Published : 24 Mar 2015 07:57 AM
Last Updated : 24 Mar 2015 07:57 AM
இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவை இலங்கையின் முதல் ஃபீல்டு மார்ஷலாக்கி கவுரவித்திருக்கும் மைத்திரி பால சிறிசேன அரசு தனது நிஜமுகத்தை காட்டிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
2009 மே 16,17,18 ஆகிய தேதிகளில் நடந்த முள்ளிவாய்க்கால் போரின்போது விடுதலைப் புலிகளின் தளபதிகள் நடேசன், புலித்தேவன் உள்ளிட்டோர் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களோடு வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்தார்கள். அப்படி வந்தவர்களை கொத்துக் கொத்தாய் கொன்று குவித்தது சரத் பொன்சேகாவின் கட்டுப்பாட்டில் இருந்த இலங்கை ராணுவம்.
புலிகளை வீழ்த்திய வெற்றியை ராஜபக்சவும் அவரது ஆதரவாளர்களும் உரிமை கொண்டாட நினைத்தனர். ஆனால், சரத் பொன்சேகாவும் அதில் பங்கு கேட்டார். இதனால் ராஜபக்சவுக்கு எதிராக திரும்பிய பொன்சேகா, ஜனாதிபதி தேர்தலில் அவரையே எதிர்த்து நின்று தோல்வியடைந்தார். அவரை தேச துரோக குற்றம் சுமத்தி சிறையில் தள்ளியது ராஜபக்ச அரசு. அன்றைக்கு குற்றம்சாட்டப்பட்டவரைத்தான் இப்போது ஃபீல்டு மார்ஷலாக கவுரவித்திருக்கிறார் தற்போதைய அதிபர் மைத்திரி பால சிறிசேன.
ராஜபக்சவைவிட ஆபத்தானவர்
இதுகுறித்து பேசிய திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், ‘‘ஆளும் மனிதர்கள்தான் மாறி இருக்கிறார்கள். ஆனால் சிங்களவர்கள் தங்களின் இயல்பான குணத்தில் இருந்து மாறவில்லை. ராஜபக்சவைவிட ஆபத்தானவர் சிறிசேன என்பது ஈழத் தமிழ் மக்களுக்கு தெரியும்.
இலங்கை அதிபர் தேர்தலில் தமிழர்கள், முஸ்லிம்கள் ஆதரித்ததாலேயே சிறிசேன வெற்றி பெற்றார். வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் சிங்களவர்களின் ஆதரவும் சிறிசேனவுக்கு தேவை. அதற்கு நான் என்றைக்கும் சிங்களர்கள் பக்கம்தான் என்று ஜாடை காட்டவே பொன்சேகாவுக்கு பொன் மகுடம் சூட்டி இருக்கிறார்” என்றார்.
ஐ.நா.வுக்கே சவால்
தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் கூறும்போது, “இத்தனை குற்றங்களையும் தலைமையேற்று நடத்திய பொன்சேகாவை பாதுகாப்பதற்காகவே அவரை ஃபீல்டு மார்ஷல் ஆக்கியுள்ளனர். போர்க்குற்றம் சுமத்தப்பட்ட ஒருவருக்கு இந்தப் பதவியை கொடுத்திருப்பதன் மூலம் உலக அளவில் மனித உரிமைக்காக குரல் கொடுக்கும் அத்தனை பேர் முகத்திலும் கரியைப் பூசியுள்ளனர்” என்றார்.
இந்தியாவும் பங்கு
தமிழ் தேசிய பேரியக்கத் தலைவர் தஞ்சை பெ.மணியரசனோ, ’’சீனாவை வீழ்த்த இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டுச் சேர்ந்திருக்கின்றன. இவர்களின் கூட்டு உத்திகளால்தான் இலங்கை தேர்தலில் ராஜபக்ச வீழ்த்தப்பட்டார். இப்போது பொன்சேகா ஃபீல்டு மார்ஷல் ஆக்கப்பட்டிருப்பதிலும் இந்தியாவின் பங்கு உள்ளது.
வங்கதேசப் போரில் இந்திய படைக்கு தலைமை தாங்கிய இந்திய ராணுவ தலைமை தளபதி மானேக்ஷா ஒரு லட்சம் பாகிஸ்தான் படையினரை சரணடைய வைத்தார். அவருக்கு ஃபீல்டு மார்ஷல் பதவி கொடுத்து கவுரவித்தார் இந்திரா காந்தி. ஆனால் ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொன்று குவித்த சரத் பொன் சேகாவுக்கு இந்தியாவின் ஒப்புதலோடு இலங்கை அரசு ஃபீல் டு மார்ஷல் பதவி கொடுத்திருக்கிறது ஆச்சரியமளிக்கிறது” என்று சொன்னார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT