Published : 03 Mar 2015 08:19 AM
Last Updated : 03 Mar 2015 08:19 AM

மீத்தேன் திட்டத்துக்கு தடை வருமா?- நிபுணர் குழு இன்று இறுதி முடிவு - அரசிடம் விரைவில் அறிக்கை தாக்கல்

மீத்தேன் எரிவாயு திட்டத்தால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் இறுதிக் கூட்டம் சென்னையில் இன்று நடக்கிறது. இதில், ஆய்வு அறிக்கை இறுதி செய்யப்பட்டு, விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கப் படும் என தெரிகிறது.

தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் 691 சதுர கி.மீ. பரப்பளவிலான நிலக்கரி படுகையில் ஆய்வு செய்து மீத்தேன் எரிவாயு உற்பத்தி செய்வதற்கு ‘கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட்’ என்ற தனியார் நிறுவனத்துக்கு மத்திய அரசு கடந்த 2010-ல் அனுமதி அளித்திருந்தது. இத் திட்டத்துக்கு விவசாயிகளும் பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. போராட்டங்களும் நடத்தப்பட்டன.

இந்நிலையில், மீத்தேன் எரிவாயு திட்டத்தை செயல்படுத் தினால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்ய கடந்த 2013-ல் நிபுணர் குழு ஒன்றை அமைத்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இந்தக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப் படையில், விவசாயிகளுக்கு சிறிதளவு பாதிப்பு இருந்தாலும் அத்திட்டத்துக்கு அனுமதி வழங்கப் படாது என்றும் அறிவித்திருந்தார்.

நிபுணர் குழுவின் தலைவராக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத் தலைவர் கே.ஸ்கந்தன் உள்ளார். அண்ணா பல்கலைக் கழக வேதியியல் துறை பேராசிரியர் பி.கண்ணன், ஐஐடி நிறுவன வேதிப் பொறியியல் துறை பேராசிரியர் பி.எஸ்.டி.சாய், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் அறிவியல் துறை பேராசிரியர் பி.துரைசாமி, எம்.எஸ்.சுவாமி நாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை இயக்குநர் வி.செல்வம், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் எல்.முனியப்பன், அரசு வேளாண் துறை துணை இயக்குநர் பி.எஸ்.கருணாகரன், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக வளர்ச்சிப் பிரிவு மேலாளர் ஆர்.கார்த்திகேயன் ஆகியோர் குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்தக் குழுவின் இரு ஆய்வுக் கூட்டங்கள் ஏற்கெனவே நடத்தப்பட்டுள்ளன. அக் கூட்டங்களில் மீத்தேன் திட்டம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை நிபுணர் குழு எழுப்பியது. அதற்கான பதில்களை கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி நிறுவனம் தெரிவிக்கவில்லை எனத் தெரிகிறது. இது தொடர்பாக இடைக்கால அறிக்கை ஒன்றை நிபுணர் குழு, தமிழக அரசுக்கு ஏற்கெனவே வழங்கியுள்ளது.

இந்நிலையில் நிபுணர் குழுவின் 3-வது மற்றும் இறுதிக் கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள மாசுக்கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு நடக்கிறது. இதில், மீத்தேன் திட்டத்தால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து அரசுக்கு அளிக்க வேண்டிய அறிக்கை இறுதி வடிவம் பெறும் என்றும், விரைவில் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிகிறது.

இந்த அறிக்கையின் அடிப் படையில், மீத்தேன் திட்டத்தை செயல்படுத்துவதா, வேண்டாமா என்பது குறித்து அரசு முடிவெடுக்கும் என்றும் மாசுக் கட்டுப்பாடு வாரிய அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

மீத்தேன் திட்டம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை நிபுணர் குழு எழுப்பியது. அதற்கான பதில்களை கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி நிறுவனம் தெரிவிக்கவில்லை எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x