Published : 11 May 2014 12:00 AM
Last Updated : 11 May 2014 12:00 AM
ஒரே நேரத்தில் வெளியான உச்ச நீதிமன்றத்தின் இரண்டு வெவ்வேறு தீர்ப்புகள் தமிழகத்தில் நேர் எதிரான உணர்வுகளை தட்டி எழுப்பி இருக்கிறது. முல்லைப் பெரியாறு தொடர்பான தீர்ப்பை தமிழகம் கொண்டாடுகிறது. ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக கொந்தளிக்கிறது.
இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித் திருப்பது குறித்து ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க தொடர்ந்து போராடிவரும் அமைப்பினர்களிடம் ‘தி இந்து’வுக்காக பேசினோம்.
பேராசிரியர் கரு.அம்பலத்தரசு - அமைப்பாளர் தமிழக வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு நல பாதுகாப்பு சங்கம்: ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு இதெல்லாம் மதம் சார்ந்த தெய்வ வழிபாட்டுத் திருவிழாக்கள். இது இந்திய அரசியல் சாசனத்தில் நமக்கு வழங்கப்பட்டுள்ள ஜீவாதார அடிப்படை உரிமை.
ஜல்லிக்கட்டு தடையால் சில அந்நிய நாடுகள் கொண்டாட் டத்தில் இருக்கின்றன. எந்த தட்பவெப்பத்திலும் உயிர்வாழும் காங்கயம் காளைகள் உள்ளிட்ட காளைகள் நமது நாட்டில் உள்ளன. ஜல்லிக்கட்டு வழக்கத் தில் இருப்பதால் இந்தக் காளைகளை நம்மவர்கள் பேணி வளர்க்கின்றனர். இதனால் நமது நாட்டு மாடுகள் இனம் அழியாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு இல்லாவிட்டால் இந்தக் காளைகளை எல்லாம் அடிமாட்டுக்கு கொடுத்துவிடுவர். இதனால் நம்நாட்டு பசு மாடு இனப்பெருக்கம் கொஞ்சம் கொஞ்சமாய் அழிந்துபோகும். பிறகு, அதிக பால் தருவதாக ஆசை வார்த்தை காட்டி அயல்நாட்டு மாடுகளை இங்கே இறக்குமதி செய்வர். அதற்கான தீவனத்தையும் அங்கிருந்தே இறக்குமதி செய்வர். இதற்காகத்தான் அந்நிய நாடுகள் காத்துக் கொண்டிருக்கின்றன. அவர்களின் திட்டம் பலிக்கக்கூடாது. எனவே, தீர்ப்பை எதிர்த்து அரசியல் சாசன பெஞ்சில் அப்பீல் செய்ய இருக்கிறோம்.
பி.ராஜசேகரன் - தமிழக ஜல்லிக்கட்டு பேரவை மாநிலத் தலைவர்: ஜப்பான், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, ஸ்வீடன், இத்தாலி போன்ற நாடுகளில் மாடுகளை வைத்து ’புல் ஃபைட்’ நடத்துகிறார்கள்.
அதை எல்லாம் தடை செய்யவேண்டும் என்ற கோரிக்கைகள் இருந்தாலும் இதுவரை தடை விதிக்கப்பட வில்லை. ‘புல் ஃபைட்’டில் தோற்கும் மாடுகளை மறுநாளே குத்திக்கொன்று மாமிசமாக்கி விடுகிறார்கள்.
ஆனால், நாம் அப்படிச் செய்வதில்லை. போற்றிப் பாதுகாக்கிறோம். ஜல்லிக்கட்டு மாடுகள் இறந்துபோனால் சமாதி கட்டி கும்பிடுகிறோம்.ஜல்லிக்கட்டை தடை செய்யக் கூடாது என 12 வழக்குகள் தொடுத் திருக்கிறோம். அந்த மனுக்களில் தடை செய்யத் தேவையில்லை என்பதற்கான வலுவான ஆதாரங் களை எடுத்து வைத்திருந்தோம். ஆனாலும் எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. எனவே, தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்கு உரிய சட்டப் பாதுகாப்புக் கொடுக்க வேண்டும்.
பாலாஜி - கவுரவத் தலைவர் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாக்குழு: ஜல்லிக்கட்டுக்கு மிருகவதை தடைச் சட்டம் பொருந்தாது. அறுவடை முடிந்ததும், தமிழர்கள் தங்களுக் காக உழைத்த மாடுகளுக்கு நன்றி சொல்லும் விதமாகத்தான் ஜல்லிக்கட்டு நடத்துகிறார்கள். கம்ப்யூட்டர் காலத்தில் இதெல் லாம் தேவையா என்று சிலர் கேட்கிறார்கள். குக்கிராமத்தில் இருக்கும் எங்களால் உச்ச நீதிமன்றத்துக்குப் போய் வாதாட முடியாது. தமிழக அரசுதான் இந்த விஷயத்தில் உறுதியான நடவடிக்கை எடுத்து தமிழ் கலாச்சாரத்தின் அடையாளமான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT