Published : 23 Mar 2015 09:29 AM
Last Updated : 23 Mar 2015 09:29 AM

வளி மண்டலத்தில் ஈரப்பதம் ஆவியாவதால் டெல்டா மாவட்டங்களை சூழும் மூடுபனி

காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட் டினம், திருச்சி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அதிகாலை நேரத்தில் மூடுபனி காணப்படுகிறது. வளி மண்டலத்தில் ஈரப்பதம் ஆவியாவதால் மூடுபனி நிலவுவதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வழக்கமாக தமிழ் மாதத்தில் கார்த்திகை முதல் தை வரை (நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை) பனிக்காலம் நிலவும். மார்ச் மாதத்திலிருந்து மெதுவாக வெப்பம் அதிகரிக்கத் தொடங்கும்.

இந்நிலையில், மார்ச் மாதத்தின் பிற்பகுதியான தற்போது பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில், அதற்கு நேர்மாறாக அதிகாலை நேரத்தில் பனிப்பொழிவும், காலை 8 மணி வரை கூட மூடுபனியும் நிலவுகிறது.

“சாலையில் 20 அடி தூரத்தில் வரும் வாகனங்கள்கூட தெரிய வில்லை. வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி தான் செல்ல வேண்டியிருக்கிறது” என்கின்றனர் வாகன ஓட்டிகள். கடந்த வருடங்களில் இல்லாத அளவுக்கு இந்த மூடுபனியின் அடர்த்தி காணப்படுவதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.

திருவாரூர் மாவட்டம் கூப்பாச்சிக் கோட்டையைச் சேர்ந்த விவசாயி யு.எஸ்.பொன்முடி கூறும்போது, “கடந்த 4 நாட்களாக அதிகாலை நேரத்தில் பனிப்பொழிவு நிலவுகிறது. 15 அடி தூரத்தில் உள்ளவர்களைக் கூட பார்க்க முடியவில்லை.

இரு சக்கர வாகனத்தில் வேகமாகச் சென்றால், பனித் துளிகளில் உள்ள ஈரப்பதம் உடலை நனைத்து விடுகிறது. நேற்று காலை 8.10 மணி வரை மூடுபனி விலகவில்லை. இந்த பனி, உளுந்து, பயறு அறுவடை செய்யும் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.

திருவாரூர் மாவட்ட வேளாண் மைத் துறை இணை இயக்குநர் க.மயில்வாணன் கூறும்போது, “காவிரி டெல்டா மாவட்டங்களில் தற்போது சம்பா அறுவடைக்குப் பிறகு உளுந்து, பயறு ஆகியவை பயிரிடப்பட்டுள்ளன.

வழக்கமாகவே, உளுந்து, பயறு உள்ளிட்ட பயிர்களை தண் ணீர் பாய்ச்சி வளர்ப்பதில்லை. இந்தப் பயிர்கள் பனி மற்றும் மழைத்தூறல்களில்தான் வளரும்.

பொதுவாக, மார்ச் மாதத்தில் 15 தினங்கள் வரை டெல்டா பகுதியில் பனிப்பொழிவு இருக்கும். இது படிப்படியாகக் குறையும்.

கடந்த சில நாட்களாக அதிக மூடுபனி நிலவுகிறது. இது உளுந்து, பயறு உள்ளிட்ட பயிர்களுக்கு மிகவும் நல்லது. இதனால் பயிர்களின் ஈரத்தன்மையும், பச்சை தன்மையும் பாதுகாக்கப்படும்.

பகல் நேரத்தில் வெயிலின் அளவும் அதிகமாக இருப்பதால் நோய்கள் தாக்குவதற்கு வாய்ப் பில்லை” என்றார்.

புவி வெப்பமடைதலால் பருவநிலையில் அசாதாரண மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துவரும் சூழலில், இந்த நிகழ்வுகளுக்கும் புவி வெப்பமடைதல் காரணமாக இருக்கலாமோ என்ற எண்ணமும் ஏற்படுவதாக பலரும் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x