Published : 01 Mar 2015 01:54 PM
Last Updated : 01 Mar 2015 01:54 PM

கேரள அரசியலின் விபரீத வலைக்குள் அச்சுதானந்தன்: வெளியேறுவாரா? வெளியேற்றப்படுவாரா?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும், கேரள முன்னாள் முதல்வருமான வி.எஸ்.அச்சுதானந்தன் கட்சியின் மாநில மாநாட்டை புறக்கணித்து சென்றது அவர் கட்சியிலிருந்து வெளியேறுவாரா அல்லது கட்சியே அவரை வெளியேற்றுமா என்று பரஸ்பரம் அக்கட்சியினரே பேசிக்கொள்ளும் அளவுக்கு விபரீத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர்களான அச்சுதானந்தன், பினராயி விஜயன் ஆகியோரது கோஷ்டிகளுக்கிடையே கடந்த 10 ஆண்டுகளாகவே கடும் மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்நிலையில் ஆழப்புழாவில் பிப்ரவரி 20-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை 4 நாள் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நடந்தது.

இம்மாநாட்டில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், மாநிலச் செயலாளர் பினராயி விஜயன், மூத்த தலைவர்கள் கொடியேறி பாலகிருஷ்ணன், வி.எஸ்.அச்சுதானந்தன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

மாநாட்டின் 2-ம் நாள், மாநிலச் செயலாளர் பினராயி விஜயன் தாக்கல் செய்த கட்சியின் செயல்பாடு குறித்த அறிக்கையில், கட்சியின் நிலைப்பாட்டில் இருந்து அச்சுதானந்தன் விலகிச் செல்வதாகவும், கட்சி விரோத சக்திகளை அவர் தனது கைப்பாவையாகப் பயன்படுத்தி வருவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதனால் அதிருப்தி அடைந்த அவர், மாநாட்டில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதைத் தொடர்ந்து அன்று இரவு கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர்கள் 2 பேர் அச்சுதானந்தனை நேரில் சந்தித்து சமரசம் செய்ய முற்சித்தனர். தன்னைப்பற்றி மாநாட்டு அறிக்கையில் இடம் பெற்றிருந்த விஷயங்களை நீக்க அச்சுதானந்தன் வலியுறுத்தியதாகவும், இதை கட்சியினர் நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, திருவனந்தபுரத்தில் உள்ள தனது வீட்டுக்குச் சென்ற அச்சுதானந்தன், அங்கு செய்தியாளர்களையும் சந்திக்க மறுத்து விட்டார். தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தமது ஆதரவாளர்களுடன் அச்சுதானந்தன் ஆலோசனை நடத்தியதாகவும், அதன் எதிரொலியாக கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி உட்பட அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்தும் அச்சுதானந்தன் விலகுவார் எனவும் தகவல்கள் பரவின.

அதையடுத்து, அச்சுதானந்தனுடன் கட்சியின் தேசியச் செயலர் பிரகாஷ் காரத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளதாகவும், இதனால் கட்சிப் பதவிகளை அச்சுதானந்தன் ராஜினாமா செய்யமாட்டார் எனவும் பேசப்பட்டது. எனினும் மாநிலக் கமிட்டியில் அச்சுதானந்தன் மற்றும் அவரது முக்கிய ஆதரவாளர்கள் பெயர்கள் இடம்பெறவில்லை. அதில் ஓர் இடம் மட்டும் காலியாக அச்சுதானந்தனுக்காக விடப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள் கட்சித் தொண்டர்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர்கள் சிலர், ‘ஸ்தாபனத்தில் தனி மனிதர்கள் முக்கியம் இல்லை. மாநில மாநாட்டில் பங்கேற்காத பிரதிநிதிகள் யாரும் மாநிலக் குழுவுக்குள் வர முடியாது. இருப்பினும் கட்சியை உருவாக்கியவர்களில் முக்கியமானவர் அச்சுதானந்தன். அவருடைய உழைப்பு, செயலூக்கம் காரணமாகவே அவருக்காக கட்சி ஓர் இடத்தை விட்டு வைத்திருக்கிறது. இருப்பினும் இதே போக்கை கட்சி நீண்டகாலம் பார்த்துக் கொண்டிருக்காது. ஓரிரு வாரங்களுக்குள் அச்சுதானந்தன் வராவிட்டால் அவர் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும்’ என்றனர்.

அச்சுதானந்தனின் ஆதரவாளர்கள் கூறியதாவது:

‘பினராயி கோஷ்டி, தன்னை கட்சி விரோதி என்ற பொருளில் தயாரித்திருந்த அறிக்கையை மட்டும் எப்படி அனுமதிக்கலாம் என்பதே அச்சுதானந்தனின் கோபம். எனவே, அந்த வரிகளை நீக்காமல் அவரை யாராலும் ஒருபோதும் சமாதானப்படுத்த முடியாது. அதற்காக அவர் கட்சியை விட்டு உடனே விலகிவிடவும் மாட்டார். கட்சிதான் அவரை விலக்க வேண்டும். மக்களுக்கு அவர் மீது இருக்கும் நல்லெண்ணம், அதன் மூலம் கூடவே செய்யும். அதை கட்சியின் தலைமையும் அறிந்தே இருக்கிறது. ஏற்கெனவே மேற்குவங்கத்தில் ஏற்பட்ட நிலைமை கேரளத்துக்கு வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாகவும் உள்ளது. அச்சுதானந்தன், மத்தியக் கமிட்டி உறுப்பினர் என்பதால் வரும் மார்ச் 10,11 தேதிகளில் கூடும் பொலிட் பீரோ, 22, 23 தேதிகளில் கூடும் மத்தியக் கமிட்டி கூட்டத்தில் வைத்து விவாதித்தே அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியும். அதுவரை இவரும் மெளனமாகவே இருப்பார்’. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x