Published : 16 Mar 2015 10:21 AM
Last Updated : 16 Mar 2015 10:21 AM
திருவாரூர் மக்களின் சார்பில் முன் வைக்கப்படும் ரயில்வே தொடர் பான கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர் திருவாரூர் மக்கள். மீட்டர் கேஜ் ரயில் பாதையாக இருந்தபோது ஏராளமான ரயில் கள் இயக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது போதிய ரயில் வசதிகள் இல்லாததால் திருவாரூர் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியிலிருந்து திருவாரூர் வழி யாக சென்னைக்கு விரைவு ரயில் இயக்கப்படுமென அறிவிக்கப்பட்டு, கால அட்டவணையும் வெளியிடப்பட்டது. ஆனால், அந்த ரயில் தொடங்கப்பட்டபோது திருவாரூர்- மயிலாடுதுறை அகல ரயில்பாதை பணிகள் நடைபெற்று வந்ததால் தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக தற்காலிகமாக இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், திருவாரூர் - மயிலாடுதுறை அகல ரயில் பாதைகள் முடிவுற்று பல ஆண்டு களாகியும், அந்த ரயில் திருவாரூர் வழியாக இயக்கப்படவில்லை.
இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ரயில் மற்றும் பேருந்து பயணிகள் சங்கத் தலைவர் ஆர்.தட்சிணாமூர்த்தி, பொதுச் செயலாளர் பி.பாஸ்கரன் ஆகியோர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
மன்னார்குடியிலிருந்து இயக்கப்படும் செம்மொழி விரைவு ரயில், சென்னை விரைவு ரயில், திருப்பதி விரைவு ரயில், மானா மதுரை பயணிகள் ரயில் உள்ளிட்ட ரயில்கள் மன்னார்குடியிலிருந்து நீடாமங்கலம் ரயில் நிலையத் துக்கு வந்து, என்ஜினைக் கழற்றி மாட்டுவதால் குறைந்தபட்சம் 10 நிமிடங்களுக்கு மேலாக தஞ்சாவூர்-திருவாரூர் நெடுஞ் சாலையில் நீடாமங்கலம் ரயில்வே கேட் மூடப்படுகிறது.
இதனால், இந்த சாலையில் போக்குவரத்துக்கு தினந் தோறும் பெரும் இடையூறு ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக இன்ஜினை மாற்றாமலேயே அனைத்து ரயில்களையும் நீடாமங்கலத்திலிருந்து 24 கிலோ மீட்டர் தொலைவே உள்ள திருவாரூர் வரை நீட்டித்தால், ரயில்வே துறைக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும்.
திருவாரூரிலிருந்து சென்னைக்கு பகல் நேர விரைவு ரயில் இயக்க வேண்டும். திருச்செந்தூர்- சென்னை விரைவு ரயில், புதுச்சேரி- கன்னியாகுமரி ரயில் ஆகியவற்றை திருவாரூர் வழியாக இயக்க வேண்டும். இதன் மூலம் திருவாரூர் பகுதியைச் சேர்ந்த மக்கள் பெரிதும் பயன்பெறுவர்.
திருவாரூரிலிருந்து திருச்சிக்கு காலை 8.15 மணிக்குதான் முதல் ரயில் இயக்கப்படுகிறது. அதேபோன்று திருச்சியிலிருந்து மாலை 4.30 மணிக்குப் பிறகு திருவாரூர், நாகைக்கு ரயில்கள் இல்லாத நிலை உள்ளது. இந்த நிலையைப் போக்க தஞ்சாவூரிலிருந்து திருச்சிக்கு காலை 5.40 மணிக்கும், 6.40 மணிக்கும் டெமு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களை திருவாரூரிலிருந்து திருச்சி வரை இயக்க வேண்டும்.
அதேபோன்று இரவு 7.30 மணிக்கு திருச்சியிலிருந்து திருவாரூர் வரையில் பயணிகள் ரயிலையும் இயக்க வேண்டும். திருநெல்வேலி- திருச்சி இன்டர் சிட்டி விரைவு ரயிலை திருவாரூர் வரை நீட்டிக்க வேண்டும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT