Published : 14 Mar 2015 11:02 AM
Last Updated : 14 Mar 2015 11:02 AM

பார்வையற்ற பட்டதாரிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றிடுக: விஜயகாந்த்

ஆசிரியர் பணியிடம் குறித்த விவகாரத்தில் பார்வையற்ற பட்டதாரிகளின் கோரிக்கைகளை அதிமுக அரசு உடனடியான நிறைவேற்ற வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' தமிழகத்தில் விவசாயிகள், தொழிலாளர்கள், நெசவாளர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டம் நடத்தும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்களது நியாயமான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதும் இல்லை, பரிசீலனைகூட செய்யப்படுவதில்லை.

பார்வையற்றோருக்கான பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணி இடங்களை, பார்வையற்றவர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 2013-ம் ஆண்டு பார்வையற்ற மாற்றுதிறனாளிகள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது முதலமைச்சராக இருந்த குற்றவாளி ஜெயலலிதா அறிக்கை மூலம் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்ததின்பேரில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

சுமார் 18 மாதங்களாகியும் இதுவரையிலும் பார்வையற்றவர்களின் கோரிக்கைகளில் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை. அதனால் கடந்த 5 நாட்களாக பார்வையற்ற பட்டதாரி சங்கத்தினர் சுமார் 200க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்திலும், சாலை மறியலிலும் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை காவல் துறையின் மூலம் பலவந்தப்படுத்தி, குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று, வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியுள்ளனர். மனசாட்சியுள்ள யாரும் இது போன்ற செயலை செய்ய துணிய மாட்டார்கள். எனவே இச்சம்பவத்தை தேமுதிக சார்பில் நான் வன்மையாக கண்டிக்கிறேன். மேலும் சமூக நலத்துறை அமைச்சர் பா. வளர்மதியுடன் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததால்தான், தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளனர்.

ஆனால், முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமோ இதுவரையிலும் அவர்களை சந்திக்கவில்லை. பார்வையற்று தங்களுடைய வாழ்வாதாரத்திற்கு வழி தேடும் இவர்களை சந்திப்பதற்கு முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு நேரம் இல்லையா? இல்லை அவரின் மனதிலே இரக்கம் இல்லையா?

குற்றவாளி ஜெயலலிதாவின் வழிகாட்டுதல்படி நடைபெறும் இந்த ஆட்சியில், பார்வையற்றவர்களின் நிலையே இப்படி என்றால் சாதாரண, சாமானிய மக்களை பற்றி சொல்லவே தேவையில்லை. தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் பலவும் காற்றிலே பறந்து கொண்டிருக்கிறது. பார்வையற்ற பட்டதாரிகளுக்கு கொடுத்த வாக்குறுதியும் அதில் அடக்கம் போலும். குற்றவாளி ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதியைத்தானே பார்வையற்றவர்கள் செயல்படுத்த சொல்கிறார்கள். எனவே அதிமுக அரசு பார்வையற்ற பட்டதாரிகளின் கோரிக்கைகளை உடனடியான நிறைவேற்ற வேண்டும்.'' என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x