Published : 06 Mar 2015 10:24 AM
Last Updated : 06 Mar 2015 10:24 AM

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் விழா: 40 லட்சம் பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்

திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயில் பொங்கல் திருவிழா நேற்று நடைபெற்றது. 8 கிலோ மீட்டர் சுற்றளவு தூரத்துக்கு லட்சக்கணக்கான பெண்கள் திரண்டு பொங்கல் வைத்து வழிபட்டனர்.

இத்திருவிழா பிப்ரவரி 25-ம் தேதி தொடங்கியது. அன்று காலை வாழ்த்துப்பாடலுடன் அம்மனுக்கு காப்பு கட்டி குடியிருத்தப்பட்டது. நேற்று பொங்கல் நிகழ்ச்சியை முன்னிட்டு கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருவனந்தபுரத்துக்கு சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கப்பட்டன.

காலை 10.15 மணிக்கு கோயில் மூலஸ்தான விளக்கில் இருந்து தீபம் ஏற்றிய மேல்சாந்தி, கோயில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த பிரம்மாண்டமான அடுப்பில் தீ மூட்டி, பொங்கல் நிகழ்வை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து ஆலயத்தின் சுற்றுவட்டாரப் பகுதியில் சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு குவிந்திருந்த பெண்கள் தங்கள் அடுப்பில் தீ மூட்டி பொங்கல் வைத்து பகவதி அம்மனை வழி பட்டனர். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடு களில் இருந்தும் லட்சக்கணக்கான பெண்கள் பொங்கல் நிகழ்ச்சியில் பங்கு கொண்டனர்.

பிற்பகல் உச்ச பூஜை நடைபெற்றது. 200-க்கும் மேற்பட்ட நம்பூதிரிகள் வீதியெங்கும் வைக்கப்பட்டிருந்த பொங்கலில் தீர்த்தம் தெளித்தனர். அதன் பின்னர் பக்தர்கள் பொங்கல் பிரசாதத்தை உறவினர்களுக்கு கொடுத்து மகிழ்ந்தனர்.

கோயிலில் நேற்று இரவு சிறுவர்களின் குத்தியோட்டம், 10.30 மணிக்கு அம்மன் பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இன்று நடைபெறும் குருதி தர்ப்பணத்துடன் ஆற்றுக்கால் அம்மன் கோயில் திருவிழா நிறைவு பெறுகிறது.

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழாவில் பொங்கல் வைக்கும் பெண்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது. நேற்றைய விழாவில் சுமார் 40 லட்சம் பெண்கள் நேற்று பொங்கல் வைத்து வழிபட்டனர். கேரளம் மட்டுமின்றி, தமிழகத்தின் கன்னியாகுமரி உட்பட தென்மாவட்டங்கள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் பங்கேற்றனர்.

கோயில் வளாகத்துக்குள் நுழைய முடியாத அளவுக்கு கூட்டம் இருந்தது. திருவனந்தபுரம் தம்பானூர் பஸ்நிலையம் சுற்றுப் பகுதிகள் வரையிலும் நகரின் சாலைகள், வீதிகளில் அடுப்பு மூட்டி, பொங்கல் வைத்து பெண்கள் வழிபட்டனர். ஏராளமான போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x