Published : 12 Mar 2015 09:58 AM
Last Updated : 12 Mar 2015 09:58 AM

மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதற்கு தடை: தமிழகத்தில் மார்ச் 15 முதல் அமல்

மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதற்கு தடை செய்தல் மற்றும் மறுவாழ்வுச் சட்டம் 2013 என்ற சட்டம் 15-ம் தேதியில் இருந்து அமலுக்கு வருவதாக தமிழக அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மைச் செயலாளர் கே.பணீந்திர ரெட்டி வெளியிட்ட அரசிதழில்:

"மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதற்கு தடை செய்தல் மற்றும் மறுவாழ்வுச் சட்டம் 2013 என்ற சட்டம் 15-ம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது என்று தமிழக அரசு அறிவிக்கிறது.

அதன்படி வரும் 15-ம் தேதியில் இருந்து எந்தவொரு தனிநபரோ, உள்ளாட்சி அமைப்போ, முகமையோ தங்களின் ஊழியரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, மனிதக் கழிவுத் தொட்டியை (செப்டிக் டாங்க்) கழுவும் ஆபத்தான பணிக்கு பயன்படுத்தக் கூடாது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு குறித்து கேட்டபோது பணீந்திர ரெட்டி கூறும்போது, "மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றிய நடவடிக்கைகள் குறித்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்த சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ளாட்சி அமைப்புகளில் மனிதக் கழிவுகளை அகற்றும் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. அவற்றை வைத்தே கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. தனி நபர்களும் தங்கள் வீடுகளில் உள்ள செப்டிக் டாங்கில் இனி மனிதர்களை இறக்கிவிட்டு சுத்தப்படுத்தும் பணியை மேற்கொள்ளக் கூடாது. இதற்காக தனியார் நிறுவனங்களிடம் இயந்திரங்கள் உள்ளன. அவற்றை வாங்கி பயன்படுத்தலாம்.

மேலும் ஒவ்வொரு வீடுகளிலும் செப்டிக் டாங்க், அரசால் நிர்ணயிக்கப்பட்ட முறையில் கட்டப்பட்டுள்ளதா என்பதை சோதனை செய்வதற்காக சில மாதங்களுக்கு முன்பு உத்தரவிடப்பட்டுள்ளது. அப்படி கட்டப்பட்டால்தான் அதில் விஷ வாயு தேங்காமல், இயற்கையாக வெளியேறிவிடும். முறைப்படி அமைக்காவிட்டால், விஷ வாயு உருவாகி, அதனால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க வாய்ப்புள்ளது. எனவே முறைப்படி செப்டிக் டாங்க் கட்டாமல் விட்டிருந்தால் அவர்களுக்கு நோட்டீசு பிறப்பிக்கப்படும். பின்னர் அதை முறைப்படி கட்டுவதற்கான உத்தரவிடப்படும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x