Published : 09 May 2014 09:12 AM
Last Updated : 09 May 2014 09:12 AM
தென் மாவட்டங்களில் அணைப் பகுதிகளிலும், பிற இடங்களிலும் வியாழக்கிழமையும் மழை நீடித்தது. அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் 143 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட பாபநாசம் நீர்மட்டம் புதன்கிழமை காலையில் 40.10 அடியாக இருந்தது. வியாழக்கிழமை 44.90 அடியாக உயர்ந்திருந்தது. மணிமுத்தாறு நீர்மட்டம் 63.60 அடியிலிருந்து 64.70 அடியாக உயர்ந்திருந்தது. மழை நீடிப்பதால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் மூடப்பட்டுள்ளன.
செங்கோட்டை மற்றும் ஆலங்குளத்தில் மின்சாரம் தாக்கி ஒரு பெண் உட்பட இருவர் உயிரிழந்தனர். பாவூர் சத்திரம், ஆலங்குளம், அடைக்கலப் பட்டினம் பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன.
அருவிகளில் அனுமதி
திருநெல்வேலியில் தாமிர பரணியில் (தாமிரவருணி) 2-வது நாளாக வியாழக்கிழமை வெள்ளம் கரைபுரண்டது. குற்றாலம் அருவி களில் வெள்ளப்பெருக்கு குறைந் ததால் சுற்றுலாப் பயணிகள் வியாழக்கிழமை குளிக்க அனுமதிக் கப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு வாரத்துக்கும் மேலாக மழை கொட்டுகிறது. குழித்துறை தாமிரபரணி ஆறு, பழையாறு, வள்ளியாறுகளில் தண்ணீர் அதிக அளவில் ஓடுகிறது. திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் கோடை விடுமுறைக்கு சுற்றுலா வந்தவர்கள் உற்சாக குளியல் போட்டனர்.
தூத்துக்குடி
புதன்கிழமை இரவில் பெய்த கனமழை காரணமாக, தூத்துக்குடி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி யளித்தன. தொடர் மழை காரணமாக, நாட்டுப்படகு மீனவர்கள் 2-வது நாளாக வியாழக் கிழமை கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. ஆயிரக் கணக்கான நாட்டுப்படகுகள் கரையில் ஓய்வெடுத்தன. மாவட் டத்தில் ஒரே நாளில் 830.5 மி.மீ. மழை பெய்துள்ளது.
தென்மாவட்டங்களில் அதிக பட்சமாக காயல்பட்டினத்தில் 15 செ.மீ., கொட்டாரத்தில் 14.2 செ.மீ., தூத்துக்குடி 8.34 செ.மீ., திருச்செந்தூர் 9.70 செ.மீ. மழை பதிவானது.
கடலுக்கு பாய்கிறது
தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டத்தில் கட்டப்பட்டுள்ள அணைக்கு 10,000 கன அடி தண்ணீர் வருகிறது. இதனால் அணை நிரம்பி, ஆற்றில் வெள்ளம் வெளியேறுகிறது. இத்தனை நாட்கள் ஓடையாக சென்ற ஆற்றில் இப்போது பெருக்கெடுக்கும் வெள்ளம், தேக்கி வைக்க வழியின்றி வீணாக கடலுக்குப் போகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT