Published : 30 Mar 2015 09:52 AM
Last Updated : 30 Mar 2015 09:52 AM

நிலம் கையக சட்டத்தை அதிமுக ஆதரிக்கக் கூடாது: ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தல்

நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்தத்தை மாநிலங்களவையில் அதிமுக ஆதரிக்கக்கூடாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தினார்.

தமிழக காங்கிரஸ் சிறுபான்மை அணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று சென்னை வந்த ஜெய்ராம் ரமேஷ், சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களிடம் கூறியதாவது:

காங்கிரஸ் அரசு 2013-ம் ஆண்டில் கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் பாஜக அரசு திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்திருத்தத்தை மக்களவையில் தனக்குள்ள பெரும்பான்மை பலத்தை கொண்டு பாஜக நிறைவேற்றியுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், பாஜக கூட்டணியில் உள்ள சிவசேனாவும் கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், மாநிலங்களவையிலும் இந்த சட்டத்திருத்தத்தை நிறைவேற்ற பாஜக அரசு முயற்சி எடுத்து வருகிறது.

இதை ஒருபோதும் காங் கிரஸ் ஆதரிக்காது. நிலத்தை கைய கப்படுத்த விவசாயிகளின் ஒப்பு தலைப் பெற வேண்டியதில்லை, எந்த நோக்கத்துக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டதோ அந்த நோக்கம் 5 ஆண்டுகளுக்குள்ளாக நிறைவேறாவிட்டால் நிலத்தை உரிமையாளர்களிடம் கொடுக்கத் தேவையில்லை என்பன போன்ற 5 பிரதான காரணங்களுக்காக இந்தச் சட்டத்தை காங்கிரஸ் எதிர்க்கிறது.

நாட்டின் பாதுகாப்புக்காகத் தான் இந்த சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி பொய்யான தகவல்களை கூறி வருகிறார். இதுகுறித்த உண்மை நிலையை மத்திய அமைச்சர் நிதின் கட்காரிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதமாக அனுப்பியுள்ளார்.

சர்வாதிகார முறையில் பாஜக அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டத் திருத்தத்தை மாநிலங் களவையில் அதிமுக ஆதரிக்கக் கூடாது.

இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:

இச்சட்டத்தை மறுபரிசீலனை செய்யத் தயார் என்று பாஜகவினர் கூறியுள்ளனரே?

என்ன மறுபரிசீலனையை மேற்கொள்ளப் போகிறார்கள். அது தொடர்பாக அவர்கள் விளக்கமாக சொல்லலாமே. ஊடகங்கள் மூலம் சட்டத்திருத்தங்களை மேற்கொள்ள முடியாது. இதை அவையில் கூற வேண்டும்.

இந்த சட்டத்திருத்தம் மாநில அரசுகளின் பங்களிப்புக்கும் வாய்ப்பு தருவதாக கூறப்படுகிறதே?

மாநில அரசு ஜனநாயக முறைப்படி சட்டம் இயற்றி நிலத்தை கையகப்படுத்தலாம். ஆனால், சர்வாதிகார முறையில் விவசாயிகளை பாதிக்கும் வண்ணம் பாஜக கொண்டு வந்துள்ள சட்டத்தை ஏன் ஆதரிக்க வேண்டும்?

ராகுல் காந்தி எங்கே உள்ளார்?

எனக்கு காது கேட்க வில்லை

காவிரியின் குறுக்கே மேகே தாட்டுவில் அணைகட்டும் விவகாரத்தில் காங்கிரஸ் நிலைப்பாடு என்ன?

நிலம் கையகப்படுத்தும் சட்டத் தைப் பற்றி மட்டுமே கேளுங்கள்.

இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

பேட்டியின்போது தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x