Published : 10 Mar 2015 11:01 AM
Last Updated : 10 Mar 2015 11:01 AM

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 5 மாத பெண் குழந்தை மாயம்: திருடிச் சென்ற பெண்ணை பிடிக்க ரயில்வே போலீஸார் தீவிரம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலை யத்தில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த 5 மாத பெண் குழந்தை திருடப்பட்டது. குற்றவாளி யைப் பிடிக்க ரயில்வே போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த ராஜா, பத்மா தம்பதியர் பழநி விரைவு ரயிலில் பயணம் செய்வதற்காக நேற்றுமுன்தினம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்தனர். தாமதமாக வந்ததால் அந்த ரயிலை தவறவிட்டுவிட்டனர். நேரமும் ஆகிவிட்டதால், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காத்திருக்கும் அறைக்கு வெளியே தமது 5 மாத பெண் குழந்தையுடன் படுத்து தூங்கினர். அதிகாலை 2.30 மணி அளவில் அந்த குழந்தையை காணவில்லை. இது தொடர்பாக ரயில்வே போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இது தொடர்பாக ரயில்வே போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, ‘‘சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குழந்தை திருடுபோன பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமரா சரியாக இயங்கவில்லை. ஆனால், 4 மற்றும் 5-வது நடைமேடைகளில் உள்ள கேமராவில் சுடிதார் அணிந்த பெண் ஒருவர், குழந்தையை தூக்கிச் செல்வது பதிவாகியுள்ளது. இதையடுத்து, அந்த பெண்ணை பிடிக்க போலீஸார் முயன்று வருகின்றனர். காணாமல் போன குழந்தையை விரைவில் கண்டுபிடிப்போம்’’ என்றனர்.

இது தொடர்பாக ரயில்வே போலீஸ் எஸ்.பி. விஜயகுமாரிடம் கேட்டபோது, ‘‘ரயில் நிலை யத்துக்கு உள்ளே பயணிகள் வரும்போது, ரயில் டிக்கெட், பிளாட்பார்ம் டிக்கெட் ஆகியவை வைத்திருக்க வேண்டும். ரயில் களை தவற விட்டால், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ரயில்வே அதிகாரிகளிடமோ, ரயில் போலீ ஸாரிடமோ அணுகி தகவல்களை பெற முயற்சிக்க வேண்டும். ஆனால், பயணிகள் சிலர் அப்படி செய்வதில்லை. இரவு நேரத்தில் நடைமேடைகளிலேயே வெளிச்சம் இல்லாத இடத்தில் தூங்குகிறார்கள். இவ்வாறு செய்யாமல் பயணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஓய்வறைகளை பயன்படுத்த வேண்டும். குறிப்பாக குழந்தைகளுடன் வருபவர்கள் பாதுகாப்பு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஓய்வறைகளை பயணிகள் பயன்படுத்தினால் இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க முடியும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x