Last Updated : 26 Mar, 2015 05:09 PM

 

Published : 26 Mar 2015 05:09 PM
Last Updated : 26 Mar 2015 05:09 PM

நியூட்ரினோ ஆய்வுக்கு இடைக்கால தடை: வைகோ தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழக மாசுக் கட்டுப்பாடு வாரியத் தின் அனுமதியைப் பெறும்வரை நியூட்ரினோ ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் அமைக்கப்பட்டு வரும் நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி மதிமுக பொதுச் செயலர் வைகோ, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘நியூட்ரினோ திட்டத்தால் தேனி பகுதியில் நில வளம் அழியும். மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள பசுமைத் தொடர் களுக்கு பேரழிவு ஏற்படும். விவசாயம், நீர், குடிநீர், வனவிலங் குக்கு பாதிப்பு ஏற்படும். ஆய்வு மையம் அமைய உள்ள பகுதியி லிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள முல்லை பெரியாறு அணை, 60 கி.மீ. தொலைவில் உள்ள கேரள மாநிலத்தில் இடுக்கி அணை ஆகியவற்றுக்கு ஆபத்து நேரிடும். எனவே, நியூட்ரினோ திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்’ எனக் கூறப்பட்டிருந்தது.

மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை செயலர் சார்பில் மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் சேகர்பாசு தாக்கல் செய்த பதில் மனுவில், ‘நியூட்ரினோ மையத்தால் பெரும் நாசம் ஏற்படும் எனக் கூறுவது சரியல்ல. திறந்தவெளியில் உள்ள பிரபஞ்ச கதிர்களால் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக குகைக்குள் ஆய்வகம் அமைக்கப்படுகிறது. நியூட்ரினோ ஆய்வகத்தால் பாதிப்பு ஏற்படாது. மனிதகுலத்துக்கு நன்மையே ஏற்படும். எனவே, வைகோ மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ எனக் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இதற்கிடையே, பிரதான மனு மீதான விசாரணை முடியும்வரை, நியூட்ரினோ மையம் அமைக்கும் பணிகளை தொடர தடை விதிக்கக் கோரி வைகோ தரப்பில் இடைக்கால மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், வி.எஸ்.ரவி ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, வைகோ நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்டார்.

‘‘நியூட்ரினோ ஆய்வு மையம் அமைய உள்ள பொட்டிபுரம் பகுதி, மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த மலையை பாரம்பரிய நினைவுச் சின்னமாக ஐக்கிய நாடுகள் சபை 2012-ம் ஆண்டில் அறிவித்தது. அதன்படி, பாரம்பரிய நினைவுச் சின்னங்களை பாதுகாக்க வேண்டும். ஆய்வகம் அமையவுள்ள இடத்தில் இருந்து 2.2 கி.மீ. தொலைவில் கேரளத்தில் மதிகெட்டான்சோலை உள்ளது. இந்த சோலையில் இருந்து 10 கி.மீ. தொலைவில் எந்தத் திட்டங்களையும் நிறைவேற்ற முடியாது. நியூட்ரினோ திட்டத்தால் முல்லை பெரியாறு, இடுக்கி அணைகளுக்கு பேராபத்து ஏற்படும். நியூட்ரினோ ஆய்வகம் அமையவுள்ள இடத்தில் தற்போது வேலி அமைக்கப்பட்டுள்ளது. எனவே, அங்கு பணிகளை மேற் கொள்ள தடை விதிக்க வேண்டும்’’ என்று வைகோ வாதிட்டார்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ஆர்.சுவாமிநாதன் வாதிடும்போது, ‘‘தமிழக மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதி பெற்ற பிறகே கட்டுமானப் பணிகள் தொடங்கும். இது ஒரு அடிப்படை அறிவியல் திட்டம். ஆய்வு மட்டுமே நடக்கும். எதுவும் உற்பத்தி செய்யப்படாது. மையம் அமைய உள்ள பகுதியில் இருந்து 2 கி.மீ. தொலைவுக்கு அப்பால்தான் குடியிருப்புகள் அமைந்துள்ளன. அடிப்படை பணிகள் இன்னும் தொடங்காத நிலையில் திட்டத் துக்கு தடை விதிக்க வேண்டிய தில்லை’’ என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இடைக்கால மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தனர். இந்நிலையில், இடைக்கால மனு மீது நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ‘‘நியூட்ரினோ திட்டத்துக்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்திடம் அனுமதி பெற வேண்டியது கட்டாயம். அதன்படி, மாசுக் கட்டுப்பாடு வாரி யத்திடம் அனுமதியைப் பெறும் வரை நியூட்ரினோ ஆய்வுப் பணி களை மேற்கொள்ளக் கூடாது’’ என நீதிபதிகள் தங்கள் இடைக் கால உத்தரவில் கூறியுள்ளனர்.

அதே நேரத்தில் நியூட்ரினோ திட்டத்தை ரத்து செய்யக் கோரும் வைகோவின் பிரதான மனு மீதான விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

வைகோ மகிழ்ச்சி:

இந்த இடைக்காலத் தடையை வைகோ மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளார். ''மத்திய அரசை விட நீதிமன்றம் சக்தி வாய்ந்தது என கருதுகிறேன். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி தராது என எதிர்பார்க்கிறேன்'' என வைகோ கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x