Published : 20 Mar 2015 04:53 PM
Last Updated : 20 Mar 2015 04:53 PM
பொள்ளாச்சி அருகே உள்ள நவமலையில் ஒரு பெரிய மின் உற்பத்தி நிலையம் இருந்தும், அங்குள்ள பழங்குடி மக்களுக்கு மின்சார வசதி இல்லை. வனத்தினுள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலத்தை மீட்டு, நிரந்தர வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டுமென இவர்கள் வலியுறுத்துகின்றனர்.
கோட்டூர் பேரூராட்சியின், 12-வது வார்டுக்கு உட்பட்ட பகுதி நவமலை பழங்குடி கிராமம். ஆழியாறு அணையின் பின்புறத்தில், ஆழியாறு துணை மின்நிலையத்தை ஒட்டி, அடர்ந்த மலைகள் சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ளது இந்த கிராமம்.
4 தலைமுறையாக…
மின்வாரிய ஊழியர்கள் குடியிருப்புகளுடன், சுமார் 30-க்கும் அதிகமான மலசர் இன பழங்குடி மக்களின் வீடுகளும் இங்குள்ளன. இவர்கள் சுமார் 4 தலைமுறைகளாக இங்கு வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் வாக்குரிமை உள்ளது. பெருக்கெடுக்கும் காட்டாறு, வனவிலங்குகள் ஊடுருவல் மத்தியில் வசிக்கும் இந்த மக்களுக்கு வனத்துறையோ, உள்ளாட்சி நிர்வாகமோ இதுவரையிலும் நிரந்தரமான வீடுகளை கட்டிக் கொடுக்கவில்லை.
பிழைப்பு தேடி சமவெளிக்கு
சில வருடங்களுக்கு முன் புளியங்கண்டி என்ற இடத்தில் நவமலை மக்களுக்கு இடம் ஒதுக்க அரசு திட்டமிட்டது. ஆனால் அங்கு வசதிகள் குறைவு என்பதால், இந்த மக்கள் அதனை ஏற்கவில்லை. எனவே நவமலை கிராமத்திலேயே வசதிகள் செய்து கொடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை, எந்த வளர்ச்சியும் இல்லாததால், பூர்வீக கிராமத்தை விட்டு விரக்தியுடன் சமவெளியில் பிழைப்பு தேடும் முடிவுக்கு இந்த மக்கள் வந்துள்ளனர்.
‘ஆழியாறிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் வனத்தினுள் இருப்பதால், எளிதில் வேலைக்குச் சென்றுவர முடியவில்லை. பொதுக்கழிப்பிடம் இல்லை. உயர்நிலை படிப்புக்கு ஆழியாறு செல்ல வேண்டி இருக்கிறது. அரசின் இலவசப் பொருட்கள் கிடைக்கவில்லை. மின்வாரிய ஊழியர்கள் வீடுகளுக்கு மட்டும் மின்வசதி உள்ளது. பல வருடங்களாக இருக்கும் எங்கள் வீடுகளுக்கு மின்வசதி இல்லை. குறைந்தபட்சம் சோலார் மின்விளக்குகள் கூட இதுவரை கொடுக்கவில்லை’ என குறைகளை பட்டியலிடுகின்றனர் நவமலை பழங்குடி மக்கள்.
சலுகைகள் யாருக்கு?
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க நிர்வாகி பரமசிவம் கூறும்போது, ‘மின் உற்பத்தி நிலையத்தின் அருகே வசித்தாலும், இந்த மக்களால் மின்சாரத்தை பயன்படுத்த முடியாது. நவமலை கிராமம், ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி. ஆனால் பல நூறு ஏக்கர் நிலத்துக்கு பட்டா பெற்று தனியார் தோட்டங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. அந்த தோட்டங்களுக்கு மின்வேலி அமைக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. பல ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது.
ஆனால், காலம் காலமாக இங்கு வாழும் பழங்குடி மக்களுக்கு பட்டா இல்லை. நிரந்தர வீடுகள் இல்லாததால், ஒழுகும் ஓலைக் குடிசைகளில் வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். மின்வேலிகளுக்கு அனுமதி கொடுக்கும்போது, வீடுகளுக்கு ஏன் மின்சாரம் கொடுக்கக்கூடாது? அரசின் சலுகைகள் யாருக்கானது என்பதே சந்தேகமாக உள்ளது.
குறைந்தபட்சம் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு, பழங்குடி மக்களுக்கு பட்டாவுடன் கூடிய வீடுகள் அமைத்துக் கொடுக்க வேண்டும். இந்த மக்களின் தேவைகளை கோரிக்கைகளாக வைத்து, பல முறை மனுக்கள் கொடுத்து விட்டோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’ என்றார்.
மலைகள் சூழ்ந்துள்ள நவமலை கிராமம்.
‘வீடுகள் கட்ட சாத்தியமில்லை’
கோட்டூர் பேரூராட்சித் தலைவர் பூங்கோதை கூறியது: ‘பல வார்டுகளுக்கு இலவசப் பொருட்கள் இன்னமும் கொடுக்கப்படவில்லை என்பதே உண்மை. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகே, நவமலை மக்களுக்கு சாதி, வருமானம் உள்ளிட்ட சான்றுகள் பெற்றுத் தரப்பட்டுள்ளன. தவிர இந்த ஆண்டு பொதுநிதியில் இருந்து 12-வது வார்டுக்கு ரூ.5 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. பேரூராட்சிகளில் பசுமை வீடுகள் கட்ட முடியாது. எனவே வீடுகள் கட்டிக் கொடுப்பது சாத்தியமில்லை. பஞ்சாயத்தில் 46 சோலார் விளக்குகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு, 23 விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள விளக்குகள் விரைவில் பொருத்தப்படும்’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT