Published : 16 Mar 2015 10:30 AM
Last Updated : 16 Mar 2015 10:30 AM

துறைமுக பணம் ரூ.9 கோடி மோசடி: வங்கி மேலாளர் உட்பட 3 பேர் கைது

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பணம் ரூ.9 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில் வங்கி மேலாளர் உள்ளிட்ட 3 பேரை குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். தூத்துக்குடி வ.உ.சி. துறை முகம் ஆண்டுதோறும் உபரி வருமானத்தை அதிக வட்டி தரும் வங்கியில் டெபாசிட் செய்வது வழக்கம். அதன்படி ரூ.10.50 கோடியை டெபாசிட் செய்ய கடந்த பிப்ரவரி 10-ம் தேதி டெண்டர் விடப்பட்டது.

ஈரோடு வங்கியில் டெபாசிட்

ஈரோடு மாவட்டம் இல்லிபில்லியில் உள்ள பாங்க் ஆப் இந்தியா கிளை 8.9 சதவீதம் வட்டி அளிப்பதாக கூறியது. இதையடுத்து அந்த வங்கியில் பணத்தை டெபாசிட் செய்ய துறைமுக நிர்வாகம் முடிவு செய்தது.

அதன்பேரில் பாங்க் ஆப் இந்தியாவின் ஈரோடு இல்லிபில்லி கிளையில் ரூ.10.50 கோடியை ஓராண்டு மற்றும் 13 நாட்களுக்கு டெபாசிட் செய்ய கடந்த பிப்ரவரி 13-ம் தேதி ஆ.டி.ஜி.எஸ். முறையில் பணம் அனுப்பி வைக்கப்பட்டது.

போலியான கடிதம்

இந்நிலையில் இந்த தொகை யில் ரூ.1.50 கோடியை மட்டும் இல்லிபில்லி பேங்க் ஆப் இந்தியா கிளையில் வைப்புத் தொகையாக வைக்கவும், ரூ.9 கோடியை திருப்பூரில் உள்ள கரூர் வைசியா வங்கி கிளைக்கு தாரகை இம்பெக்ஸ் என்ற நிறுவனத்தின் வங்கி கணக்குக்கு அனுப்பி வைக்கும்படியும் துறைமுகத்தில் இருந்து அனுப்பியது போன்ற ஒரு போலியான கடிதம் தயாரிக்கப்பட்டது.

இந்த கடிதத்தை வைத்து, திருப்பூர் கரூர் வைசியா வங்கி கிளையில் உள்ள தாரகை இம்பெக்ஸ் நிறுவனத்தின் கணக்குக்கு ரூ.9 கோடியை இல்லிபில்லி பாங்க் ஆப் இந்தியா கிளை அனுப்பியுள்ளது. மேலும், மீதமுள்ள ரூ.1.50 கோடியில் ரூ. 45 லட்சம் துறைமுக நிர்வாகம் எடுப்பது போல பணம் எடுக்கும் சிலிப் மூலம் எடுக்கப்பட்டுள்ளது.

ரூ. 9 கோடியை பெற்றுக் கொண்ட திருப்பூர் கரூர் வைசியா வங்கி கிளை, அரசு பணத்தில் இருந்து இவ்வளவு பெரும் தொகையை தனிநபரின் வங்கி கணக்குக்கு மாற்றம் செய்யலாமா என வங்கியின் தலைமை அலுவலகத்திடம் விளக்கம் கேட்டுள்ளது. தலைமை அலுவலகம் இதுதொடர்பாக தூத்துக்குடி துறைமுக நிர்வாகத்தை தொடர்புகொண்டது.

மேலாளர் கைது

உஷாரான துறைமுக நிர்வாகம், யாருடைய வங்கி கணக்குக்கும் பணத்தை மாற்ற துறைமுக நிர்வாகம் கடிதம் அனுப்பவில்லை என, விளக்கம் அளித்தது. இதையடுத்து பணம் தனிநபர் வங்கி கணக்குக்கு மாற்றப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.

மிகப்பெரிய மோசடி நடந்தி ருப்பதை அறிந்த தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக நிர்வாகம் இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவில் புகார் செய்தது. எஸ்.பி மா.துரை உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் இந்த மோசடி யில் தொடர்புடைய ஈரோடு இல்லிபில்லி பாங்க் ஆப் இந்தியா கிளை மேலாளர் சாமிபிள்ளை, பவானியை சேர்ந்த சத்தியமூர்த்தி, கோவை சேரன்மாநகரைச் சேர்ந்த மனோகரன் ஆகிய மூவரையும் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

இந்த மோசடியில் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்ய தனிப்படை போலீஸார் பல்வேறு இடங்களுக்கு விரைந்துள்ளதாக குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x