Published : 06 Mar 2015 09:14 AM
Last Updated : 06 Mar 2015 09:14 AM

தேர்வுத் தாளை மாற்றி முறைகேடு: அண்ணாமலை பல்கலை.யில் 4 ஊழியர்கள் இடைநீக்கம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் தொலைதூர கல்வி மையத்தின் மூலமாக நடைபெற்ற தேர்வில் தேர்வுத் தாளை மாற்றி முறைகேட்டில் ஈடுபட்ட 4 ஊழியர்களை பல்கலைக்கழக நிர்வாகம் நேற்று பணியிடை நீக்கம் செய்துள்ளது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடு காரணமாக, 2 ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு தனது கட்டுப்பாட்டில் பல்கலைக் கழகத்தை கொண்டு வந்தது. நிர்வாக அதிகாரியாக அரசு முதன்மை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் தொலைதூர கல்வி மையம் மூலமாக முதுகலை பாடப்பிரிவுகளுக்கு சென்னை, கோவை, திருச்சி, உள்ளிட்ட மையங்களில் நடைபெற்ற தேர்வுகளின் தேர்வுத் தாள்கள் அனைத்தும் கடந்த வாரம் திருத்தும் பணிகளுக்காக சரி பார்க்கப்பட்டன. அப்போது, 22 கட்டுகளில் இருந்த 700க்கும் மேற்பட்ட தேர்வுத் தாள்கள் காணாமல் போனது தெரிய வந்தது.

இது தொடர்பாக, தேர்வுத் துறை ஊழியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் நிர்வாகம் சார்பாக விசாரணை நடத்தப்பட்டது. மேலும், தேர்வுத் துறை அலுவலக கண்காணிப்பு கேமரா ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, பல்கலைக்கழக ஊழியர்களில் சிலர் தேர்வுத் துறை அலுவலகத்தில் இருந்து தங்களுடைய சட்டை, பேண்ட்களில் தேர்வுத்தாளை மறைத்து வைத்து எடுத்து சென்றது தெரிய வந்தது. அதற்கு, தேர்வுத் துறை ஊழியர்கள் உதவியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில், சிதம்பரம் சபாநாயகர் தெருவில் உள்ள ஒரு தனியார் விடுதியில் பல்கலைக் கழக ஊழியர்கள் சிலர் தேர்வு தாள்களை பதுக்கி வைத்து இருப்பதாக போலீஸாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதற்கிடையே, விடுதியில் இருந்த பல்கலைக்கழக ஊழியர்கள் தலைமறைவாகி விட்டனர். போலீஸார் சென்று விடுதி அறையில் இருந்த தேர்வுத் தாள்களை மட்டும் கைப்பற்றினர். இது குறித்து, பல்கலைக்கழக நிர்வாகம் தீவிரமாக விசாரித்தபோது, தேர்வு எழுதாதவர்களை தனியார் விடுதிக்கு வரவழைத்து தேர்வு எழுத வைத்து அந்த விடைத்தாளை தேர்வு துறையில் உள்ள தேர்வுத் தாள் கட்டுகளில் பல்கலைக்கழக ஊழியர்கள் சேர்த்து வைத்தது கண்டு பிடிக்கப்பட்டது.

தேர்வின்போது பதிவான வருகை பதிவேட்டை வைத்து சோதனை செய்தபோது இந்த முறைகேடு தெரிய வந்தது. இதையடுத்து, முறைகேட்டில் ஈடுபட்டதாக பிரசன்னா, மாரிமுத்து, பிரபாகரன், ஜெயராஜ் ஆகிய 4 ஊழியர்களை அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகம் நேற்று பணி இடைநீக்கம் செய்தது. முறைகேட்டில் தொடர்புடைய தேர்வுத் துறை ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகிறது. மேலும், விடைத்தாள் கட்டில் இருந்து எடுக்கப்பட்ட 700 விடைத் தாள்கள் என்னவாயின என்ற விவரம் தெரியவில்லை. இதனால், அதை எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் குறித்து சிக்கல் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x