Published : 11 Mar 2015 03:17 PM
Last Updated : 11 Mar 2015 03:17 PM
புதுச்சேரி சட்டப்பேரவையை தொடக்கி வைத்து உரையாற்ற வந்த துணைநிலை ஆளுநர் ஏ.கே.சிங்கை அதிமுக எம்எல்ஏக்கள் முற்றுகையிட்டனர். மேலும், ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட பிறகு வெளிநடப்பு செய்தனர்.
புதுச்சேரியில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அவ்வாறு முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 11–ம் தேதியான இன்று (புதன்கிழமை) தொடங்கியது.
சட்டப்பேரவை வளாகத்தில் வந்த துணைநிலை ஆளுநர் ஏ.கே.சிங்கை, பேரவைத்தலைவர் சபாபதி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். ஆளுநருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அங்கு வந்த அதிமுக சட்டப்பேரவைத் தலைவரும் மாநில செயலருமான புருஷோத்தமன், எம்எல்ஏக்கள் அன்பழகன், ஓம்சக்தி சேகர், பெரியசாமி, பாஸ்கர் ஆகியோர் ஆளுநரை முற்றுகையிட்டனர்.
புதுச்சேரிக்கு தனி ஆளுநர் இல்லை- இரவல் ஆளுநர் தேவையில்லை என குரல் எழுப்பினர். அத்துடன் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்காதது தொடர்பாக கோஷங்கள் எழுப்பினர்.
ஒரு கட்டத்தில் வாயிற் கதவை தாண்டி ஆளுநர் உள்ளே அழைத்து செல்லப்பட்டார். வாயிற்கதவு சட்டப்பேரவை பாதுகாவலர்களால் மூடப்பட்டது. அப்போது புருஷோத்தமன் மட்டும் வெளியில் சிக்கிக் கொண்டார். அவர் கதவை தட்டியபடி இருக்க, 4 எம்எல்ஏக்களும் ஆளுநரை முற்றுகையிட்டப்படி வந்தனர்.
ஆளுநர் பேசத்தொடங்கியவுடன், அவரது இருக்கைக்கு முன்பு 4 எம்எல்ஏக்களும் தர்ணாவில் ஈடுபட்டனர். சிறிது நேரத்துக்குப் பிறகு வேறு வாயில் வழியாக உள்ளே வந்த புருஷோத்தமனும் அவர்களுடன் போராட்டத்தில் பங்கேற்றார். பின்னர் அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகள் வைத்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தொடர்ந்து ஆளுநர் உரை வாசித்தார். அதையடுத்து அவையிலிருந்து அதிமுக எம்எல்ஏக்கள் ஐவரும் வெளிநடப்பு செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT