Published : 25 Mar 2015 06:21 PM
Last Updated : 25 Mar 2015 06:21 PM

தமிழக சிறை கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.227 கோடி ஒதுக்கீடு

2015-2016 ம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் காவல்துறைக்கு 5,568.81 கோடி ரூபாய் அளவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்துறையை 198.96 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2015-16-க்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டம் ஒழுங்கு தொடர்பாக வெளியிட்ட அறிவிப்புகள்:

2010-2011 ஆம் ஆண்டில் 3,184.47 கோடி ரூபாயாக இருந்த காவல்துறைக்கான ஒதுக்கீடு தொடர்ந்து உயர்த்தப்பட்டு,தற்போது 5,568.81 கோடி ரூபாய் அளவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில் காவல்துறைக்கான கட்டடங்களைக் கட்டுவதற்காக 2,216.99 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது கட்டடங்கள் கட்டுவதற்காக 538.49 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையை நவீனப்படுத்துவதற்காக, கடந்த நான்கு ஆண்டுகளில் 73.23 கோடி ரூபாய் செலவில் 16 புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களைத் தொடங்கவும், 66 புதிய தீயணைப்பு வண்டிகள் வாங்கவும், மூன்று புதிய வான் தூக்கிகள் வாங்கவும் இந்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் விளைவாக இத்துறை 541 உயிர்களைக் காப்பாற்றவும், 1,613.49 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை சேதமடைவதிலிருந்து தடுத்துப் பாதுகாக்கவும் முடிந்தது. துரிதமாகச் செயலாற்றும் துணிவுமிக்க நவீனப் படையாக இத்துறை மாற்றம் அடைந்துள்ளதை, அண்மையில் மௌலிவாக்கத்தில் நிகழ்ந்த கட்டிட விபத்து மீட்புப் பணிகள் நிரூபித்துள்ளன. இத்துறைக்கு 198.96 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள்

கைதிகள் விடுதலை அடைந்து செல்லும்போது அவர்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான பல்வேறு பணிகளில் ஈடுபட பயிற்சி பெறும் வகையில், 10.78 கோடி ரூபாய் செலவில் பல்வேறு தொழிற்பயிற்சி அலகுகள் சிறைகளில் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், நெரிசலைத் தவிர்த்து நல்ல வாழ்க்கைச் சூழலை அளிப்பதற்காக மாநிலத்தில் உள்ள சிறைக் கட்டமைப்பும் பெருமளவு மேம்படுத்தப்பட்டுள்ளது. இத்துறைக்கு 227.03 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x