Published : 24 Mar 2015 08:40 AM
Last Updated : 24 Mar 2015 08:40 AM

உளுந்தூர்பேட்டை அருகே போலீஸ்காரர் கொலை: சென்னையில் கூட்டாளிகளுடன் ரவுடி சரண்

புதுச்சேரி முதலியார்பேட்டை ஜெயமூர்த்தி நகரைச் சேர்ந்த அழகானந்தம் மகன் ரகுபதி (31). ஐஆர்பி காவலர். இவரது மனைவி தாமரைச்செல்வி. இவர்களுக்கு விக்ராந்த் என்ற 2 மாத குழந்தை உள்ளது.

கடந்த 19-ம் தேதி பணி முடிந்து வீட்டுக்கு வருவதாக பெற்றோருக்கு செல்போனில் ரகுபதி தெரிவித்துள்ளார். ஆனால் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் அணைக் கப்பட்டிருந்தது. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து 20-ம் தேதி முத்தியால்பேட்டை போலீஸில் அழகானந்தம் புகார் அளித்தார்.

போலீஸார் விசாரித்தபோது காணாமல் போன ரகுபதியின் செல்போன் சிக்னல் விழுப்புரம் மாவட்டத்தில் பதிவானது தெரியவந்தது. இதுகுறித்து விழுப்புரம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது உளுந்தூர்பேட்டை சேத்தமங்கலத்தில் காயங்களுடன் ரகுபதி இறந்து கிடந்தது தெரிய வந்தது.

முதலில் விபத்து என்று போலீஸார் கருதினர். விசார ணையில் இது கொலை என்பது தெரிய வந்தது. இதற்கிடையே இவ்வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் புதுச்சேரியை சேர்ந்த ரவுடி உட்பட 7 பேர் சென்னை நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

இதுதொடர்பாக புதுச்சேரி போலீஸ் தரப்பில் கூறும்போது: கொலைவழக்கு ஒன்றில் ரவுடி நித்யானந்தம் கைது செய்யப்பட்டு புதுச்சேரி காலாப் பட்டிலுள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரை சந்திக்க அவரது மனைவி அடிக்கடி சிறைக்கு வந்து சென்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஐஆர்பி காவலர் ரகுபதியுடன் நித்தியானந்தத்தின் மனைவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதுநாளடைவில் கூடா நட்பாக மாறியது. கடந்த ஜனவரி மாதம் சிறையிலிருந்து நித்யானந்தம் வெளியே வந்தார். அப்போது அவரது மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில் செல்போன் மூலம் போலீஸ்காரர் ரகுபதியிடம் அவர் பேசியது தெரிந்தது.

சம்பவத்தன்று தனது மனைவியை மிரட்டி அவர் மூலமாக போலீஸ்காரர் ரகுபதியை நள்ளிரவில் புதுச்சேரி முத்திரையர்பாளையத்திலுள்ள தனது வீட்டுக்கு நித்யானந்தம் வரவழைத்தார். அப்போது நித்யானந்தம் தனது நண்பர்கள் 6 பேருடன் ரகுபதியை தாக்கி காரில் ஏற்றினார் அத்துடன் போலீஸ்காரர் ரகுபதியின் இருசக்கர வாகனத்தையும் எடுத்துக் கொண்டனர்.

விழுப்புரம் சேத்தமங்கலம் பகுதியில் ரகுபதியை தலையில் தாக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் சாலையில் விபத்து நடந்ததுபோல் உடலை வீசியுள்ளனர். அருகே அவரது இருசக்கர வாகனத்தையும் போட்டுள்ளனர்.

ரகுபதியின் செல்போனுக்கு கடைசியாக வந்த அழைப்பின்படி நித்தியானந்தத்தின் மனைவியிடம் விசாரித்தபோது இத்தகவல்கள் கிடைத்தன. தனது மனைவிக்கு நித்தியானந்தம் மொட்டை அடித்துவிட்டு தலைமறைவாகி யுள்ளார். நேற்று நித்யானந்தம் உட்பட 7 பேர் சென்னையில் சரண் அடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x