Published : 30 Mar 2015 01:37 PM
Last Updated : 30 Mar 2015 01:37 PM

நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை மீண்டும் பிறப்பிக்கக் கூடாது: ராமதாஸ்

நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்தை மீண்டும் பிறப்பிக்கும் திட்டத்தை கைவிட்டு, அனைத்து உழவர்களையும் வாழ விட வேண்டும் மத்திய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நிலம் எடுத்தல் சட்டத்தில் சில மாற்றங்களைச் செய்வதற்காக மத்திய அரசு கடந்த டிசம்பர் மாதம் பிறப்பித்த அவசரச் சட்டத்திற்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட ‘நிலம் கையகப்படுத்துதலில் வெளிப்படைத் தன்மை- நியாயமான இழப்பீடு பெறும் உரிமை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்தல் சட்டத் திருத்த மசோதா’ கடந்த 10-ம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இம்மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி செய்த போதிலும் அவை வெற்றி பெறவில்லை.

இதையடுத்து ஏப்ரல் 5 ஆம் தேதியுடன் காலாவதியாகவிருக்கும் நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்டத்தை மீண்டும் பிறப்பிக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்கு வசதியாக அண்மைக் காலங்களில் இல்லாத வகையில், மாநிலங்களவைக் கூட்டத் தொடர் மட்டும் முடித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் எந்த நேரமும் நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்டம் மீண்டும் பிறப்பிக்கப்படும் ஆபத்து உள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை உழவர்களுக்கு மட்டுமின்றி, மக்களுக்கும் எதிரானதாகும்.

நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் அரசு மேற்கொள்ளவிருக்கும் திருத்தங்கள் உழவர்களுக்கு நன்மை அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறி வருகிறார். ஆனால், எந்த வகையில் இது உழவர்களுக்கு நன்மை அளிக்கும் என்பது தான் தெரியவில்லை.

மக்களவையில் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட சட்டத் திருத்த மசோதா உழவர்களுக்கு இருக்கும் உரிமைகளை பறிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. 2013-ம் ஆண்டு சட்டத்தின்படி அரசு&தனியார் துறை கூட்டாண்மைத் திட்டங்களுக்காக நிலங்களை கையகப்படுத்தும் போது, அந்த நிலங்களின் உரிமையாளர்களில் 70 விழுக்காட்டினரின் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.

ஆனால், இப்போது அந்த நிபந்தனை நீக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, நிலங்களை பெரிய அளவில் கையகப்படுத்தும் போது, அதனால் ஏற்படும் சமூகத் தாக்கம் குறித்து கண்டிப்பாக ஆய்வு செய்யப்பட வேண்டும் என்ற பிரிவும் புதிய மசோதாவில் அகற்றப்பட்டிருக்கிறது.

இதற்கெல்லாம் மேலாக, பாசன வசதியுள்ள பல்வகைப் பயிர்கள் விளையும் தன்மையுள்ள நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று முந்தைய சட்டத்தில் இருந்த விதியும் நீக்கப்பட்டிருக்கிறது. கையகப்படுத்தப்பட்ட இடம் 5 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்படாமல் இருந்தால் அவற்றை திரும்பவும் அவற்றின் முந்தைய உரிமையாளர்களிடமே வழங்க பழைய சட்டத்தில் வகை செய்யப்பட்டிருந்தது. அந்தப் பிரிவையும் மத்திய அரசின் சட்டத் திருத்த மசோதா நீக்கியிருக்கிறது.

மக்களவையில் சட்டத் திருத்த மசோதா மீது நடைபெற்ற விவாதத்தின் போது எதிர்க்கட்சிகள் முன்வைத்த சுமார் 85 திருத்தங்களில் ஒன்பது மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன. அவற்றால் உழவர்களுக்கு பெரிய அளவில் நன்மை கிடைக்கப் போவதில்லை. இன்றைய நிலையில், இந்தியா முழுவதும் உள்ள உழவர்கள் பெரும் துயரத்தில் வாடிக் கொண்டிருக்கின்றனர்.

கடந்த சில வாரங்களில் வறுமை காரணமாக 12-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். வட மாநிலங்களில் எதிர்பாராதவிதமாக பெய்த மழையால் பயிர்கள் சேதமடைந்ததால் அங்குள்ள விவசாயிகள் பெரும் கடன்சுமைக்கு ஆளாகியிருக்கின்றனர். தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த உழவர்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பதுடன் பயிர்களுக்கு உரிய விலை கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நிலம் கையகப்படுத்தலில் வெளிப்படைத் தன்மையை கொண்டு வருவதற்காக தேசிய நிலப் பயன்பாட்டுக் கொள்கை கொண்டு வரப்படும் - உழவர்களின் விளைபொருட்களுக்கு உற்பத்திச் செலவுடன் 50% லாபம் சேர்த்து கொள்முதல் நிலை நிர்ணயிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து தான் நரேந்திர மோடி பிரதமர் ஆனார். ஆனால், மத்தியில் நரேந்திர மோடி அரசு பதவியேற்றதும் பயிர்களுக்கான கொள்முதல் விலையை சுமார் 4 விழுக்காடு மட்டுமே உயர்த்தியதுடன், மாநில அரசுகள் ஊக்கத்தொகை வழங்கக்கூடாது என்றும் ஆணையிட்டது.

இதனால் உழவர்கள் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், அவர்களின் வாழ்வாதாரத்தை அடியோடு பறிக்கும் வகையில் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது மனிதாபிமான செயலா? என மத்திய அரசு சிந்திக்க வேண்டும்.

மத்தியில் நரேந்திர மோடி அரசு பதவியேற்று 10 மாதங்கள் முடிவடைவதற்குள்ளாகவே பிரதமரின் செல்வாக்குக் குறையத் தொடங்கி விட்டதாக இந்திய கள நிலைமையை ஆய்வு செய்த இராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

இதை தமது அரசின் வேளாண் துறை செயல்பாடு குறித்த மதிப்பீடாக பிரதமர் கருத வேண்டும். வேளாண் தொழிலை அடியோடு அழிக்கும் நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியாத சூழல் நிலவும் நிலையில், அதை வரிந்து கட்டிக் கொண்டு விவசாயிகள் மீது திணிப்பதை கைவிட்டு, அது குறித்த அவசர சட்டம் தானாக காலாவதியாக அனுமதிக்க வேண்டும். இதற்காக அவசரச் சட்டத்தை மீண்டும் பிறப்பிக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்; அனைத்து உழவர்களையும் வாழ விட வேண்டும்" என ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x