Published : 16 Mar 2015 04:20 PM
Last Updated : 16 Mar 2015 04:20 PM

நிலச் சட்டம் நல்லதா?- ஜெயலலிதாவுக்கு கருணாநிதி சவால்

நிலம் கையகப்படுத்தும் மசோதா தொடர்பாக அரசியல் தலைவர்கள் மற்றும் பத்திரிகைகள் வெளியிட்ட கருத்துகளுக்கு பதில் கூறத் தயாரா? என்று அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு திமுக தலைவர் கருணாநிதி சவால் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "மத்திய பா.ஜ.க. அரசின் நில எடுப்புத் திருத்த மசோதாவை இந்தியாவிலே உள்ள பெரும்பாலான கட்சிகளும், பா.ஜ.க.வின் கூட்டணியிலே உள்ள கட்சிகளும் தீவிரமாக எதிர்த்து வெளிநடப்பே செய்துள்ள நிலையில், அந்த மசோதாவை 2013-ல் கடுமையாக எதிர்த்த அ.தி.மு.க. தற்போது வலியச் சென்று ஆதரித்து வாக்களித்தது பற்றிய இரட்டை நிலையை விளக்கி நான் அறிக்கை வெளியிட்டேன்.

அதற்கு, ஜெயலலிதா மீண்டும் பதிலளித்திருக்கிறார். பதவி பறிபோன நாளிலிருந்து வாய் திறக்காமல் மவுன விரதம் கடைபிடித்து வந்த ஜெயலலிதா தற்போது கொதித்தெழுந்து அறிக்கை மேல் அறிக்கை விடக் காரணமே, நான் என்னுடைய அறிக்கையில், "அ.தி.மு.க. தற்போது இந்த மசோதாவை ஆதரிக்க ஏதோ உள்நோக்கம் தான் காரணம்" என்று சொன்னது தான்!

அதனால் ஜெயலலிதா தன்னுடைய அறிக்கையில் "பச்சோந்தி" என்றும், "பொய்யறிக்கை" என்றும் அவருக்கே உரிய நாகரிகமான (?) "பாணி"யில் பதில் அளித்திருக்கிறார்.

2013ஆம் ஆண்டு இந்த மசோதா நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட போது அ.தி.மு.க. வெளி நடப்பு செய்ததும், எதிர்த்துப் பேசியதும், தற்போது அதே மசோதாவிற்கு வரிந்து கட்டிக் கொண்டு நாடாளுமன்றத்தில் வாக்களித்ததும் உண்மையா? பொய்யா? யாருடைய அறிக்கை பொய் அறிக்கை?

தனியார் கம்பெனிகளுக்கு தமிழகத்தில் நிலம் எதுவும் கையகப்படுத்தப்படுவதில்லை; எனவே இதனால் தமிழகத்தில் விவசாயிகள் யாரும் எந்தவிதப் பாதிப்புக்கும் உள்ளாக மாட்டார்கள் என்று ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் இனி தமிழகத்தில் தொழில் வளாகங்களே உருவாகாது என்று ஜெயலலிதா மறைமுகமாகக் கூறுகிறாரா?

ஒரு தொழில் வளாகம் என்றால் பெரிய அளவுக்கு நிலத்தைக் கையகப்படுத்தி, தனியார் நிறுவனங்களுக்குத் தானே நில மதிப்பை வசூல் செய்து கொண்டு வழங்கப் பட்டு வருகிறது. உதாரணத்திற்கு அ.திமு.க. ஆட்சியில் உடன்குடி அனல் மின் நிலையத் திட்டத்திற்காக சுமார் 200 ஏக்கர் தனியார் நிலங்கள் கையகப்படுத்தப் படவில்லையா? இது போல எத்தனை தனியார் நிறுவனங்களுக்குத் தமிழகத்தில்

நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. அதையெல்லாம் மறைத்து விட்டு, ஜெயலலிதா தனியார் நிறுவனங்களுக்காகத் தமிழகத்தில் நிலங்கள் எதுவும் கையகப்படுத்தப்படவில்லை என்று தன்னுடைய அறிக்கையில் கூறியிருக்கிறார்.

தனியார் கல்வி நிறுவனங்களுக்கும், மருத்துவ மனைகளுக்கும் நில எடுப்பு செய்யக் கூடாது என்று அ.தி.மு.க. சார்பில் மத்திய பா.ஜ.க. அரசிடம் கடும் நிபந்தனை வைத்ததாகவும், அதனை அவர்கள் வரவேற்று ஏற்றுக் கொண்டதாகவும் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியிருக்கிறார். இதுவரை தமிழகத்தில் எந்த ஆட்சிக் காலத்திலாவது தனியார் கல்வி நிறுவனங்களுக்கோ, மருத்துவமனைகளுக்கோ நில எடுப்புச் சட்டத்தின் கீழ் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுக் கொடுக்கப்பட்டது உண்டா? அப்படி ஒரு நிலைமை தமிழ்நாட்டிலேயே இல்லாத போது, அதை ஒரு நிபந்தனையாக ஜெயலலிதா வைத்ததாகவும், அதனை பாஜக அரசு ஏற்றுக் கொண்டதாகவும் கூறுவது எப்படிப்பட்ட பித்தலாட்டம்?

ஜெயலலிதா தனது அறிக்கையில் "தற்போது மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதா ஐந்து வகைத் திட்டங்களுக்கு சில விதிவிலக்கு அளிக்க மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது" என்றும், மாநிலத்திற்கு அதிக அதிகாரம் வழங்கும் இந்தச் சட்டத்தை எதற்காக எதிர்க்க வேண்டும் என்றும் கேட்டிருக்கிறார்.

ஆனால் அந்த ஐந்து வகைத் திட்டங்களுக்கு நில எடுப்பு செய்யும்போது சமூகத் தாக்கம் பற்றிய மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்பதிலிருந்தும் நில உரிமையாளர்களின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்பதிலிருந்தும் விலக்களிக்க மாநில அரசு கருதிப் பார்க்கலாம் என்று சொல்லப்பட்டிருந்தாலும், அறிவிக்கை வெளியிடப்படுவதற்கு முன் திட்டத்திற்குத் தேவையான குறைந்த பட்ச நிலம்

எவ்வளவு என்பதை கருத்திலே கொள்ள வேண்டுமென்றும், பயன்படுத்தப்படாத நிலத்தைப் பற்றிய விவரங்கள் அனைத்தையும் சேகரித்து வைத்திருக்க வேண்டுமென்றும் தான் பா.ஜ.க. திருத்தத்திலே கூறப்பட்டிருக்கிறதே தவிர, மாநிலத்திற்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டதாக வெளிப்படையாகக் கூறப்படவில்லை.

"தமிழக விவசாயிகளை ஏமாற்றலாம் என்று மனப்பால் குடித்தால் அது ஒருபோதும் நிறைவேறாது" என்றெல்லாம் ஜெயலலிதா அறிக்கையிலே கூறப்பட்டுள்ளது. உண்மை தான்; காவிரிப் பிரச்சினையில் ஜெயலலிதா எப்படியெல்லாம் நடந்து கொண்டார் என்பதையும், "நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட வைத்தேன்" என்ற ஒன்றையே கூறிக் கொண்டு, தஞ்சையில் மிகப் பெரிய பாராட்டு விழாவினைத் தனக்குத் தானே நடத்திக்கொண்டு, அனைவரையும் ஏமாற்றியவர்தான் ஜெயலலிதா என்பதையும், அந்த முடிவின்படி காவேரி மேலாண்மை வாரியத்தைக் கூட அமைக்கச் செய்ய முடியாத ஜெயலலிதா தான் தற்போது என்னைப் பற்றி அறிக்கை வெளியிட்டுள்ளார் என்பதையும் தமிழ்நாட்டு விவசாயிகள் நன்றாகவே புரிந்து கொண்டுள்ளார்கள் என்பது தான் உண்மை.

விவசாயிகளுக்காக கழக ஆட்சியில் வழங்கப்பட்ட இலவச மின்சாரத் திட்டத்தை ஜெயலலிதா ரத்து செய்த போதே, விவசாயிகளிடம் ஜெயலலிதாவுக்கு எந்த அளவுக்கு பாசமும் பற்றும் உண்டு என்பதை அவ்வளவு சீக்கிரத்தில் விவசாயிகள் மறந்து விடுவார்களா என்ன?

மத்திய பா.ஜ.க. அரசின் நில எடுப்புத் திருத்த மசோதா பற்றி ஜெயலலிதா கூறுவதெல்லாம் உண்மை என்றால், "நில எடுப்புத் திருத்த மசோதா இந்திய விவசாயிகளுக்கு முற்றிலும் எதிரானது" என்று சமூக ஆர்வலர் மேதாபட்கர் கூறியிருப்பதும்; "மத்திய அரசு தொழிலதிபர்களைப் பற்றியே அதிகம் கவலைப்படுகிறது, விவசாயிகளின் நலன் பற்றி கவலைப்படுவதில்லை, நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான அவசரச் சட்டத்தில் விவசாயிகளுக்கு எதிரான பல்வேறு பிரிவுகள் இடம்பெற்றுள்ளன" என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறியிருப்பதும்; "நாடாளுமன்றத்தில் நில எடுப்புத் திருத்த மசோதா நிறைவேற்றப் பட்ட நாள் இந்தியச் சரித்திரத்தில் மற்றொரு கறுப்பு நாள்; இந்த மசோதா முதலாளிகளுக்கு ஆதரவானது, இந்த மசோதா திரும்பப் பெறப்படும் வரை எங்களுடைய போராட்டம் நிற்காது" என்று பீகார் மாநில முதல் அமைச்சர் நிதீஷ் குமார் கூறியிருப்பதும்; "நில எடுப்புத் திருத்தச் சட்டம் உழவர்கள், தொழிலாளர்கள் மற்றும் பெரிய நிறுவனங்களுக்கிடையே நடைபெறும் போராட்டம்" என்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் திக் விஜய் சிங் கூறியிருப்பதும் பொய்கள் தானா?

"மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் திருத்த மசோதா விவசாயிகளுக்கு எதிரானது என்ற கருத்து பரவியிருக்கிறது, எனவே அதை நாங்கள் ஆதரிப்பதற்கில்லை, ஆதரித்தால் நாங்கள் அரசியல் ரீதியாக அழிந்து விடுவோ"மென்று பா.ஜ.க. வின் தோழமைக் கட்சியான "சிவசேனா" சார்பில் கூறப்பட்டிருப்பதும்; "மத்திய அரசின் மசோதாவுக்கு ஏற்கனவே பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது, அந்த மசோதா விவசாயிகளுக்கு எதிரானது என்று பொதுமக்கள் கருதுகிறார்கள்" என்று பா.ஜ.க. வின் மற்றொரு தோழமைக் கட்சியான சிரோமணி அகாலிதள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியிருப்பதும் அடுக்கடுக்கான பொய்கள் தானா?

மேலும் பா.ஜ.க.அரசின் நிலம் கையகப் படுத்தப்படும் அவசரச் சட்டத்தை எதிர்த்து நீதி மன்றங்களுக்குச் செல்ல முடியாது, விவசாயிகள், நில உரிமையாளர்கள் பாதிக்கப்படுவர், நிலச் சொந்தக் காரர்கள் ஒப்புதல் தேவையில்லை என்பது சர்வாதிகாரச் சட்டம், எவ்வித முன் தயாரிப்பும் இல்லாமல் அரசு மற்றும் தனியார் துறையினர் விரும்பும் நிலங்களைக் கையகப்படுத்திக் கொள்ளலாம், இதனால் விவசாய நிலங்களும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும், நிலம் கையகப்படுத்தி நாலே முக்கால் ஆண்டுகள் வரை பயன்படுத்தாமல் போட்டு விட்டு, அதன் பின் திட்டத்தைத் துவக்கினால் கூட கையகப் படுத்திய நிலம் அரசிடமோ அல்லது கையகப்படுத்தி கொடுக்கப்பட்ட தனியார் நிறுவனங்கள் வசமோ தான் இருக்கும், நிலத்தை நில உரிமையாளர்கள் கோர முடியாது; இந்த மசோதாவின்படி தவறு இழைக்கும் அதிகாரிகள் மீது எளிதில் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது என்று வரிசையாக சில பத்திரிகைகள் எழுதியிருந்த கருத்துகள் எல்லாம் பொய் தானா? ஜெயலலிதா இதற்கெல்லாம் பதில் கூறத் தயாரா?" என்று கருணாநிதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x