Published : 15 Mar 2015 01:45 PM
Last Updated : 15 Mar 2015 01:45 PM

டிராபிக் ராமசாமிக்கு ட்விட்டரில் பெருகும் ஆதரவுக் குரல்

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமிக்கு ஆதரவாக, பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் ஆதரவுக் குரல் பெருகியவண்ணம் உள்ளது.

இதற்காக, >#WeStandWithTrafficRamasamy என உருவாக்கப்பட்ட ஹேஷ்டேக், சென்னை அளவிலான ட்விட்டர் ட்ரெண்டிங்கில் ஞாயிற்றுக்கிழமை மதியம் தொடங்கி முன்னிலை வகித்துள்ளது.

டிராபிக் ராமசாமி மீதான நடவடிக்கையை விமர்சித்து பலரும் ட்விட்டர் பதிவுகளை இட்டு வருகிறார்கள். அத்துடன், டிராபிக் ராமசாமி இதுவரை சமூக ஆர்வலராக மேற்கொண்ட செயல்பாடுகளை அவர்கள் நினைகூர்ந்து வருகின்றனர்.

முன்னதாக, காரை உடைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக வேப்பேரி ஹோட்டல் உரிமையாளர் கொடுத்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்ட டிராபிக் ராமசாமி, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து நேற்று முன்தினம் அதிகாலை 2 மணி அளவில் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், அவரது உடலில் சர்க்கரை அளவு குறைந்ததும் சிறுநீரக பாதையில் பிரச்சினை இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

இதையடுத்து, டிராபிக் ராமசாமியை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து உடனடியாக அண்ணாசாலையில் உள்ள பன்னோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு மாற்றி, உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இதன் தொடர்ச்சியாக, நேற்று காலை 9 மணி அளவில் டிராபிக் ராமசாமி பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவரது உடல்நிலை நன்றாக இருக்கிறது என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

முன்னதாக, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியை அதிகாலையில் கைது செய்து சிறையில் அடைத்ததற்கான நியாயமான காரணத்தை அரசு தெரிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது நினைகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x