Published : 24 May 2014 11:00 AM
Last Updated : 24 May 2014 11:00 AM
மோடி தலைமையிலான மத்திய அரசு, தமிழகத்தின் மின் வளர்ச்சித் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நிலக்கரி ஒதுக்கீடு அதிகரிப்பு, புதிய திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சான்றிதழ், பசுமை எரிசக்திக்கான மானியம் என பல்வேறு சலுகைகள் மோடி அரசால் கிடைக்குமா என்று தமிழக மின் துறையும் தொழில்துறையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றன.
தமிழகத்தின் மின் தட்டுப்பாடுக்கு, மத்திய அரசின் உதவிகள் இல்லாததே முக்கிய காரணமென்று, கடந்த ஆண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார். மத்திய அரசின் உதவிகள் கிடைக்காததால்தான், தமிழக மின் உற்பத்தி நிலையை அதிகரிக்க முடியவில்லை என்றும், இருப்பினும் தமிழக அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு புதிய திட்டங்களை தீட்டியுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.
தற்போது, மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய காங்கிரஸ் அரசு மாறி, நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்கவுள்ளது. இந்த அரசு தமிழகத்துடன் இணைந்து செயல்படும் அரசாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக தமிழக முதல்வர் கூறியுள்ளார். தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் அரசாக இருக்கும் என்று நரேந்திர மோடியும் கூறியுள்ளார்.
இந்நிலையில், தமிழக மின் துறை மத்திய அரசிடம் எதிர்பார்த்துள்ள உதவிகள் மற்றும் சலுகைகள் வருமாறு:
தமிழகத்திலிருந்து வட மாநிலங்கள் உள்பட அனைத்து வெளி மாநிலங்களுக்கும் மின்சாரம் வாங்கவும் விற்கவும் வகை செய்யும் மின் தொகுப்பை பலப்படுத்த வேண்டும். தேசிய மின் தொகுப்புடன் தென் மாநில மின் இணைப்பு தொகுப்பு பணிகள் முதற்கட்டமாக நிறைவடைந்து, சோதனை ஓட்டத்திலேயே பல மாதங்களாக செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட உள்ள 500 மெகாவாட் குந்தா நீரேற்று மின் திட்டம், சில்லஹெல்லா 2000 மெகாவாட் நீரேற்று மின் திட்டம் ஆகியவற்றுக்கு தடையில்லா சான்று மற்றும் சுற்றுச்சூழல் சான்று வழங்க வேண்டும்.
இதேபோல் உப்பூர், செய்யூர், உடன்குடி, எண்ணூர் மற்றும் வடசென்னை மூன்றாம் நிலை விரிவாக்கம் உள்ளிட்ட புதிய அனல் மின் நிலைய திட்டங்களுக்கு நிதியுதவி, பாரத மிகுமின் நிறுவனம் போன்ற மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் திட்டங்களை விரைந்து முடிக்க தேவையான தொழில்நுட்ப உதவிகள் வழங்குதல், கடலோர ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதி வழங்கவேண்டும். புதிய மின் திட்டங்கள் மற்றும் ஏற்கெனவே இருக்கும் மின் திட்டங்களுக்கு தேவையான நிலக்கரியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
தற்போது மத்திய அரசின் நிலக்கரி ஒதுக்கீடு சரியாக கிடைக்காததால், வெளி நாடுகளிலிருந்து அதிக விலைக்கு நிலக்கரி வாங்கப்படுகிறது. இதேபோல், புதிய மின் திட்டங்களுக்கு நிலக்கரி இறக்க கப்பல் துறை அனுமதியுடன், சிறிய துறைமுகங்கள் அமைக்க அனுமதியளிக்க வேண்டும்.
காற்றாலை, சூரிய மின் சக்தி உள்ளிட்ட மரபுசாரா எரிசக்திக்கான மானிய உதவிகள் கடந்த ஆண்டில், சுமார் 3 ஆயிரம் கோடி வரை மத்திய அரசிலிருந்து தமிழக மின் துறைக்கு கிடைக்க வில்லை. இந்த நிதியையும் மோடியின் புதிய அரசு வழங்கும் என்று, காற்றாலை மின் துறையும், தமிழக மின் துறையும் எதிர்பார்த்துள்ளன.
இதேபோல் தமிழகத்திலுள்ள அனைத்து துணை மின் நிலையங்கள் மற்றும் மின்னூட்டிகளை நவீன தொழில்நுட்பத்தில் இணைக்கவும், விவசாய மின் இணைப்புகள் மற்றும் ஏழை குடிசை இணைப்புகளுக்கு மின் வினியோக மானியம், மற்றும் இலவச சி.எப்.எல்.வழங்கவும் மத்திய அரசின் நிதியுதவி கிடைக்கும் என்று தமிழக மின் துறை எதிர்பார்ப்பில் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT