Published : 04 Mar 2015 01:50 PM
Last Updated : 04 Mar 2015 01:50 PM

இருநாட்டு பேச்சுவார்த்தையில் நாட்டுப் படகு மீனவர்களையும் சேர்க்க கோரிக்கை

தமிழக-இலங்கை மீனவர்கள் இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு நாட்டுப் படகு மீனவர்களையும் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக-இலங்கை இரு நாட்டு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், கடந்த 27.01.2014 அன்று சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மீன்வளத் துறை இயக்குநர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழக இலங்கை மீனவப் பிரதிநிதிகளின் முதல்கட்டப் பேச்சுவார்த்தையும், 12.05.2014 அன்று கொழும்பில் உள்ள ஹரிட்டாஸ் அரங்கத்தில் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைகள் தீர்வை எட்டாமலேயே முறிந்துபோயின.

பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரத்தில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், இரு நாட்டு மீனவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று இலங்கைக்கான இந்திய தூதர் ஒய்.கே. சின்ஹா இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் ஜோசப் மைக்கேல் பெரேராவை செவ்வாய்கிழமை சந்தித்துப் பேசினார். இந்தியாவின் கோரிகையை ஏற்று மார்ச் 12 சென்னையில் பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில் பாம்பன் நாட்டுப்படகு மீனவர்களின் பிரநிதி அருள் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது.

தமிழக-இலங்கை இருதரப்பு மீனவர் பேச்சுவார்த்தையில் மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றால் பேச்சுவார்த்தை குழுவில் நாட்டுப்படகு மீனவர் பிரதிநிதிகளையும் சேர்க்க வேண்டும். விசைப்படகுகள் தமிழகத்திற்கு அறிமுகமாவதற்கு முன்னர் பல நூற்றாண்டு காலமாக பாய்மரப் படகுகளிலும், நாட்டுப் படகுகளில் இலங்கை பகுதியில் மீன்பிடித்து வந்தது நாங்கள் தான்.

இன்று வரையிலும் பாரம்பரிய மீன்பிடி முறைகளை பயன்படுத்தி கடலின் இயற்கைச் சூழலை சேதம் விளைவிக்காமல் நாட்டுப் படகு மீனவர்கள் மீன்பிடித்து வருகிறோம். ஆனால் பாரம்பரிய மீன்பிடி முறைகளை மறந்து இயந்திரத்தனமான மீன்பிடி முறைகளை பயன்படுத்தும் பணக்கார விசைப்படகு முதலாளிகளை மட்டும் மீனவர் பிரநிதிகளாக அங்கீகரிப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது. எனவே, கடல் தொழிலை நன்கு அறிந்த பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களும் பேச்சு வார்த்தை குழுவில் பங்கேற்பதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x