெற்றோர்களின் தியாகத்தை உணர்ந்து மாணவர்கள் செயல்பட வேண்டும். இந்த ஆண்டு 96 மாணவர்கள் பல்கலைக்கழக தர வரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அடுத்த ஆண்டு இந்த எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்” என்றார். ஆர்.எம்.கே. கல்லூரியிலிருந்து இந்த ஆண்டு 990 பேர் பட்டம் பெற்றுள்ளனர். இதில் 756 பேர் இளநிலையிலும், 176 பேர் முதுநிலையிலும், 58 பேர் எம்.பி.ஏ, எம்.சி.ஏ உள்ளிட்ட படிப்புகளிலும் பட்டம் பெற்றுள்ளனர்.

மெக்கானிக்கல் பொறியியல் துறையைச் சேர்ந்த வி.ராமலக்ஷ்மி தங்கப் பதக்கம் பெற்றுள்ளார். இந்த விழாவில் கல்லூரியின் துணை தலைவர் ஆர்.எம்.கிஷோர், செயலாளர் யலமஞ்சி பிரதீப், முதல்வர் எல்வின் சந்திரமோனி, துணை முதல்வர் முகமத் ஜுனைத், ஆலோசகர்கள் டாக்டர் பழனிசாமி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் டி.என்.ராமநாதன், டி,பிச்சாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x