Published : 30 Mar 2015 10:32 AM
Last Updated : 30 Mar 2015 10:32 AM

பரபரப்பான சாலைக்கு அருகில் மரத்தில் 200-க்கும் அதிகமான கூடு கட்டி வாழும் பறவைகள்:மனித வாழ்வியல் ஓட்டத்தோடு ஒன்றிவிட்ட அதிசயம்

நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இரு பருவ காலங்களிலும் நன்கு மழை பொழிவதால் இங்குள்ள நீர்நிலைகளில் ஆண்டு முழுவதும் தண்ணீர் காணப்படும். இதனால், இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பறவைகள் இங்கு வந்து தங்கள் வாழ்வியலை அமைத்துக் கொள்கின்றன.

பொதுவாக, ஆள் அரவம் இல் லாத அமைதியான பகுதிகளில்தான் பறவைகள் கூடு கட்டி வாழ்வது வழக்கம். ஆனால், நாகர்கோவில் - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை யில் சுசீந்திரம் பெரியகுளத்தில் உள்ள மரத்தில், பரபரப்பான மக்கள் ஓட்டத்துக்கு மத்தியில் 200-க்கும் அதிகமான உள்நாட்டு பறவைகள் கூடுகட்டி வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும் இனப் பெருக்கம், உணவுத் தேவை, பாதுகாப்பு, வாழ்வியலுக்கு ஏற்ற சூழல் உள்ளிட்ட காரணங்களுக்காக குறிப்பிட்ட மாதங்களில் வெளிநாட்டு பறவைகளும் கன்னியாகுமரி மாவட் டத்தில் வந்து முகாமிட்டு செல்வது வழக்கம். ஊசி வால் வாத்து, வரித் தலை வாத்து, டெர்ன் என நீண்ட பட்டியலே படிக்கின்றனர் குமரி மாவட்ட பறவை ஆர்வலர்கள்.

உலக அளவில் பல்லுயிர் பெருக்கம் நிறைந்த 15 இடங்கள் தேர்வு செய்யப்பட்டது. அதில், கன்னியாகுமரி மாவட்டமும் இடம் பெற்றுள்ளது. யுனெஸ்கோ நிறுவ னத்தால் இயற்கை சூழல், பாரம் பரியம் மிகுந்த பகுதியாக கன்னியாகுமரி அறிவிக்கப்பட்டுள் ளது. தமிழக அரசும் கன்னியாகுமரி மாவட்டத்தில் சுசீந்திரம், தேரூர் பெரிய குளங்கள், மணக்குடி காயல் ஆகிய பகுதிகளை பறவைகள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில், ஆரல்வாய் மொழியில் உள்ள வன விரிவாக்க மையத்தின் ஏற்பாட்டில் சுற்றுச் சூழல் கல்வியாளர் டேவிட்சன் தலைமையில் அரசுப் பள்ளி மாணவர்களை சுசீந்திரம் குளத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய குளத்தின் நடுவே உள்ள தீவில் வளர்ந்துள்ள மரங்களில் உள்நாட்டு பறவைகள் 200-க்கும் அதிகமான கூடு கட்டி வாழ்ந்து வருவது தெரிய வந்தது.

இதுபற்றி டேவிட்சன் கூறியதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வந்த வெள்ளை அரிவாள் மூக்கன் என்ற பறவை கடந்த ஆண்டுதான் முதன்முதலாக கூடு கட்டியது. இந்த முறையும் அது இங்கு கூடி கட்டி வசித்து வருகிறது. தவிர, நத்தை கொத்தி நாரை, கூழக்கடா ஆகிய உள்நாட்டு பறவைகளும் கூடு கட்டி முட்டையிட்டு இனவிருத்தி செய்துள் ளன. பொதுவாக, பறவைகள் மனிதத் தலையீடு உள்ள பகுதியில் வசிக்காது. ஆனால், எப்போதும் போக்கு வரத்து நிறைந்த கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை பகுதியில், பறவைகள் 200 கூடுகள் கட்டி வசிப்பது மிகவும் அரிதானது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நிலவும் இதமான சீதோஷ்ண நிலை, குளத்தில் பறவைகளுக்கு தேவை யான மீன் உணவும் கிடைப்பது ஆகியவையே பறவைகள் எண் ணிக்கை இங்கு அதிகரிக்க காரணம். இவ்வாறு அவர் கூறினார்.

அதேநேரத்தில், குமரி மாவட்டத்தில் பறவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் விளை பயிர்களை கபளீகரம் செய்து விடுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆனால், இயற்கை ஆர்வலர்களோ பறவைகள் அதிகரிப்பது விவசாயத் துக்கு நன்மை பயக்கும் செயல். பறவைகள் வயல் வெளிகளில் உள்ள தீமை செய்யும் பூச்சிகளையே அழிக்கின்றன. இது ஒரு சிறந்த இயற்கை பூச்சி கட்டுப்பாட்டு கருவியாக செயல்படுகிறது என்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x