Published : 28 May 2014 09:27 AM
Last Updated : 28 May 2014 09:27 AM
தமிழகத்தில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால், கடந்த ஓராண்டுக்குப் பின், தொழிற் சாலைகளுக்கான மின் கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது. இதனால், உயரழுத்த மின்சா ரத்தை பயன்படுத்தும் தொழில் துறையினர் மகிழ்ச்சி அடைந் துள்ளனர். வீடுகளுக்கான மின் வெட்டையும் முழுவதுமாக ரத்து செய்ய நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் மே மாதம் முதல் மின்வெட்டு படிப்படியாக குறைக்கப்படும் என்று காற்றாலை புள்ளி விவரங்களை மேற்கோள் காட்டி ஏற்கெனவே கடந்த ஏப்ரல் 19-ம் தேதி ‘தி இந்து’ செய்தி வெளியிட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் புதிய மின் திட்டங்கள் மூலம் மின்சார உற்பத்தி மேலும் அதிகரித்துள்ளது. 2011ம் ஆண்டில், 10 ஆயிரம் மெகாவாட்டாக இருந்த மின் உற்பத்தி நிலை, தற்போது 12,500 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நாளன்று, தமிழக மின் வாரியம் ஒரு நாளில் தமிழகம் முழுமைக்கும் 289 மில்லியன் யூனிட் மின்சாரம் விநியோகம் செய்து சாதனை படைத்தது.
தற்போதைய நிலையில், வடசென்னை, தூத்துக்குடி, எண்ணூர், வடசென்னை விரிவாக்கம், மேட்டூர், மேட்டூர் விரிவாக்கம் மின் நிலையங்கள் மூலம், 3,600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. கூடங்குளம், கல்பாக்கம், நெய்வேலி, வல்லூர் அனல் மின் நிலையங்கள் மூலம், 3,300 மெகாவாட் மின்சாரம் தமிழகத்துக்கு கிடைக்கிறது. அதோடு காற்றாலை மின் உற்பத்திக்கான சீசனும் துவங்கியுள்ளதால் இதன் மூலம் 1,700 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. வரும் நாட்களில் அது இன்னும் அதிகரித்து, 3,500 மெகாவாட்டை எட்டும் என்று மின் துறையினர் கணித்துள்ளனர்.
கடந்த 2008ம் ஆண்டு மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிப்படி, தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 20 சதவீத மின் கட்டுப்பாடும், மாலை மற்றும் இரவு நேரங்களில் 90 சதவீத மின் வெட்டும் அமலில் இருந்தது. இந்த மின் கட்டுப்பாடுகளை தளர்த்த தொழிற்சாலைகள் சங்கத்தினர் கடந்த வாரம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தனர். இந்தக் கடிதத்தின் அடிப்படையில் சிறப்பும் கூட்டம் நடத்திய முதல்வர் ஜெயலலிதா, மின் கட்டுப்பாட்டை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். இதனால் தொழிற்துறையினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அதே நேரம், வீடுகளுக்கான மின் வெட்டை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டுமென்றும், அறிவிக்கப்படாத மின் வெட்டை தவிர்க்க வேண்டுமென்றும், மின் நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மைய ஒருங்கிணைப்பாளர் டி. சடகோபன் கூறியதாவது: மின் வெட்டு இருக்காது என்று அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், தொழில் நுட்ப காரணங்களைக் காட்டி, மின் வெட்டு அமலாவது தொடர்ந்து வருகிறது. திங்கள் கிழமை இரவு கூட, மணலி துணை மின் நிலையத்துக்குட்பட்ட மேற்கு வட்ட மின் விநியோகப் பகுதிகளில், இரவில் சுழற்சி முறையில், ஒன்றரை மணி நேர மின் வெட்டு அமலானது. எனவே உயர்ரக தொழில்நுட்பங்களை மேம்படுத்தி, காற்றாலை உற்பத்தி அதிகமாக உள்ள நேரம் மட்டுமின்றி, அனைத்து நாட்களிலும் வீடுகளுக்கு மின் வெட்டு இல்லாத நிலையை ஏற்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
முதல்வருக்கு தேசிய லீக் நன்றி
தமிழகத்தில் தொழிற்சாலைகளுக்கான மின் கட்டுப்பாட்டை நீக்க, உத்தரவிட்டதற்காக முதல்வருக்கு அகில இந்திய தேசிய லீக் கட்சி நன்றி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் எஸ்.ஜே.இனாயத் துல்லாஹ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் வரும் ஜூன் 1-ம் தேதி முதல் மின்வெட்டு இல்லை என அறிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு அகில இந்திய தேசிய லீக் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். தமிழகத்தை இருண்ட மாநிலமாக மாற்றிய திமுகவை ஆட்சிக் கட்டிலிலிருந்து மக்கள் விரட்டியடித்தனர். அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றிக் காட்டுவேன் என சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா சூளுரைத்தார். கடந்த 3 ஆண்டுகளாக முதல்வர் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக, தற்போது தமிழகத்தில் மின் நிலைமை சீர்செய்யப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மின்வெட்டு குறித்து திமுக பொய்ப் பிரச்சாரம் செய்தது. ஜூன் 1-ம் தேதி முதல் தமிழகத்தில் மின்வெட்டு அறவே நீக்கப்படுவதாக முதல்வர் அறிவித்திருப்பது, தமிழகம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதற்கு ஒரு உதாரணம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT