Published : 10 Mar 2015 10:27 AM
Last Updated : 10 Mar 2015 10:27 AM

தமிழகத்தில் கவுரவக் கொலை தொடர்கிறது: முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் பதில்

தமிழகத்தில் கவுரவக் கொலைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

வேலூரில் நேற்று நிருபர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: காப்பீட்டுத் துறையில் நேரடி அந்நிய முதலீட்டை எதிர்க்கிறோம். நிலம் கையகப்படுத்தும் மசோதா 2003-ம் ஆண்டே கொண்டு வரப்பட்டது. இதில் திருத்தம் செய்யாமல் மத்திய அரசு முழுமையாகத் திரும்பப்பெற வேண்டும்.

தமிழ்நாட்டில் கவுரவக் கொலைகள் நடைபெறவில்லை என முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பிப்ரவரி 20-ம் தேதி சட்டப்பேரவையில் தெரிவித்தார். ஆனால், அவர் தகவல் தெரிவிப்பதற்கு முன்பு 48 கொலைகளும், அதன் பிறகு 4 கவுரவக் கொலைகளும் நடந்துள்ளன.

பிரதமர் மோடியின் இலங்கை சுற்றுப்பயணத்தில் மீனவர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் பிரச்சினைகள் முழுமையாகத் தீர்க்கப்பட வேண்டும். இலங்கையில் 13-வது சட்டத் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏப்ரல் மாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்த உள்ளோம். புதிய பொருளாதாரக் கொள்கையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் மாற்றுக் கொள்கை, தீண்டாமை கொடுமை, பொதுவாழ்வில் ஊழல் இல்லாத நிர்வாகம் என 4 கருத்துகளை வலியுறுத்தி இந்த இயக்கம் நடைபெறும்.

பாலாற்றில் நடைபெறும் மணல் கொள்ளையை அரசு தடுக்க வேண்டும். மணல் குவாரிக்கு எதிராகப் போராடும் மக்கள் மீது காவல் துறை வழக்கு பதிவு செய்வதை கண்டிக்கிறோம்.

உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி மணல் குவாரி செயல்படுவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். மணல் குவாரியில் நடைபெறும் ஊழலை அரசு தடுக்கவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x