Published : 09 Mar 2015 10:32 AM
Last Updated : 09 Mar 2015 10:32 AM

மதிய உணவில் வாழைப்பழம், நெல்லிக்காய்: பாமக வெளியிட்ட நிழல் பட்ஜெட்டில் அறிவிப்பு

மதிய உணவில் குழந்தைகளுக்கு வாழைப்பழம், நெல்லிக்காய் கொடுப்பதோடு, கீரையையும், பழங்களையும் கட்டாயமாக கொடுக்க ஏற்பாடு செய்யப்படும் என்று பாமக வெளியிட்ட வேளாண் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக ஆண்டுதோறும் நிழல் பட்ஜெட்டை பாமக வெளியிட்டு வருகிறது. பாமக ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்யப்படும் என அதில் கூறப்பட்டிருக்கும். 2015-16ம் ஆண்டுக்கான வேளாண் நிழல் பட்ஜெட்டை, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டார்.

அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஒரு கிராமத்தில் நிலம் எடுப்பதாக இருந்தால் கிராம சபையைக் கூட்டி வாக்கெடுப்பு நடத்த வேண்டும். கிராமசபையில் எதிர்ப்பு தெரிவித்தால் நிலம் எடுக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்.

பால் உற்பத்தியை பெருக்கி மானிய விலையில் மக்களுக்கு பால் விநியோகம் செய்யப்படும். ஊட்டச்சத்தான கீரையை பால் பாக்கெட் போல பைகளில் அடைத்து வீடுதோறும் வழங்க ஏற்பாடு செய்யப்படும். மதிய உணவில் குழந்தைகளுக்கு வாழைப் பழம், நெல்லிக்காய் கொடுப்பதோடு, கீரையையும், பழங்களையும் கட்டாயமாக உணவோடு கொடுக்க ஏற்பாடு செய்யப்படும். வேளாண் பயிர் மண்டலங்கள் ஏற்படுத்தப்படும்.

பனை மரங்கள் வெட்ட தடை விதிக்கப்படும். பனை சார்ந்த தொழில்கள் ஊக்குவிக்கப்படும். தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு ஒன்று வீதம் மொத்தம் 4 வேளாண் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படும். பொள்ளாச்சி யில் தென்னை தொழில்நுட்ப பூங்கா, சேலத்தில் பாக்கு தொழில்நுட்ப பூங்கா, திருச்சியில் மாநில வாசனைப் பொருட்கள் வாரியம் தொடங்கபடும்.

ஊட்டியில் தேயிலை, காய்கறி பயிர்களுக்கும் பொள்ளாச்சியில் தேங்காய், தருமபுரியில் மாம்பழம், தேனியில் வாழை மற்றும் திராட்சை, கடலூரில் பலா மற்றும் முந்திரி, மதுரையில் மல்லிகை மற்றும் மலர் வகைகள், ஏற்காட்டில் காபி மற்றும் மிளகு, தஞ்சாவூரில் நெல் ஆகிய சந்தைகள் அமைக்கப்படும். கரும்பு உற்பத்தியை மேம்படுத்த டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் விலை நிர்ணயிக்கப்படும். வேளாண் இயந்திரங்கள் குறைந்த விலையில் விற்க வழிவகை செய்யப்படும். விவசாய வேலைகள் 100 நாள் வேலை திட்டத்தில் சேர்த்துக் கொள்ள வழிவகை செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நிழல் பட்ஜெட்டை வெளியிட்ட பிறகு நிருபர்களிடம் ராமதாஸ் கூறும்போது, ‘‘காமராஜருக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி செய்தவர்கள் விவசாய வளர்ச்சியில் கவனம் செலுத்தவில்லை. முன்னாள் வேளாண்மைத்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே செல்கிறது. சில அமைச்சர்களிடம் பல துறைகள் கொடுக்கப்படுவதால், அவர்களால் முழுமையாக செயல்பட முடியவில்லை’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x