Published : 10 Mar 2015 03:24 PM
Last Updated : 10 Mar 2015 03:24 PM
அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. போன்ற மழலையர் வகுப்புகளைத் தொடங்கிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "மழலையர் வகுப்புகளில் குழந்தைகளைச் சேர்க்கும் ஆர்வம் பெற்றோர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதனைப் பயன்படுத்தி தனியார் பள்ளிகள் கூடுதலான கட்டணத்தை வசூலித்து வருகின்றன.
இத்தகைய பள்ளிகளில் சேர்க்க பெற்றோர்கள் கடன் வாங்கிப் படிக்க வைக்கின்றனர். இதனால், ஏழை எளிய மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
பெற்றோர்களின் ஆர்வத்தைப் பயன்படுத்தி தனியார் பள்ளிகள் மிகுதியான கட்டணத்தை வசூக்கின்றன. ஒன்றாம் வகுப்பில் சேர்வதற்குக் கூட எல்.கே.ஜி., யு.கே.ஜி. படித்திருக்க வேண்டும் என்ற தகுதி நிர்ணயம் எழுதப்படாத விதியாக இருப்பதற்கு பெற்றோர்களின் ஆர்வம் காரணமா? அல்லது பள்ளிகளின் நிர்பந்தம் காரணமாக? என்ற விவாதத்தை உருவாக்குகிறது.
தெரிந்தோ தெரியாமலோ ப்ரீ.கே.ஜி முதலே பள்ளிப்படிப்பு ஆரம்பம் என்பது நடைமுறையாகிவிட்டது. எனவேதான், இந்தப் பிரச்சினையில் அரசு களமிறங்க வேண்டும் என்று கருதுகிறேன்.
தனியார் பள்ளிகளைப் போல் அரசுப் பள்ளிகளிலும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. போன்ற மழலையர் வகுப்புகளைத் தொடங்கினால், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பதோடு, தனியார்ப் பள்ளிகளின் கட்டண வசூலை தடுக்கவும் முடியும்.
எனவே, தமிழக அரசு வரும் கல்வியாண்டு முதல் அரசு ஆரம்பப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகளைத் தொடங்கிட வேண்டும்" என்று சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT