Published : 11 Mar 2015 10:29 AM
Last Updated : 11 Mar 2015 10:29 AM
சுமார் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட சிறிய வட்டத் துளைக் கல் (Mace Head) கும்பகோணம் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கும்பகோணத்தில் இருந்து 10 கி. மீ. தொலைவில் உள்ளது மிழலைநத்தம் கிராமம். இது சோழர்கள் ஆட்சியில் மிழலை நாடு என்கிற பகுதிக்கு தலைநகராக இருந்துள்ளது. 13-ம் நூற்றாண்டில் மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழ நாட்டின் மீது படையெடுத்தபோது, சோழ நாட்டு ஆலயங்கள் தவிர முக்கிய நகரங்கள் அனைத்தையும் அழித்ததாக மெய்கீர்த்தி கல்வெட்டு ஆதாரம் நமக்குச் சொல்கிறது. அப்படி அழிக்கப்பட்ட நகரங்களில் மிழலையும் ஒன்று என்கிறார்கள் தொல்லியல் வல்லுநரான குடவாயிற் சுந்தரவேலுவும், தொல்லியல் ஆர்வலர் கோ.ஜெயபாலனும்.
தனது தொல்லியல் தேடல் மூலம் தமிழகத்தில் சங்க காலத்தைச் சேர்ந்த 250 பேரூர்கள் மற்றும் சீறூர்களை (சிற்றூர்கள்) ஆதாரங்களுடன் கண்டுபிடித்திருக்கிறார் சுந்தரவேலு. அப்படித்தான் 15 ஆண்டுகளுக்கு முன்பு மிழலைநத்தத்தின் சங்க கால வரலாற்றையும் கண்டுபிடித்தார். அதன் பிறகும் வேறு தடயங்களைத் தேடி அங்கு சென்று வந்தவர் கடந்த வாரம், கற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட கெதை போன்ற சிறிய வட்டத் துளைக் கல் ஆயுதத்தை கண்டெடுத்துள்ளார்.
இதுகுறித்து தொல்லியல் வல்லுநரான குடவாயிற் சுந்தரவேலுவும், தொல்லியல் ஆர்வலர் கோ.ஜெயபாலனும் ’தி இந்து’விடம் பேசியதாவது:
மிழலை கிராமம் மிகத் தொன்மை யானது. 63 நாயன்மார்களில் ஒருவரான குறும்ப நாயனார் பிறந்த ஊர்.
சுந்தரபாண்டியன் படையெடுப்புக்குப் பிறகு இந்த ஊரை விட்டு போனவர்களின் வம்சாவழியினர் சில நூற்றாண்டுகளுக்கு முன்புதான் மீண்டும் மிழலைக்கு வந்து குடியேறியுள்ளனர். மிழலையின் தொன்மையை நாங்கள் அறிந்த பிறகு நான்காண்டுகளுக்கு ஒரு முறை அந்த கிராமத்துக்குச் சென்று வந்தோம்.
அப்படிப் போனபோதுதான் அங்கே சோழர் காலத்து செங்கல் ஒன்றை கண்டெடுத்தோம். கடந்த வாரம் அங்கு சென்றபோது தென்னங்கன்று வைப்பதற்காக தோண்டப்பட்ட குழி மண்ணில் இந்த ஆயுதத்தை கண்டெடுத்தோம்.
கல்லால் ஆன கெதை போன்ற இந்த ஆயுதம் 9 செ.மீ நீளம், 7 செ.மீ. அகலம், 4 செ.மீ. உயரம் கொண்டது. மரத்தால் ஆன கைப்பிடியை செருகுவதற்காக 2 செ.மீ விட்ட முடைய துளையும் இருக்கிறது.
எடை சுமார் ஒரு கிலோ இருக்கும். கற்காலம், நுண் கற்காலம், புதிய கற்காலம் என கற்காலம் மூன்று காலகட்டமாக பிரிக்கப்படுகிறது. இந்த ஆயுதம் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நுண் கற்காலத்தில் உரு வாக்கப்பட்டு சுமார் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய புதிய கற்காலம் வரை பயன்பாட்டில் இருந்திருக்க வேண்டும்.
இதற்கு முன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலும் தமிழகத்தில் வேறு சில பகுதிகளிலும் இந்த ஆயுதம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதை வேட்டைக்கு பயன்படுத்தினார்களா, சண்டையிடப் பயன்படுத்தினார்களா என்ற விவரம் இதுவரை கிடைக்க வில்லை’’ என்றார்கள்.
கல்லால் ஆன கெதை போன்ற இந்த ஆயுதம் 9 செ.மீ நீளம், 7 செ.மீ. அகலம், 4 செ.மீ. உயரம் கொண்டது. மரத்தால் ஆன கைப்பிடியை செருகுவதற்காக 2 செ.மீ விட்ட முடைய துளையும் இருக்கிறது. எடை சுமார் ஒரு கிலோ இருக்கும்.
10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நுண் கற்காலத்தில் உருவாக்கப்பட்டு சுமார் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய புதிய கற்காலம் வரை பயன்பாட்டில் இருந்திருக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT