Published : 13 Mar 2015 09:34 PM
Last Updated : 13 Mar 2015 09:34 PM
நாடாளுமன்றத்தில் நிலம் கையக்கப்படுத்தும் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு அதிமுக ஆதரவு வழங்கியதற்கான காரணங்கள் குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா விரிவான விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு நடைமுறையில் இருந்த நில எடுப்புச் சட்டத்திற்கு மாற்றாக, 'நிலம் கையகப்படுத்துவதில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் ஒளிவு மறைவின்மைக்கும் மறு வாழ்வு அளிப்பு மற்றும் மறு குடியமர்வுக்கான உரிமை' என்னும் சட்ட முன்வடிவினை 2013 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து அதனை சட்டமாக்கியது. இந்தச் சட்டம் 1.1.2014 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்த சட்டத்தில் சில திருத்தங்களை மத்திய பாரதிய ஜனதா அரசு அவசர சட்டம் மூலம் கடந்த 31.12.2014 அன்று கொண்டு வந்தது. அந்த அவசர சட்டத்தை சட்டமாக்கும் வகையில் தற்போது உள்ள 'நிலம் கையகப்படுத்துவதில் நியாயமான சரியீடு பெறுவதற்கும்
ஒளிவு மறைவின்மைக்கும் மறு வாழ்வு அளிப்பு மற்றும் மறு குடியமர்வுக்கான உரிமை' சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் 9.3.2015 அன்று அறிமுகம் செய்தது.
அதன் மீது எதிர்க்கட்சிகள் தெரிவித்த கவலைகளின் அடிப்படையில் மத்திய பாரதிய ஜனதா அரசு மேலும் 9 திருத்தங்களை 10.3.2015 அன்று தாக்கல் செய்தது. நில எடுப்பு தொடர்பாக இந்த சட்ட திருத்தத்தில் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்காக நில எடுப்புச் சட்டத்திலிருந்து சில விலக்குகள் அளிக்கப்படக் கூடாது என்பது அஇஅதிமுகவின் முடிவு ஆகும். அதன் அடிப்படையில், இந்த சட்ட திருத்தத்தில் ஒரு திருத்தத்தை எனது உத்தரவின் பேரில் அஇஅதிமுக முன்மொழிந்தது.
இதனை ஏற்றுக் கொண்ட மத்திய பாரதிய ஜனதா அரசு ஏற்கெனவே தாக்கல் செய்த சட்டதிருத்தத்தில் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவ மனைகளுக்கென இருந்த சலுகைகளை விலக்கிக் கொண்டு விட்டது. எனவே, எனது உத்தரவின் பேரில் 2013 ஆம் ஆண்டைய 'நிலம் கையகப்படுத்துவதில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் ஒளிவு மறைவின்மைக்கும் மறு வாழ்வு அளிப்பு மற்றும் மறு குடியமர்வுக்கான உரிமை' சட்ட திருத்த மசோதாவிற்கு மக்களவையில் அஇஅதிமுக ஆதரவளித்து வாக்களித்தது.
'நிலம் கையகப்படுத்துவதில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் ஒளிவு மறைவின்மைக்கும் மறு வாழ்வு அளிப்பு மற்றும் மறு குடியமர்வுக்கான உரிமை' சட்டத்தில் இந்த திருத்தங்களுக்கு எதிர்கட்சியினர் தங்களது எதிர்ப்பை இப்போதும் தெரிவித்துள்ளனர். இந்த சட்டமுன்வடிவுக்கு அஇஅதிமுக ஆதரவளித்தது தவறு என்றும் இது பெரும் பண முதலாளிகளுக்கும் தொழில் அதிபர்களுக்கும் சாதகமான சட்டதிருத்தங்கள் தான் என்றும் அஇஅதிமுகவின் மீது வீண் பழி சுமத்த முற்பட்டுள்ளனர்.
கருணாநிதிக்கு பதில்...
திமுக தலைவர் கருணாநிதி, "இந்த சட்டத் திருத்தங்களை முதலில் தீவிரமாக எதிர்த்த அ.தி.மு.க. என்ன காரணத்தினாலோ (?) ஏதோவொரு உள்நோக்கத்தோடு திடீரென்று ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளது" என வேண்டுமென்றே அஇஅதிமுகவை குற்றம் சாட்டும் விதமாக தமது கருத்தை தெரிவித்துள்ளார்.
என்னைப் பொறுத்தவரை, அஇஅதிமுகவைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டிற்கு, தமிழக மக்களுக்கு எவை நன்மை பயக்கக் கூடியதோ அவற்றை மட்டுமே ஆதரிப்பது என்பதும், தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் எதிரானவைகளை எதிர்ப்பது என்பதும் தான் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வரும் கொள்கையாகும். அந்த அடிப்படையிலேயே இந்த சட்ட திருத்தத்தையும் அஇஅதிமுக ஆதரித்தது என்பதை முதலில் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
'நிலம் கையகப்படுத்துவதில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் ஒளிவு மறைவின்மைக்கும் மறு வாழ்வு அளிப்பு மற்றும் மறு குடியமர்வுக்கான உரிமை' சட்டம் 2013 ஆம் ஆண்டு முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசால் கொண்டு வரப்பட்டபோது அந்த சட்டம் மாநிலங்களின் உரிமைகளில் தலையிடுவதாகவும், பறிப்பதாகவும் அஇஅதிமுக தனது எதிர்ப்பை நாடாளுமன்றத்திலேயே பதிவு செய்துள்ளது. 'நிலம்' என்பது மாநில பட்டியலில் வரும் பொருள் என்பதால் நிலம் சம்பந்தப்பட்ட எதுவும் மாநில அரசால் தான் முடிவு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 7-ம் இணைப்புப் பட்டியலில், பட்டியல் II-மாநிலத்து பட்டியலில் 18-வது இனமாக "நிலம்" என்பது வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே, நிலம் தொடர்பான எதுவும் உண்மையில் மாநில அரசு சம்பந்தப்பட்டது தான். ஆனால், பட்டியல் III – ஒருங்கியல் பட்டியலில் 'சொத்தினை கையகப்படுத்தலும், வேண்டுறுத்திப் பெறுதலும்' என்ற பொருண்மை ஒருங்கியல் பட்டியலில் சேர்க்கப்பட்டு அதன் காரணமாக நில எடுப்பு தொடர்பான சட்டம் இயற்றும் அதிகாரம் மத்திய அரசுக்கும் இருக்கிறது என்கிற அடிப்படையில் முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு 'நிலம் கையகப்படுத்துவதில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் ஒளிவு மறைவின்மைக்கும் மறு வாழ்வு அளிப்பு மற்றும் மறு குடியமர்வுக்கான உரிமை' சட்டத்தை இயற்றியது.
ஏற்கெனவே நடைமுறையில் இருந்த நில எடுப்புச் சட்டத்தினை மாத்திரம் விலக்கிக் கொண்டு புதிய நில எடுப்புச் சட்டத்தை அந்தந்த மாநில அரசுகளே மேற்கொள்ளலாம் என்று தான் மத்திய அரசு முடிவு எடுத்திருக்க வேண்டும். முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் பெரும்பாலான முடிவுகள் அமைச்சரவையாலோ, காங்கிரஸ் கட்சியாலோ எடுக்கப் பெறவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. காங்கிரஸ் கட்சியின் தலைவரை, தலைவராகக் கொண்ட ஒரு பெரும் அதிகாரமிக்க National Advisory Committee என்ற அமைப்பின் ஆலோசனையின் பேரிலேயே இத்தகைய ஒரு சட்டத்தை முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு இயற்றி விட்டது. நுனிப் புல் மேய்பவர்களுக்கும், மேம்போக்காக இந்த சட்டத்தை படிப்பவர்களுக்கும் மட்டுமே இந்த சட்டம் கட்டாய நில எடுப்பிலிருந்து விவசாயிகளுக்கு போதிய பாதுகாப்பு அளிப்பதாக தோன்றும். ஆனால், விவசாயிகளுக்கு ஆதரவாக இந்தச் சட்டத்தில் உள்ளவற்றை, ஒரு கையால் கொடுப்பதை மறு கையால் பறிப்பதைப் போல நான்காம் அட்டவணை மூலம் இந்த சட்டமே பறித்து விட்டது என்பது தான் உண்மை.
எனவே தான் 'நிலம் கையகப்படுத்துவதில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் ஒளிவு மறைவின்மைக்கும் மறு வாழ்வு அளிப்பு மற்றும் மறு குடியமர்வுக்கான உரிமை' சட்டம் விவசாயிகளுக்கு சாதகமாக இருப்பதாகச் சொல்வது 'அத்திப் பழத்தை பிட்டுப் பார்த்தால் அத்தனையும் புழு' என்ற பழமொழியைத் தான் நினைவுப்படுத்துகிறது.
'நிலம் கையகப்படுத்துவதில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் ஒளிவு மறைவின்மைக்கும் மறு வாழ்வு அளிப்பு மற்றும் மறு குடியமர்வுக்கான உரிமை' சட்டத்தின் பிரிவு 105 (1)-ன் படி, அந்தப் பிரிவின் உட்பிரிவு 3-க்கு உட்பட்டு நில எடுப்பைப் பொறுத்தவரை 4-வது அட்டவணையில் குறிப்பிட்டுள்ள சட்டங்களுக்கு இந்த சட்டம் பொருந்தாது என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டங்களை நீக்கவோ அல்லது புதிய சட்டங்களை சேர்ப்பதற்கோ மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் நடைமுறைக்கு வந்த ஒரு வருட காலத்திற்குள், அட்டவணை 4-ல் குறிப்பிடப்பட்டுள்ள சட்டங்களுக்கு இந்த சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி இழப்பீடு மற்றும் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்தல் குறித்த அறிவிக்கை வெளியிடப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புதிய நில எடுப்பு சட்டம் 1.1.2014 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படியான இழப்பீடு மற்றும் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு ஆகியவை 1.1.2015 முதல் நடைமுறைக்கு வரும் என மத்திய அரசால் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய மத்திய காங்கிரஸ் அரசும் அதற்கு துணை நின்ற இதர அரசியல் கட்சிகளும் 13 மத்திய சட்டங்களுக்கு இந்தப் புதிய நில எடுப்புச் சட்டத்திலிருந்து விதிவிலக்கு அளித்தது ஏன்?
மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டம், 13 மத்திய சட்டங்களுக்கு பொருந்தாது என்றும், அந்த 13 சட்டங்களின் படி நில எடுப்பு செய்யும் போது, இந்த சட்டத்தின் படியான இழப்பீடு மற்றும் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு மட்டுமே பொருந்தும் என்றும் மற்ற ஷரத்துகள் பொருந்தாது என்றும், ஆனால் மாநில அரசுகள் மாநிலத்தின் தேவைக்காக நில எடுப்பு செய்யும் போது மட்டும் இந்த சட்டப் பிரிவுகள் முழுவதுமாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும் அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது விவசாயிகளின் நன்மையைக் கருதியா? அல்லது மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பறிப்பதற்கா? என்பது தமிழக மக்களுக்கு நன்கு புரியும்.
எதிர்ப்பு தெரிவித்தது ஏன்?
விவசாயிகளின் நன்மைக்காக மட்டுமே 2013 ஆம் ஆண்டைய புதிய நில எடுப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது என்றால் 13 மத்திய அரசு சட்டங்களின் கீழ் நில எடுப்பு செய்யும் போது அவற்றை ஏன் கடைபிடிக்கக் கூடாது? இந்த சட்டங்களின் கீழ் நில எடுப்பு செய்யும் போது மட்டும் விவசாயிகள் பாதிக்கப்பட மாட்டார்களா? இதன் காரணமாகத் தான் 2013 ஆம் ஆண்டு புதிய நில எடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்ட போது, அஇஅதிமுகவின் சார்பில் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பேசிய உறுப்பினர்கள் இந்த சட்டத்தின் அட்டவணை 4ல் உள்ள 13 மத்திய நில எடுப்புச் சட்டங்களுக்கு இந்த 'நிலம் கையகப்படுத்துவதில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் ஒளிவு மறைவின்மைக்கும் மறு வாழ்வு அளிப்பு மற்றும் மறு குடியமர்வுக்கான உரிமை' சட்டத்திலிருந்து விதிவிலக்கு அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசியுள்ளனர்.
நான்காவது இணைப்பில் வைக்கப்பட்டுள்ள ஒரு சட்டம் தான் The Petroleum and Minerals Pipelines (Acquisition of Right of User in Land) Act, 1962. இந்த சட்டத்தின் கீழ் தான் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களில் கெயில் நிறுவனத்தால் விவசாயிகளின் நிலங்களின் ஊடே 310 கிலோ மீட்டர் எரிவாயு கொண்டு செல்லும் குழாய்கள் பதிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மத்திய அரசின் சட்டத்தின் படி குழாய் பதிக்க வழிவகை செய்யப்பட்டிருந்தாலும், இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் விவசாய நிலங்களின் ஊடே குழாய்கள் பதிக்கப்படக் கூடாது என நான் உத்தரவிட்டேன்.
தேசிய நெடுஞ்சாலை ஓரமாக குழாய் பதிக்கப்படலாம் என்ற எனது அறிவுரையின் அடிப்படையில் தமிழக அரசு அவ்வாறு உத்தரவிட்டது. அதனை எதிர்த்து கெயில் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்து, தங்களுக்கு சாதகமான உத்தரவை பெற்றது. அதன் பேரில், என்னுடைய உத்தரவின்படி, தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு விடுப்பு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு, உயர்நீதிமன்ற உத்தரவிற்கு தடையாணை பெறப்பட்டது. தற்போது இந்த மனுவை உச்சநீதிமன்றம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.
தற்போதும் 2013-ஆம் ஆண்டைய புதிய நில எடுப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள எந்த நடைமுறையையும் பின்பற்றாமல் கெயில் நிறுவனம் குழாய் பதித்திட இயலும். அவ்வாறு வழிவகை செய்யும் இந்த The Petroleum and Minerals Pipelines (Acquisition of Right of User in Land) Act, 1962 சட்டத்திற்கு 2013 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட புதிய நில எடுப்புச் சட்டத்திலிருந்து முழு விலக்கு அளிக்க அந்த சட்டத்திலேயே வழிவகை செய்யப்பட்டுள்ளது. அப்படியெனில் அந்த சட்டம் விவசாயிகளைப் பாதுகாக்கின்ற சட்டம் என்றும், தற்போதைய சட்ட திருத்தங்கள் விவசாயிகளுக்கு எதிரானது என்று கூறுவதும் மக்களை ஏமாற்றும் செயல் அன்றி வேறு என்ன? அரசியல் ஆதாயத்திற்காக அந்த சட்டத்தை அப்போது ஆதரித்து, தற்போது எதிர்ப்பவர்கள் இதை விளக்க வேண்டும்.
மசோதாவில் திருத்தங்கள்...
நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நாட்டின் வளர்ச்சியில், மாநில அரசுகளும், மத்திய அரசும் பங்குதாரர்களாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலும், மாநில அரசுக்கு, அதற்குரிய அதிகாரங்களை வழங்கிட வேண்டும் என்ற அடிப்படையிலும் இந்த சட்ட திருத்தங்களை கொண்டு வந்துள்ளதாகவே நான் கருதுகிறேன்.
2013 ஆம் ஆண்டைய 'நிலம் கையகப்படுத்துவதில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் ஒளிவு மறைவின்மைக்கும் மறு வாழ்வு அளிப்பு மற்றும் மறு குடியமர்வுக்கான உரிமை' சட்டத்தில் அத்தியாயம் III-A புதிதாக சேர்க்கப்பட்டு அதன்படி அத்தியாயம் II-ல் உள்ள சமூக தாக்கத்தை தீர்மானித்தல் மற்றும் பொதுநலன் மற்றும் IIIவது அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சிறப்பு கூறுகள் ஆகியவற்றிலிருந்து தேசிய பாதுகாப்பு, ஊரக உள்கட்டமைப்பு, கட்டுப்படியாகக் கூடிய வீட்டுவசதி, ஏழைகளுக்கான வீட்டுவசதி, தொழில் வளாக வழி மற்றும் உள்கட்டமைப்பு, அரசிடமே நிலம் உடமையாக இருக்கும் பட்சத்தில், அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதி திட்டங்கள் ஆகிய 5 வகை திட்டங்களுக்கு அத்தியாயம் II மற்றும் III ன் கீழ் விதிவிலக்கு அளிக்க சம்பந்தப்பட்ட அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் இந்த மசோதா மக்களவையில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதாவது ஊரக உள்கட்டமைப்பு போன்ற திட்டங்களுக்கு அத்தியாயம் II-ல் குறிப்பிடப்பட்டுள்ள சமூக தாக்கத்தை தீர்மானித்தல் மற்றும் பொதுநலன் மற்றும் IIIவது அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சிறப்பு கூறுகள் ஆகியவற்றிலிருந்து பொதுவான விலக்கு எதுவும் அளிக்கப்படவில்லை. ஒவ்வொரு திட்டத்தையும் ஆராய்ந்து குறிப்பிட்ட எந்த ஒரு திட்டத்திற்கும் விலக்கு அளிக்க வேண்டுமெனில் அந்த திட்டத்திற்கு விலக்கு அளிப்பதற்கான அதிகாரம் மட்டுமே சம்பந்தப்பட்ட மத்திய அரசு அல்லது மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த திருத்த மசோதா மாநிலங்களுக்குத் தேவையான அதிக அதிகாரத்தை வழங்குகிறதே அல்லாமல், சமூகத் தாக்கத்தை தீர்மானித்தல் மற்றும் உணவு பாதுகாப்பு ஆகியவற்றிலிருந்து ஒட்டுமொத்தமாக விலக்கு அளித்து 2013 ஆம் ஆண்டைய சட்டத்தையே நீர்த்துப் போகச் செய்யவில்லை.
குறிப்பிடப்பட்ட 5 வகை நில எடுப்புக்கும் இந்த இரு அத்தியாயங்களிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டுமா என்பதை சம்பந்தப்பட்ட மாநில அரசே முடிவு செய்யலாம் என்னும் போது அந்தந்த திட்டங்களுக்கு ஏற்ப, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மாநில அரசு முடிவு செய்ய இயலும்.
என்னைப் பொறுத்த வரையில் விவசாயிகளை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்திற்கும் அனுமதி அளிப்பதை அஇஅதிமுக ஒரு போதும் அனுமதிக்காது என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன். அந்த அடிப்படையில் தான் முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்து சட்டம் இயற்றிய போதும் அதனை செயல்படுத்துவதற்கான அதிகாரம் மாநில அரசுக்குத் தான் இருக்கிறது என்பதால் அதனை தமிழ்நாட்டில் தடுத்து நிறுத்துவோம் என உறுதிபட தெரிவித்து, அதன்படியே இது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதே போன்று, மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் பரிசோதனையை மத்திய அரசு அனுமதித்தாலும், மாநிலத்தில் அதற்கான அனுமதியை வழங்கும் அதிகாரம் மாநில அரசுக்கே உள்ளது. அந்த அடிப்படையிலே தான் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் மூலம் செய்யப்படும் ஆராய்ச்சி தமிழகத்தில் அனுமதிக்க முடியாது என்ற திடமான முடிவை நான் எடுத்து இன்றும் அது தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.
'நிலம் கையகப்படுத்துவதில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் ஒளிவு மறைவின்மைக்கும் மறு வாழ்வு அளிப்பு மற்றும் மறு குடியமர்வுக்கான உரிமை' சட்டத்தில் திருத்தங்களை மத்திய அரசு மக்களைவையில் தாக்கல் செய்தது பற்றி திமுக தலைவர் கருணாநிதி மத்திய அரசின் இந்த திருத்தச் சட்டம் விவசாயிகளுக்கு எதிராகவும், தொழிலதிபர்களுக்கும், பன்னாட்டு தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவானது என்றும், சொந்த நிலத்தின் மீது விவசாயிகளுக்குள்ள அடிப்படை உரிமையை இந்தச் சட்டம் எடுத்து விடுவதாகவும் 26.2.2015 அன்று கேள்வி பதில் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில்...
தொழில் நிறுவனங்களுக்காக நில எடுப்பு பற்றி கருத்து தெரிவிப்பதற்கு கருணாநிதிக்கு எந்தவித அருகதையும் இல்லை. ஏனெனில், 'தமிழ்நாடு தொழிலியல் துறைக்கான நோக்கங்களுக்காக நிலத்தைக் கையகப்படுத்துதல் சட்டம்' என்ற சட்டமுன்வடிவு 1997 ஆம் ஆண்டு சட்டமன்றத்திலே அறிமுகம் செய்யப்பட்டு, அது 1999 ஆம் ஆண்டு சட்டமாக்கப்பட்டுள்ளது. இதனை சட்டமாக்கியது அன்றைய திமுக அரசு தான். இந்த சட்டம், நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் வழிமுறைகளைக் குறைத்து விரைவான முறையில் நிலத்தை கையகப்படுத்தும் பொருட்டு இயற்றப்பட்டதாகும்.
எனவே தான் அந்த சட்டமுன்வடிவில் நோக்க காரண விளக்க உரையில், 'இம்மாநிலத்தில் தொழில் நோக்கங்களுக்காக நிலங்களை விரைவான முறையில் கையகப்படுத்தும் பொருட்டு தேவையான சட்டம் இயற்றப்படுவதன் வாயிலாக இந்நேர்வில் தனி வகைமுறைகள் செய்ய வேண்டுமென அரசு முடிவு செய்துள்ளது. இச்சட்ட முன்வடிவு மேற்சொன்ன முடிவிற்கு செயல் வடிவம் கொடுக்க விழைகின்றது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சட்ட முன்வடிவை நிறைவேற்றக் கோரி அன்றைய வருவாய் துறை அமைச்சர் நாஞ்சில் கி.மனோகரன் சட்டமன்றத்தில் கூறியுள்ளதாவது:
"மைய அரசுத் சட்டத்தில் நிலம் தேவைப்படுகிறது என்று அறிக்கை வெளியிட்ட பின், நில உரிமையாளர்கள் அல்லது அந்த நிலத்தின் மீது அக்கறை கொண்டவர் இசைவு அல்லது மறுப்பு பெறப்படுகிறது. அதற்குப் பிறகு முறையான தொடர் நடவடிக்கை மேற்கொண்டு, சட்டத்தின் 6-வது பிரிவின் கீழ் இறுதி அறிக்கை வெளியிடப்பட வேண்டும். ஆனால் தற்போதைய சட்டத்தின் கீழ் நில உரிமையாளர் முதலிலேயே தொடர்பு கொள்ளப்பட்டு, அதன் பின்னர் அறிக்கை வெளியிடப்படுகிறது. நில உரிமையாளர் தெரிவிக்கும் கருத்துக்களைப் பரிசீலனை செய்தவுடன் ஆணை பிறப்பிக்க இயலும்.
இவ்வாறு அரசிதழில் வெளியிடப்பட்ட நாள் முதல் மேற்பட்ட நிலம் அரசின் வசம் அமையப் பெறும். அவ்வாறு அரசு ஆணையிட்டவாறு நிலத்தை ஒப்படைக்க நில உரிமையாளர் மறுத்தால், தேவைப்படும் அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்நிலத்தை மாவட்ட ஆட்சியர் தன் வசம் எடுத்துக்கொள்ளலாம். இதன் காரணமாக ஒரு சில மாதங்களுக்குள்ளாகவே நிலத்தைக் கையகப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது"
"...இந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்வது அல்லது நிலத்தில் நுழைவது போன்ற செயல்களிலே ஈடுபடும் அரசு அலுவலரை எவரேனும் தடுத்தால், அவருக்கு 6 மாதம் சிறைத் தண்டனையோ ஆயிரம் ரூபாய் அபராதமோ அல்லது இரண்டுமே விதிக்க இச்சட்டத்தில் வழி வகுக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள பொருள் குறித்து அரசோ, மாவட்ட ஆட்சியரோ தீர்மானிப்பதற்கு எதிராக முடிவெடுக்க உரிமையியல் நீதிமன்றங்களுக்கு அதிகார வரம்பில்லை. அதன் மீது தடைகள் வழங்க அந்த நீதிமன்றங்களால் இயலாது. இச்சட்டத்தில் செய்யப்பட்டுள்ள மற்றொரு புதிய வழிவகைகளில் இதுவும் ஒன்று...."
".... தொழிற்சாலைகளின் பயன்களுக்காகவே தேவைப்படும் நிலங்கள் இந்தச் சட்டத்தின் வகை முறைகளுக்குட்பட்டு மட்டுமே இனி கையகப்படுத்த இயலும்...." என்றெல்லாம் தெரிவித்தார்.
தொழிற்சாலைகளுக்காக, நடைமுறையில் இருந்த நில எடுப்புச் சட்டக் கூறுகளை எளிமைப்படுத்தி, ஒரு புதிய சட்டத்தை கொண்டு வந்த திமுகவும், அதன் தலைவர் கருணாநிதியும் தற்போதைய சட்ட திருத்தத்தை குறை கூறுவது வேடிக்கையாக உள்ளது.
2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான முந்தைய மைனாரிட்டி திமுக ஆட்சியில் தமிழ்நாடு தொழிலியல் துறைக்கான நோக்கங்களுக்காக நிலத்தைக் கையகப்படுத்துதல் சட்டத்தின் கீழ் தொழிலகங்களுக்காக சுமார் 11,400 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளன. முந்தைய மைனாரிட்டி திமுக ஆட்சியில் சாமானிய மக்களின் நிலம் எவ்வாறெல்லாம்
அபகரிக்கப்பட்டது என்பதும், அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் நிறுவனங்கள், வீட்டுமனை மேம்படுத்துவோர் ஆகியோர் விவசாயிகளிடமிருந்து விவசாய நிலங்களை தட்டி பறிப்பதற்கு எவ்வாறெல்லாம் துணைபுரிந்தனர் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். முந்தைய மைனாரிட்டி திமுக அரசின் ஆட்சிக் காலத்தில் 2006 முதல் 2011 வரை சுமார் 16,000 ஏக்கர் விளை நிலங்கள் வீட்டுமனைகளாகவும், தொழிற்சாலைகளுக்காகவும், இதர பயன்பாட்டிற்காகவும் மாற்றம் செய்துள்ளனர்.
முந்தைய மைனாரிட்டி திமுக அரசு நில எடுப்பு சட்ட விதிகள் எதையும் பின்பற்றாமலேயே விவசாயிகளிடமிருந்து நிலத்தை எடுத்துக் கொண்ட நிகழ்வுகளும் உண்டு. தாமிரபரணி- கருமேனியாறு- நம்பியாறு இணைப்புத் திட்டத்திற்கு எந்த சட்ட விதிமுறைகளையும் பின்பற்றாமல் முந்தைய மைனாரிட்டி திமுக அரசு நிலத்தை எடுத்துவிட்டது. இந்த திட்டத்தில் முதல் மற்றும் இரண்டாம் நிலைகளுக்கான 190 ஏக்கர் நிலங்களை சட்டப்படி கையகப்படுத்தி அதற்கான இழப்பீட்டுத் தொகையையும் வழங்கியது எனது தலைமையிலான அஇஅதிமுக அரசு தான்.
ஜனநாயகம் என்பது மிக அதிகமானவர்களுக்கு மிக அதிக நன்மையை பயக்கும் அமைப்பாகும். எனவே, பொதுநலத்திற்கென நிலத்தை கையகப்படுத்துவது ஜனநாயகத்தில் தவிர்க்க முடியாததாகும். அவ்வாறு நிலங்கள் உரிய அதிகார அமைப்பாலேயே கையகப்படுத்தப்படுகிறதா என்பதும் அவ்வாறு நிலங்கள் கையகப்படுத்தும் போது அதற்குரிய இழப்பீடு வழங்கப்பட்டு நிலத்தை இழந்தவர்களுக்கு மறு வாழ்வும், மறு குடியமர்வும் கிடைக்கிறதா என்பதும் நில எடுப்பின் காரணமாக பொதுநலன் காக்கப்படுகிறதா என்பதும் தான் கருத்தில் கொள்ளப்பட வேண்டியவையாகும்.
மசோதாவை ஆதரித்தது ஏன்?
இந்த அடிப்படையிலே தான் தற்போது மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட 'நிலம் கையகப்படுத்துவதில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் ஒளிவு மறைவின்மைக்கும் மறுவாழ்வு அளிப்பு மற்றும் மறு குடியமர்வுக்கான உரிமை' சட்டத்திற்கான திருத்தம்,
குறிப்பிட்ட சில நில எடுப்பு நிகழ்வுகளில் அத்தியாயம் II-ல் குறிப்பிடப்பட்டுள்ள சமூக தாக்கத்தை தீர்மானித்தல் மற்றும் பொதுநலன் மற்றும் IIIவது அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சிறப்பு கூறுகள் ஆகியவற்றிலிருந்து விலக்கு அளிப்பதற்கான அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்குவதாலும், தொழில் வளாக வழிக்கு தேவையான நில எடுப்பு, குறிப்பிடப்பட்ட இருப்புப் பாதை மற்றும் சாலையில் இருமருங்கும் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்குள் மட்டுமே எடுக்கப்படவேண்டும் என்றும், இந்த குறிப்பிடப்பட்ட திட்டங்களுக்கு குறைந்தபட்ச நிலமே எடுக்கப்பட வேண்டும் என்றும், பயிர் செய்யப்படாத நிலங்கள் ஆகியவற்றை அளவு செய்து அவற்றின் விவரங்களை தொகுத்து வைத்திருத்தல் வேண்டும் என்றும், நில எடுப்பால் பாதிக்கப்பட்ட விவசாய தொழிலாளர் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என்ற நிபந்தனைகளையெல்லாம் சேர்க்கப்பட்டிருப்பதாலும், தனியார் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு இந்த விதிமுறைகளின்படி நிலம் கையகப்படுத்த வழி வகை செய்தது விலக்கிக் கொள்ளப்பட்டதாலும், இந்த சட்ட திருத்த மசோதா பொது நலனுக்காகவே என்பதால் தான், இதனை அஇஅதிமுக மக்களவையில் ஆதரித்தது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டுக்கு ஆதரவு அளித்து நாடாளுமன்றத்தில் திமுகவை வாக்களிக்கச் செய்தவர் கருணாநிதி. தமிழக நலனுக்கு எதிரான உணவு பாதுகாப்புச் சட்டத்திற்கு ஆதரவு அளித்தவர் கருணாநிதி. தமிழகத்தின் நெற்களஞ்சியமான டெல்டா பகுதிகளை பாலைவனமாக்கும் 'மீத்தேன் எரிவாயு' திட்டத்திற்கு அனுமதி அளித்தவர் கருணாநிதி.
விவசாயிகள் பயன்படுத்தும் உரங்களின் விலை உயர்வுக்கு வழி வகுக்கும் ஊட்டச் சத்து அடிப்படையிலான உரமானியக் கொள்கைக்கு ஆதரவு அளித்தவர் கருணாநிதி. டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே மாதந்தோறும் உயர்த்திக் கொள்ளலாம் என்ற முந்தைய காங்கிரஸ் அரசின் கொள்கை முடிவுக்கு வழிவகுத்தவர் கருணாநிதி. பன் மாநில தண்ணீர் பிரச்சனையில் தமிழகத்தை வஞ்சித்தவர் கருணாநிதி.
எந்த பிரச்சனையிலும், சொந்த காரணங்களுக்காகவே, தன்னலம் ஒன்றையே கருதி முடிவெடுக்கும் கருணாநிதிக்கு மற்றவர்களும் அவ்வாறே முடிவெடுப்பார்கள் என்று தான் நினைக்கத் தோன்றும். தமிழகத்தின் நன்மைக்காக, தமிழக மக்களின் நன்மைக்காகவே, அல்லும் பகலும் அயராது பாடுபடும் அஇஅதிமுக, தமிழகத்தின் நன்மைக்காகவே நில எடுப்பு திருத்த மசோதாவை மக்களவையில் ஆதரித்தது என்பதை இப்போதாவது கருணாநிதி புரிந்துகொள்ளவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT