Published : 30 Mar 2015 02:58 PM
Last Updated : 30 Mar 2015 02:58 PM

தொழில் தொடங்க பணம் கேட்பதை வரதட்சணை கேட்டதாகக் கூற முடியாது: உயர் நீதிமன்றம்

தொழில் தொடங்க பணம் கேட்பதை, வரதட்சணை கேட்டதாகக் கூற முடியாது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அருகே உள்ள ஆவுடையாள்புரத்தைச் சேர்ந்தவர் பரமசிவம் (36). இவரது மனைவி சுதா. இவர் 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12-ம் தேதி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

சுதாவை பார்த்து கருப்பாக இருக்கிறாய் என்று பரமசிவம் கூறியதாகவும், இதனால் சுதா தற்கொலை செய்து கொண்டதாகவும் புகார் கூறப்பட்டது. அதன் பேரில், சுதாவை தற்கொலைக்கு தூண்டியதாகவும், வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகவும் பரமசிவம் மீது கூடங்குளம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் பரமசிவத்துக்கு தற்கொலைக்கு தூண்டியதற்கு 7 ஆண்டுகள் சிறை, வரதட்சணை கொடுமைக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும், தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்கவும் நெல்லை மாவட்ட அமர்வு நீதிமன்றம் 27.10.2006 அன்று தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து பரமசிவம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஜேக்கப் வாதிட்டார்.

விசாரணைக்குப் பிறகு, “மனைவியைப் பார்த்து கணவர் கருப்பாக இருக்கிறாய் என்று கூறியதை வைத்து தற்கொலைக்கு தூண்டியதாக மனுதாரர் மீது குற்றம்சாட்ட முடியாது என்று ஏற்கெனவே ஒரு வழக்கில் மத்தியப்பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொழில் செய்யப் பணம் கேட்பதை வரதட்சணை கேட்டதாகக் கூற முடியாது என்று மற்றொரு வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, மனுதாரருக்கு கீழ்நீதிமன்றம் வழங்கிய தண்டனை ரத்து செய்யப்படுகிறது” என நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x