Published : 07 Mar 2015 10:59 AM
Last Updated : 07 Mar 2015 10:59 AM
கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதை எதிர்த்து நடைபெறுவிருந்த முற்றுகைப் போராட்டத்தை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், 1500 விவசாயிகளை கைது செய்தனர்.
மேகதாதுவில் கர்நாடகா அரசு புதிய அணை கட்டும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளது. இதற்கு தமிழ்நாட்டில் விவசாய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டுவதை தடுக்க மேகதாதுவில் இன்று (சனிக்கிழமை) முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று காவிரி உரிமை மீட்பு குழுவினர் ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள்.
இந்த முற்றுகை போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக தஞ்சாவூர், திருச்சி, நாமக்கல், சேலம், தர்மபுரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் நேற்றிரவு முதலே தேன்கனிக்கோட்டையில் குவியத் துவங்கினர்.
அவர்கள் இன்று (சனிக்கிழமை) திட்டமிட்டபடி தேன்கனிக்கோட்டையில் இருந்து கர்நாடக மாநிலம் மேகதாது நோக்கி சென்று முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளார்கள்.
ஆனால், முற்றுகை போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்தது. இதனையடுத்து கோவை சரக ஜ.ஜி.சங்கர் தலைமையில் சேலம் சரக டி.ஜ.ஜி.வித்யாகுல்கர்னி கிருஷ்ணகிரி எஸ்.பி.கண்ணம்மாள் நாமக்கல் எஸ்.பி.செந்தில்குமார்,உட்பட 800 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். விவசாயிகள் தடையை மீறினால் கைது செய்யப்படுவார்கள் என எச்சரித்தனர்.
ஆனால் போலீஸ் எச்சரிக்கையையும் மீறி விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் 1500 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
தமிழக அரசு நடவடிக்கை தேவை:
முன்னதாக, காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசு அளித்த பேட்டியில், "கர்நாடக மாநிலம் மேகதாதுவில் புதிய அணை கட்டப்படும் என்று, உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மீறி அம்மாநில சட்ட அமைச்சர் ஜெயச்சந்திரா தெரிவித்தார். ஆனால், அவரது கருத்தை கர்நாடக அரசும் மறுக்கவில்லை, தமிழக அரசும் கண்டிக்கவில்லை. கட்சித் தலைவர்களும் இவ்விவகாரத்தில் மவுனமாக உள்ளனர்.
தமிழக அரசு இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி கர்நாடகவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மேலும், தமிழக முதல்வர் பிரதமரை சந்தித்து, இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT